tamilnadu

img

நீர்நிலைகள், குளங்களை மண்ணைப் போட்டு மூடாதீர்!

நாகர்கோவில்:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் தக்கலையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: 

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் நெல்லை மாவட்ட பொருளாளர் அசோக் மூன்று தினங்களுக்கு முன் நெல்லையில் சாதிய வெறியர்களால் படுகொலை செய்யப்பட்டார். ஏற்கனவே அவர் வாழும் பகுதியில் தனக்கு ஆபத்து உள்ளது என காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார். அந்த புகாரின் மீது காவல் துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்திருந்தால் அந்த கோரசம்பவம் தடுக்கப்பட்டிருக்கும். சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது காவல் துறை உடனடியாக நடவடிக்கை எடுப்பதோடு, காவல் துறையின் அலட்சியத்தால், இந்த கோரசம்பவம் நடந்துள்ளதால் அவரது குடும்பத்திற்கு அரசு இழப்பீடு வழங்குவதுடன், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். 

மும்மொழி திட்டம் எந்த நாட்டிலும் இல்லாதது
மத்திய அரசு இரண்டாவது முறையாக ஆட்சி பொறுப்பேற்ற உடனே வெளியிட்ட புதிய  கல்விக்கொள்கை வரைவு அறிக்கையில் மும்மொழி திட்டத்தை அறிவித்தது. இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி மூன்றாவது மொழியாக, கட்டாய பாடமாக  இருக்கும் என்பதுதான் புதிய கல்விக்கொள்கையில் உள்ள ஷரத்து. தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்த பிறகு இந்தி கட்டாய பாடமாக இருக்காது என  மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால் இன்னும் சூட்சுமமாக, மும்மொழி திட்டம் இருக்கும்; இந்தி கட்டாயப் பாடமாக இருக்காது எனக்கூறி மறைமுகமாக இந்தியை திணிக்க முயல்கிறார்கள். உலக அளவில் பல நாடுகளின் அனுபவம் என்பது தங்கள் தாய்மொழியோடு இன்னொரு மொழியை கற்றால் போதும். மூன்றாவது மொழி திட்டம்  எந்த நாட்டிலும் இல்லை. விருப்பமுள்ளவர்கள் எத்தனை மொழி வேண்டுமானாலும் படிக்கலாம். ஆனால் மூன்றாவது மொழி கட்டாயம் என்பது உலகில் எங்கும் இல்லை. மும்மொழி திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும். 
ரயில்வே ஊழியர்கள்  தங்களுடன் பணிபுரியும் அலுவலர்களிடம் பேச வேண்டுமென்றால் இந்தியில் தான் பேச வேண்டும்; மாநில மொழிகளில் பேசுவதை தவிர்க்க வேண்டும் என ரயில்வே துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு வந்தவுடன் வாபஸ் வாங்குகிறார்கள். இப்படி ஒருமொழி, ஒரு கலாச்சாரம் என்ற கொள்கையை அமலாக்க மத்திய அரசு முயற்சிக்கிறது. இந்த முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும். வேற்றுமையில் ஒற்றுமை என்ற கோட்பாட்டின்படி செயல்பட்டு கொண்டிருக்கும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி மொழித்திணிப்பு திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்.  

வசூல் வேட்டைக்கு முடிவு கட்டுக!
கல்வியாண்டு துவங்கியுள்ள நிலையில், தனியார் பள்ளிகளில், தனியார் சுயநிதி கல்லூரிகளில் கல்வி கட்டணம் எவ்வளவு என்பதை மாநில அரசு தீர்மானித்துள்ளது. தனியார் கல்வி நிறுவனங்கள் அரசு தீர்மானித்த கட்டணத்துக்கு மேல் வசூல் செய்வதை கண்காணிக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது. அரசு தீர்மானித்த கட்டணத்தை வசூலிப்பதை உத்தரவாதப்படுத்த வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது. 

குமரி மாவட்டத்தில் 4 வழிச்சாலையில் குளங்கள், நீர்நிலைகளில் மண்ணை போட்டு தூர்ப்பதற்கு பதிலாக பாலங்கள் கட்டி நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும். 4 வழிச்சாலை பணிக்காக குளங்களையோ, நீர்நிலைகளையோ மண் போட்டு அழிக்க கூடாது.  தேர்தலுக்குப் பிறகு ஆளுங்கட்சி தலைமையில் ஏற்பட்ட முரண்பாடுகளால் பல துறைகள் சீர்குலைந்துள்ளன. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாத்து,  கூலிக்கு கொலை செய்யும் கும்பல்களை தடுத்து நிறுத்த வேண்டிய, நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பு மாநில அரசுக்கு உள்ளது. சட்ட ஒழுங்கை பாதுகாக்க மாநில அரசு உரிய துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

இந்த சந்திப்பின் போது  மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.நூர்முகமது, மாவட்ட செயலாளர் ஆர்.செல்லசுவாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஏ.வி.பெல்லார்மின், விஜயமோகனன், எஸ்.சி.ஸ்டாலின் தாஸ், வட்டார செயலாளர் சுஜா ஜாஸ்மின் ஆகியோர் உடனிருந்தனர்.  

;