ஒவ்வொரு ஆகஸ்ட் மாதம் வருகிற போதும், நமக்கு நமது விடுதலை போர் நினைவுக்கு வருகிறது. ஆகஸ்ட் மாதத்தினுடைய 9ஆம் நாள், வரலாற்று ஏடுகளில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததொரு நாள். விடுதலைப் போராட்டத்தில் வெள்ளையனே வெளியேறு இயக்கம் துவங்கிய நாள். 1942 ஆகஸ்ட் 9அன்று துவங்கி, 1947 ஆகஸ்ட் 14 நள்ளிரவு வரை நீடித்த மாபெரும் இயக்கம் அது. தேசத்தினுடைய அத்தனை மக்களும் விடுதலைக்காக குரல் கொடுத்த, அதற்கான உணர்ச்சி பெற்ற காலம் அது. சாதியோ, மொழியோ, மதமோ, இனமோ - எந்த வேறுபாடும் இன்றி நடைபெற்ற மகத்தான விடுதலைப் போராட்டத்தினுடைய பலனை நாம் இன்றைக்கும் சுவைத்துக் கொண்டிருக்கிறோம்.
‘இந்தியா காப்போம்’
ஆனால் இப்போது, இந்த ஆகஸ்ட் 9 வெள்ளையனே வெளியேறு இயக்க நாள், இந்தியத் தொழிற்சங்க இயக்கத்தால், தேசப் பாதுகாப்பு நாளாக, ‘SAVE INDIA DAY’ ‘இந்தியாவைப் பாதுகாப்போம்’ என்கிற தினமாக நாடு முழுக்க அனுசரிக்கப்படுகிறது. பாரதிய மஸ்தூர் சங்கம் தவிர உள்ள அனைத்து மத்திய தொழிற்சங்கங்களும், பல்வேறு தொழில்வாரி சம்மேளனங்கள், இன்சூரன்ஸ், வங்கி, மத்திய அரசு ஊழியர்கள், மாநில அரசு ஊழியர்கள், தொலைத்தொடர்புத் துறை ஊழியர்கள், பாதுகாப்புத் துறை ஊழியர்கள் என அத்தனை துறைவாரி சம்மேளனங்களும் ஒன்றுபட்டு இந்தப் போராட்டத்தை நடத்துகிறார்கள். கடந்த பல ஆண்டுகளாக இத்தகைய ஒன்றுபட்ட போராட்டங்கள் நடந்து வந்தாலும், இப்போதைய சூழல் மிக முக்கியத்துவம் வாய்ந்தது.
கண்ணீர் கடலில் மீன் பிடிப்போர்
சில வாரங்களுக்கு முன்னதாக நிதிஆயோக் அமைப்பினுடைய தலைமை அலுவலர் அமிதாப் காந்த், டைம்ஸ் ஆப் இந்தியாவில் ஒரு கட்டுரை எழுதினார். அதிலே அவர் பட்டவர்த்தனமாக ஒரு விசயத்தைச் சொன்னார். “இதுதான் பொன்னான நேரம். இந்த நேரத்தில்தான் அத்துணை காரியங்களும், அதாவது அரசு சொல்லக்கூடிய சீர்திருத்தங்கள் என்று அழைக்கப்படுகிற அந்தத் தாக்குதல்களை முழுதும் தொடுக்க வேண்டிய நேரம்” என்றார். நாடே பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டை அதிலிருந்து மீளச் செய்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்று யோசிக்க வேண்டியவர்கள், அதை யோசிக்காமல் அதையே வாய்ப்பாக பயன்படுத்தினார்கள். அவைதான் கொள்கை அறிவிப்புகளாக தொடர்ச்சியாக வெளிவந்தன. இப்போதும் வருகின்றன.
மீள வழி சொல்லாத ஆள்வோர்
இந்தப் பெருந்தொற்றிலிருந்து மீள்வதற்கோ, பெருந்தொற்றினால் வேலையிழந்துள்ள 14 கோடி பேருக்கு வேலை கொடுப்பதற்கோ, பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்ட சிறுகுறு தொழில்களை மீட்பதற்கோ, ஒட்டு மொத்தமாக கிராமப்புறங்களில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கோ, கோடிக்கணக்கான மக்கள் இடம் பெயர்ந்து, நம்முடைய வரலாற்றினுடைய சோகச் சின்னமாக மீண்டும் நிகழ்ந்த மாபெரும் இடம் பெயர்தல் என்கிற அவலத்திற்கு விடை காண்பதற்கோ பிரதமரும், நிதியமைச்சரும் வரிசையாக வெளியிட்ட அறிவிப்புகளில் என்ன இருந்தது? ஒரு புறம் சிறு தொழில்களுக்கெல்லாம் கடன் கொடுக்கப்படும் என்கிற அறிவிப்பு. சிறு தொழில் நடத்துபவர்கள் கோருவதெல்லாம் கடன் மட்டுமல்ல. அதை விட முக்கியமாக எங்களுடைய பொருட்களையெல்லாம் வாங்குவதற்குக் கூட சந்தை இல்லையே என்பது தான். அதற்கு என்ன தீர்வு. ஒருபுறம் தொழிலாளர்கள் போராடிப் பெற்ற உரிமைகளையும், அவர்களுக்காக உருவாக்கப்பட்ட சட்டங்களையும் அழிப்பதற்குள்ள முயற்சி. 44 தொழிலாளர் சட்டங்களை நான்கு தொகுப்புகளாக (Code) மாற்றுகிறார்கள். அரசாங்கம் அறிவித்ததில், ஒரு தொகுப்பு ஏற்கனவே நிறைவேற்றப்பட்டு இரண்டாம் தொகுப்பு குறித்து நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கை இப்போது வந்திருக்கிறது. வந்திருக்கக் கூடிய அறிக்கை என்ன சொல்கிறது? அதற்கு ஊடகங்கள் தந்த தலைப்பு என்ன? ஓராண்டு பணி செய்தால் அவர்களுக்கெல்லாம் பணிக்கொடை வழங்கப்படும் என்று. ஆனால் சமூகப் பாதுகாப்புக் கான அந்த சட்டத் தொகுப்பு இருக்கிறதே, அது உண்மையில் செய்திருப்பதென்ன?
ஏற்கனவே மிகப் பெரும் சமூகப் பாதுகாப்பு திட்டங்கள் என நடைமுறையில் உள்ள தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிச் சட்டமாக இருந்தாலும் சரி, இல்லை நம்முடைய ஏழை, எளிய பீடித் தொழிலாளர்கள் போராட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்ட அவர்களுக்கான கல்விக்கும் சுகாதாரத்திற்கும் செஸ் வசூலிப்பதன் மூலம் செய்யப்பட்டு வந்த உதவிகள், குழந்தைகளுக்கான கல்வி உதவித் தொகையும், அவர்களது குடும்பத்திற்கான மருத்துவ உதவியும் வழங்கப்படுகிற திட்டங்கள், சுரங்கங்களிலே பணியாற்றுபவர்களுக்கான திட்டங்கள், முறைசாரா தொழிலாளர்களுக்கென்று கடந்த காலங்களிலே செஸ் வசூலிப்பதன் மூலம் உருவாக்கப்பட்டிருக்கக் கூடிய திட்டங்களானாலும் சரி... இப்படி அனைத்தையும் ஒரே அடியாக மாய்த்துப் போகச் செய்திருக்கக் கூடிய ஒரு தொகுப்புச் சட்டம் அது. வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் உள்ள திருத்தங்கள் பாதகமானவை. இப்படிப் பட்ட ஒன்றை ஓராண்டு காலத்தில் பணியாற்றுபவர்களுக்கு பணிக்கொடை வழங்குவதற்கென்று பரிந்துரைக்கப் பட்டிருக்கிறதென்று முதல் பக்கச் செய்தியாகப் போடுவதுதான் இந்திய ஊடக நிலைமை. மோடி அரசின் சட்டத் திருத்தங்கள் தொடுக்கிற தாக்குதல்களுக்கு இது ஒரு உதாரணம்.
தேசம் விற்பனைக்கு அல்ல
12 மாதங்களாயிற்று கூலி கிடைத்து என்று போராடுகிற 50000க்கும் மேற்பட்ட பி.எஸ்.என்.எல் காண்ட்ராக்ட் தொழிலாளர்கள் தங்களுடைய வேலையையும், வேலை செய்ததற்கான கூலியையும் கிடைப்பதற்காக போராடிக் கொண்டிருக்கக் கூடிய, ஆர்ப்பாட்டம் நடத்தக் கூடிய, அந்த ஆர்ப்பாட்டங்களுக்கும் ஒன்று சேர முடியாமல் தவித்துக் கொண்டிருக்கக் கூடிய காலம் இது.
இந்தக் காலத்தில்தான் மேற்கண்ட சட்டத்திருத்தங்களுக்கு மேலாக, இந்த நாட்டினுடைய மிகப் பெரும் சொத்துக்களாக, கோவில்களாகக் கருதப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குவதற்கான நடவடிக்கை. ரயில்வே பாதுகாப்புத் துறை இன்சூரன்ஸ், வங்கித்துறை, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் விமானக் கம்பெனி, துறைமுகங்கள் என ஒரு துறையையும் விட்டு வைப்பதில்லை என்கிற கொடூரமான தேச விற்பனைத் திட்டம் அது. இந்த தேசம் விற்பனைக்கல்ல என்று சொல்லியே தொழிலாளர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த தேசத்தைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு தொழிலாளர் மீது விழுந்திருக்கிறது. தொழிற்சங்க இயக்கமும் தொழிலாளர்களும், இந்த நாட்டினுடைய விவசாயிகளும், இந்த நாட்டினுடைய சிறு தொழில் உடைமையாளர்களும் எல்லோருமாகச் சேர்ந்து இந்தப் போராட்டத்தை நடத்தி, இந்த தேசத்தை அழிக்கக்கூடிய, தேசத்தை விற்பனை செய்யக் கூடிய, தேசச் சொத்துக்களை தனியார் முதலாளிகளுக்கும், வெளிநாட்டு முதலாளிகளுக்கும் ஒப்படைக்கக் கூடிய அரசின் நடவடிக்கைக்கு எதிராக களம் காண வேண்டும்.
இந்த உணர்வுக்கு தரப்பட்டுள்ள உரு வம்தான் கடந்த ஜூலை மாதம் 3ஆம் தேதி மத்திய தொழிற்சங்கங்கள் கூட்டாக அறிவித்து நடத்திய இயக்கம். அதே நாளில் அதற்கு ஒரு நாள் முன்னதாகவும், ஒரு நாள் பின்னதாக வும் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட நம்முடைய நாட்டினுடைய நிலக்கரி சுரங்கத் தொழிலா ளர்கள், நிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு தாரை வார்க்கக் கூடிய கொள்கைக்கு எதிராக 3 நாட்கள் வேலைநிறுத்தம் செய்தனர். அதனு டைய தொடர்ச்சியாக அவர்கள் மீண்டும் ஆகஸ்ட் 18ஆம் தேதி வேலைநிறுத்தம் செய்கி றார்கள். இந்த பெருந்தொற்று காலத்திலே மிகப் பெரிய பாதுகாப்புப் பணியாக முன்களப் போராளிகள் என்று அறிவிக்கப்பட்ட திட்டத் தொழிலாளர்கள், ஆஷா திட்ட ஊழியர்கள், சத்து ணவு ஊழியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள் போன்றிருக்கக் கூடிய கோடிக்கணக்கான உழைப்பாளி மக்கள், மத்திய அரசினுடைய திட்டங்களில் பணியாற்றக் கூடிய, தொழிலாளி என்கிற அந்தஸ்துகூட மறுக்கப்பட்ட இவர்கள் வருகிற 7, 8 தேதிகளில் வேலைநிறுத்தமும், 9ஆம் தேதி மத்திய தொழிற்சங்கங்கள் நடத்துகிற போராட்டத்தில் பங்கேற்பதாகவும் அறிவித்திருக்கிறார்கள். இவ்வாறு ஒவ்வொரு துறையாக, ஒவ்வொரு பகுதியாக போராட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.
சொல் ஒன்று செயல் வேறு
பாதுகாப்புத் துறையும் இதில் அடங்கும். இந்த தேசத்தினுடைய பாதுகாப்பு பற்றி ஓயா மல் பேசக்கூடிய அமைச்சர்களும், பிரதமரும் இருக்கக்கூடிய நாடு இது. ஆனால் அந்த பாது காப்புத் துறைக்குத் தேவையான கருவிகள் உற்பத்தி செய்யக் கூடிய 41 ஆயுதத் தளவாடத் தொழிற்சாலைகளை நிறுவனங்களாக்க முடிவு செய்துள்ளனர். இப்போது அரசுத் துறைகளு டைய பொறுப்பில், அரசினுடைய நேரடி பொ றுப்பில் இருக்கக் கூடியவற்றை கம்பெனிகளாக மாற்றி, அந்த கம்பெனிகளை தனியாருக்குத் தாரை வார்ப்பது, எப்படி பி.எஸ்.என்.எல் சிதைக் கப்படுகிறதோ, அதே பாதையில், இந்த 41 நிறு வனங்களையும் கொண்டு செல்ல அரசு முடிவு செய்ததை எதிர்த்து பாதுகாப்புத்துறை ஊழி யர்கள் 4ஆம் தேதி வேலைநிறுத்த நோட்டீஸ் வழங்கியிருக்கிறார்கள். செப்டம்பரில் காலவரை யற்ற வேலைநிறுத்தத்திற்குச் செல்வதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
வெல்லுமா தொழிலாளர் குரல்?
இப்போது ஒரு கேள்வி எழுகிறது. தொழிற் சங்கங்கள் ஒன்றுபட்டு செயல்படுவதன் முயற்சி கள் வெற்றி பெறுமா? அரசு நிறுவனங்களைப் பாதுகாக்க முடியுமா? அரசு இந்த நாட்டினுடைய நலன்களைப் பாதுகாக்கிற நடவடிக்கைகளை மேற்கொள்ள நிர்ப்பந்திக்க முடியுமா என்று கேட்கிறார்கள்.
நாம் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். இந்த தேசத்தில் உள்ள தொழிலாளர்கள் போரா டிப் போராடி உருவாக்கியவைதான் இருக்கக் கூடிய நம்முடைய தொழிலாளர் சட்டங்கள். அது நம்முடைய போராட்டத்தின் மூலமாகத் தான் உருவாக்கப்பட்டது. அது பறிபோவதையும், போராட்டத்தின் மூலமாகத்தான் தடுக்க முடியும். தடுத்திருக்கிறோம். 1991ஆம் ஆண்டு சட்டத் திருத்தங்களை துவக்கிய காலத்தில், அன்றை க்கு தொழிலாளர் துறை அமைச்சர், ‘Down sizing’ என்று துவக்கினார்கள், தொழிலாளர்க ளுடைய எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும் என்று பேச ஆரம்பித்தார்கள். அதற்குப் பிறகு ‘Rightsizing’ என்றார்கள். அதா வது சரியான எண்ணிக்கைக்குக் கொண்டு வருவது என்று பேசினார்கள். அதிலிருந்து துவங்கி தொடர்ச்சியாக இதை எதிர்த்து நடத்திய போராட்டமே பல துறைகளில் இதன் வேகத்தை மட்டுப்படுத்தியது. அரசுத் துறைகளில் வேலை நியமனத் தடைகளை உடைத்து பணி நியம னங்கள் நடந்தேறவும் வழி வகுத்தது. இன்னும் முன்னேற வேண்டிய துறைகள், நிறுவனங்கள் இருக்கலாம்.
பொதுத்துறை தனியார்மயம் என்று துவக் கப்பட்ட போது ஆட்சியாளர்கள் 1991க்குப் பிறகு வரிசையாக இந்த நடவடிக்கைகள் மேற்கொள் ளப்பட்ட போது எதிர்த்து நடத்திய போராட்டங் கள்தான் பல துறைகளில் அதைத் தடுத்து நிறுத்தி இருக்கிறது.
சாட்சியங்கள் கண் முன்னே
தமிழகத்தில் நமக்கு நல்ல உதாரணங்கள் இருக்கின்றன. சென்னையில் இருக்கக் கூடிய ஹிந்துஸ்தான் டெலி பிரிண்டர்ஸை தனியா ருக்கு விற்று விட்டார்கள். மத்திய அமைச்சராக இருந்த சுக்ராமினுடைய கம்பெனிக்கு அது விற்கப்பட்டுவிட்டது. ஆனால், இன்றைக்கும் நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேசனையோ (NLC), பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸோ (BHEL), சேலம் எஃகு ஆலையோ இன்றைக்கும் பொ துத்துறை நிறுவனங்களாக நீடிக்கின்றன என்று சொன்னால் அதனுடைய பெருமை அங்கி ருக்கக் கூடிய தொழிலாளர்களும், அதிகாரிக ளும் ஒன்றுபட்டு நடத்திய போராட்டத்தையே சேரும். இப்படிப்பட்ட போராட்டங்களின் மூல மாகத் தான் ஒடிசாவினுடைய நால்கோ, ஸ்டீல் அதாரிட்டினுடைய எஃகு ஆலைகள்.... அரசு விற்க வேண்டுமென்று அறிவித்திருக்கக்கூடிய பட்டியலில் இப்போது இருக்கக்கூடிய இந்த நிறுவனங்கள் முழுவதிலும் இந்தத் தொழிலா ளர்களின் போராட்டங்கள் மூலமாகத் தான் இது காறும் தனியார் மய அபாயம் தடுத்து நிறுத்தப் பட்டிருக்கிறது.
எல்.ஐ.சி இன்றைக்கும் பாதுகாக்கப் பட்டிருக்கிறது என்று சொன்னால், எல்.ஐ.சி ஊழி யர்களும், எல்.ஐ.சி அதிகாரிகளும் இந்த நாட்டி னுடைய மக்களும், சட்டமன்ற உறுப்பினர்களில் பலரும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் ஒன்றுபட்டு நடத்திய போராட்டங்களும், நிர்ப்பந் தங்களும் காரணமாகத்தான் என்பதை அறி வோம். வங்கிகள்.... ஆம் இன்றைக்கு வங்கி தனி யார்மயம் என்பது அஜெண்டாவில் வேகமாகக் கொண்டு வரப்பட்டிருக்கிறது. வங்கிகள் இணை க்கப்பட்டிருக்கிறது என்பது உண்மைதான். ஆனால் அதற்கு எதிராக வங்கி ஊழியர்களும், அதிகாரிகளும் ஒன்றுபட்டுப் போராடிக் கொண்டி ருக்கிறார்கள். இந்த போராட்டங்கள் இல்லா விட்டால் எப்போதோ அரசு வங்கிகளில் அரசின் பங்குகள் 33% க்கு குறைக்கப்பட்டிருக்கும். இந்தப் போராட்டம்தான் நாட்டைப் பாதுகாப்ப தற்கு உள்ள வழிமுறை என்பதே தவிர வேறு வழியில்லை.
ஒரு மாற்றுக் கொள்கைக்கான போராட்டம் என்கிற முறையில் இந்தப் போராட்டத்தினுடைய வடிவங்களை கொண்டு செல்ல வேண்டியி ருக்கிறது. அந்த ஒன்றுபட்ட நிகழ்வுகளின் மூல மாக அரசுக்கு நிர்ப்பந்தம் செலுத்த வேண்டி யிருக்கிறது. பல அரசியல் கட்சிகளை இந்த நிர்ப் பந்தத்திற்குக் கொண்டு வர வேண்டியிருக்கிறது. மாற்றத்தை உருவாக்குகிற சக்தி மக்கள் கருத்துக்கு உள்ளது. அன்றைக்கு மின்சாரத்துறையில் தனியார் மயமாக்குவதற்குரிய சட்ட திட்டங்கள் துவக்கப் பட்ட 2003ஆம் ஆண்டு அதை ஆதரத்தவர் கள் எல்லாம் இன்றைக்கு அதை எதிர்த்து நிற்கக் கூடிய காட்சியை நாம் தமிழகத்திலேயே பார்க்கிறோம். ஆகவே, தொழிலாளியினுடைய, ஊழியர்களுடைய, பொதுமக்களுடைய நிர்ப்பந் தத்தின் மூலமாகத்தான் இந்த நடவடிக்கை யைத் தடுக்க முடியுமே தவிர இதற்கு வேறு வழியில்லை. ஆட்சியில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் சரி அவர்களுக்கு மக்களுடைய நிர்ப்பந்தம், மக்கள் மூலமாக நிர்ப்பந்தம் இருப்பதை உறுதி செய்ய வேண்டியுள்ளது. அதற்கு முன்னுதாரணமாக, போராட்டங்களில் முன்னின்று அதற்கு வழிவகுத்துக் கொடுக்க வேண்டிய கடமை இந்த நாட்டினுடைய தொழிற்சங்க இயக்கத்திற்கு இருக்கிறது.
தொகுப்பு: நா.சுரேஷ்குமார்