tamilnadu

img

தமிழகத்தின் ரயில் தேவை அதிகரிப்பு... புதிய ரயில்களுக்கான எதிர்பார்ப்பு கைகூடுமா?

நாகர்கோவில்:
இந்தியாவில் உள்ள 29 மாநிலங்களில் மக்கள்தொகையில் 6-ஆவது இடத்திலும் பரப்பளவில் 10-ஆவது இடத்திலும் உள்ள பெரிய மாநிலமான தமிழகத்தில் தற்போது மொத்தம் 3846 கி.மீ தூரத்துக்கு இரயில் இருப்புப்பாதை வழித்தடங்கள் உள்ளன. தமிழகம் பொருளாதாரத்தில்மாநிலங்களின் அடிப்படையில் இரண்டாவது இடத்தில் உள்ளது. 

1990களிலிருந்தே தமிழகத்துக்கு ஒவ்வொரு ரயில்பட்ஜெட்டிலும் கணிசமான அளவில் புதிய ரயில்கள் அறிவிப்புவந்து கொண்டே இருந்தது. தற்போதைய தகவல்தொழில்நுட்பதுறை பல்வேறு துறைகளின் பொருளாதார வளர்ச்சி காரணமாக தமிழக பயணிகள் பல்வேறு அலுவல் பணிகள், தனிப்பட்ட பயணங்கள் என பல்வேறு காரணங்களுக்காக அதிக அளவில் பயணம் செய்கின்றனர். இவ்வாறு பயணம் செய்யும் நபர்களின் முதல்தேர்வாக ரயில் பயணங்களே உள்ளன.  சென்னையிலிருந்து தமிழ
கத்தில் உள்ள பல்வேறு இடங்களுக்கு இயக்கப்படும் ரயில்களில் உள்ள முன்பதிவு நெருக்கடியை வைத்தே இதை தெரிந்து கொள்ளலாம்.

இதற்கு ஏற்ப புதிய ரயில்கள் இயக்க வேண்டும் என்று தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ரயில் பயணிகளும் கோரிக்கை வைக்கின்றனர். 2000-ஆம்ஆண்டுகளிலிருந்து தமிழகத்தின் பல்வேறுபகுதிகள் மீட்டர் கேஜ் பாதையிலிருந்து அகலபாதையாக பணிகள் நிறைவுபெற்று ஒவ்வொன்றாக பயணிகள் பயன்பாட்டிற்கு வந்தது. இவ்வாறு வந்ததன் காரணமாக இந்த பகுதி பயணிகளின் வசதிக்காக முதலில் சென்னையிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு நேரடி ரயில்கள் இயக்கப்பட்டன. 2004-ஆம் ஆண்டு முதல் 2014—ம் ஆண்டு வரை தமிழக ரயில்வேத்துறையில் அதிக வளர்ச்சி பெற்ற வருடங்கள் என்று கூறலாம். தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசியல் ரீதியாக ரயில்வே அமைச்சருக்கு அழுத்தம் கொடுத்ததின் காரணமாக பல ரயில்கள் தமிழகத்துக்கு இயக்கப்பட்டன. இதில் குறிப்பாக நாகர்கோவில் - பெங்களூர் ரயிலை கூறலாம். இந்த ரயில் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களின் அழுத்தத்தின் காரணமாக நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டு ரயில்கால அட்டவணையிலும் வந்துவிட்டது. ஆனால் இந்த ரயில் இயக்க தேவையான சில வசதிகள் நாகர்கோவில் ரயில் நிலையத்தில் இல்லாமல் இருந்தது. பின்னர்ரயில்வேத்துறை இந்த ரயில் இயக்க
தேவையான வசதிகளை ஆறுமாத காலத்துக்குள் ஏற்படுத்தி இந்த ரயிலைஇயக்கியது. இந்த ரயில் அறிவிக்கப்படவில்லையென்றால்  வசதிகள் வந்திருக்காது. 
இருவழிப்பாதை 
தமிழகத்துக்கு இவ்வாறு புதிய ரயில்கள் இயக்கப்பட்டதன் காரணமாக ஒருவழிப்பாதையாக இருந்த பாதையில் குறிப்பாக சென்னையிலிருந்து தென்மாவட்டத்துக்கு உள்ள ரயில்பாதையில் இடநெருக்கடி ஏற்பட்டது. இந்த பாதையைஇருவழிப்பாதையாக மாற்றம் செய்தால் மட்டுமே இனி புதிய ரயில்கள் இயக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டது. இதனால் தமிழக மக்கள் இருவழிப்பாதையாக மாற்றம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். முதலில் மதுரை – திண்டுக்கல் பாதை இருவழிப்பாதையாக மாற்றம் செய்யப்பட்டது. பின்னர் தாம்பரம் - செங்கல்பட்டு என படிப்படியாக சென்னை முதல் மதுரை வரை இருவழிப்பாதையாக மாற்றம் செய்யப்பட்டது. தற்போது மதுரை முதல் கன்னியாகுமரி வரை இருவழிப்பாதை பணிகள்நடைபெற்று வருகின்றது. இவ்வாறு இருவழிப்பாதை மாற்றம் செய்யப்பட்டதற்கு மிகமிக முக்கிய காரணம் அதிக ரயில்கள்ஒருவழிப்பாதையில் இயக்கி இதற்கு மேல் ரயில்கள் இயக்க முடியாது என்ற அளவிற்கு நெருக்கடி நிலை ஏற்பட்டதே ஆகும்.

5 ஆண்டுகளாக புதிய ரயில் இல்லை
தற்போது கடந்த ஐந்து ஆண்டுகளாகதமிழகத்துக்கு புதிய ரயில்கள் இயக்கம்என்பதே இல்லாத நிலை உள்ளது. இவ்வாறு புதிய ரயில்கள் அறிவிக்காமல் இருப்பதால் தற்போது உள்ள இருப்புப்பாதையின் கொள்ளளவை அதிகரிக்கவில்லை. இவ்வாறு அதிகரிக்காமல் இருந்தால் புதிதாக இருவழிப்பாதை, மூன்று வழிப்பாதை என புதிய திட்டங்கள்ஏதும் அமைக்கத் தேவை இல்லை. இதனால் ரயில்வேத்துறை புதிய ரயில்களை இயக்க தொடர்ந்து மறுத்து வருகின்றது. இதைப்போல் புதிய ரயில்கள் இயக்கினால் புதிய முனையவசதிகள் அல்லது முனைய வசதிகளை விரிவாக்கம் செய்தல் போன்று திட்டங்களை செயல்படுத்த வேண்டும். தற்போது புதிய ரயில்கள் இயக்காத காரணத்தால் இந்த முனையவளர்ச்சி திட்டங்கள் ஏதும் தேவைப்படவில்லை. இதனால் புதிய முனையவசதிகளையும் ஏற்படுத்த ரயில்வேத்துறைஎந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

பெருகிவரும் மக்கள்தொகை, பொதுமக்களின் பயணங்கள் என்பதை கணக்கில்கொண்டு ஒவ்வொரு ஆண்டும் குறைந்தபட்சம் ஐந்து தினசரி ரயிலாவது தமிழகத்துக்கு அறிவித்து இயக்க வேண்டும். ஆனால் ரயில்வேத்துறை ஒரு தினசரி ரயில் கூட இயக்க மறுத்து வருகிறது. இதிலும்குறிப்பாக மீட்டர்கேஜ் பாதைகள் அகலப்பாதையாக மாற்றம் செய்தபிறகும் அங்கு இயக்கப்பட்ட மீட்டர் கேஜ் ரயில்களை அகலப்பாதையில் இயக்க வேண்டி கோரிக்கை வைத்தும் போராட்டங்கள் நடத்தியும் ரயில்வேத்துறை இந்த ரயில்களை கூட இயக்காமல் காலம்தாழ்த்தி வருகிறது. இதனால் தற்போது இயங்கிகொண்டிருக்கும் பழைய வழித்தட ரயில்களில் பயணிகளின் நெருக்கடி அதிகரிக்கின்றது. இவ்வாறு நெருக்கடியை செயற்கையாக அதிகரித்து பயணிகளிடமிருந்து பல்வேறு பெயர்களில் சுவேதா ரயில், தட்கல் கட்டண ரயில், சிறப்பு கட்டண ரயில், பிரிமியம் ரயில், பிரிமியம் தட்கல்என பகல்கொள்ளை போன்று கட்டணத்தை மறைமுகமாக வசூலித்து வருகின்றது.

ரயில்கள் அறிவித்தால் தான் வளர்ச்சி திட்டங்கள் வரும்
தமிழகத்துக்கு புதிய ரயில்கள் அறிவித்து இயக்கினால்தான் புதிய வளர்ச்சித்திட்டங்கள் இனி நிறைவேறும். இதற்கு முன்பு இவ்வாறுதான் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இதன்படி சென்னையிலிருந்து வடஇந்திய நகரங்களுக்கு இயக்கப்படும் ரயில்களை கன்னியாகுமரி மற்றும் இராமேஸ்வரத்துக்கு நீட்டிப்புச் செய்ய வேண்டும். இவ்வாறு நீட்டிப்புச் செய்தால் மட்டுமே ஒருவழிப்பாதையாக உள்ளதஞ்சாவூர் - விழுப்புரம் பாதை தற்போதுஉள்ளதை காட்டிலும் அதிக நெருக்கடி பாதையாக மாறும். இவ்வாறு நெருக்கடியான பாதையாக மாறினால் மட்டுமே இருவழிப்பாதையாக மாற்றம் செய்ய ரயில்வேத்துறை முயற்சிகள் மேற்கொள்ளும். இதைப்போல் விழுப்புரம் - செங்கல்பட்டு பாதையை மூன்று வழித்தடப்பாதையாக மாற்றவும் முயற்சிகள் அதாவது தொடக்கநிலை பொறியியல் மற்றும் போக்குவரத்துஆய்வு செய்ய ரயில்வேத்துறை முயற்சிகள் மேற்கொள்ளும். புதிய ரயில்கள் இயக்காத வரை இனி தமிழகத்துக்கு எந்தஒரு புதிய திட்டத்தையும் ரயில்வேத்துறை அறிவிக்காது.

ரேட் ஆப் ரிட்டன்
எந்த ஒரு புதிய திட்டத்தை எடுத்துக் கொண்டாலும் அந்த திட்டத்தைப்பற்றி விரிவாக சர்வே செய்யப்பட்டு அந்த சர்வேயில்ரேட் ஆப் ரிட்டன் கணக்கிடுவார்கள். ரேட்ஆப் ரிட்டன் என்றால் இந்த திட்டத்துக்கு எத்தனை கோடிகள் முதலீடு செய்யப்படும். இவ்வாறு முதலீடு செய்தால் இந்ததிட்டத்தின் மூலமாக எவ்வளவு வருமானம் அரசுக்கு திருப்பி கிடைக்கும் என்பதையே ரேட் ஆப் ரிட்டன் என்று குறிப்பிடுவார்கள். இந்த திட்டத்தின் மூலமாக நடைபெறும் சரக்கு போக்குவரத்து, துறைமுக இணைப்பு, திட்டத்தின்தேவை, திட்டத்தின் காரணங்கள், அமைந்துள்ள பெரிய தொழிற்சாலைகள்,நன்மைகள், புதிய வேலைவாய்ப்புகள் என்பன பல்வேறு விதமான காரணங்களை பற்றி அலசி ஆராயப்பட்டு ரேட்ஆப் ரிட்டன் கணக்கீடு செய்யப்படும். அதிகமான ரயில்கள் இந்த வழித்தடங்களில் இயக்கினால் இந்த ரேட்ஆப் ரிட்டன் கணக்கிடும் போது பயணிகள் வருவாய் அதிலும் குறிப்பாக குளிர்சாதன பெட்டிகளில் பயணம் செய்யும் பயணிகள் வருவாய் அதிகமாகவே வரும். இவ்வாறுஅதிகமாக வந்தால் மட்டுமே ரயில்வேத்துறை இந்த பாதையை இருவழிப்பாதையாக மாற்றம் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளும்.

தமிழகத்தில் இயக்கப்பட வேண்டிய ரயில்கள் 
1.மதுரை-பெங்களூர் பகல்நேர இண்டர்சிட்டி ரயில்
2. மதுரை – கோவை பகல்நேர இண்டர்சிட்டி ரயில்    -  4 சேவைகள் தினசரி
3.திருச்சி-பெங்களூர் பகல்நேர இண்டர்சிட்டி ரயில்
4.இராமேஸ்வரம்-மைசூர் தினசரி இரவு நேர ரயில்
5.இராமேஸ்வரம்-கோவை தினசரி இரவு நேர ரயில்
6.இராமேஸ்வரம்-மங்களுர் தினசரி இரவு நேர ரயில்
7.கன்னியாகுமரி – சென்னை குளிர்சாதன தினசரி   -    இரவு நேர ரயில்
8. கன்னியாகுமரி – புதுதில்லி தினசரி ரயில்
9. கன்னியாகுமரி - ஹவுரா தினசரி ரயில்
10. இராமேஸ்வரம் - புதுதில்லி தினசரி ரயில்
11. இராமேஸ்வரம் - ஹவுரா தினசரி ரயில்
12. நாகர்கோவில் - மும்பை தினசரி ரயில்
13. இராமேஸ்வரம் - மும்பை தினசரி ரயில்
14. கோவை - பெங்களூர் தினசரி இரவு நேர ரயில்
15. கன்னியாகுமரி – ஐதராபாத் தினசரி ரயில்
16. இராமேஸ்வரம் - ஐதராபாத் தினசரி ரயில்
இவ்வாறு பட்டியல் நீண்டு கொண்டே செல்கின்றது.

- எட்வர்டு ஜெனி
கன்னியாகுமரி மாவட்ட ரயில் உபயோகிப்பாளர் சங்கம் 

;