tamilnadu

பழையாறு துறைமுகத்தில் தரமற்ற பணியால் பழுதான தரைதளம்  

சீர்காழி: சீர்காழி அருகே பழுதடைந்துள்ள பழையாறு மீன் பிடி துறைமுகத்தின் தரைதளத்தை மேம்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  நாகை மாவட்டம் சீர்காழி அருகே பழையாறு மீன்பிடி துறைமுகம் உள்ளது. மாவட்டத்திலேயே இரண்டாவது பெரிய துறைமுகமாக உள்ள இங்கு தினந்தோறும் சுமார் 5 ஆயிரம் மீனவர்கள் படகுகள் மூலம் கடலுக்கு சென்று மீன் பிடித்து வருகின்றனர். இந்த துறைமுகம் கடந்த 8 ஆண்டுக்கு முன்பு உலக வங்கி நிதி உதவியுடன் மேம்படுத்தும் பணி நடைபெற்றது.  படகு அணையும் தளம் தரைத் தளம் மேம்படுத்துதல், கழிவு நீர் எளிதில் வெளியேற்றும் வசதி உள்ளிட்ட வசதிகளும் மேம்படுத்தப்பட்டன. ஆனால் தரம் குறைந்த நிலையிலேயே பணி நடைபெற்றதாக புகார்கள் எழுந்தன. பழையாறு துறைமுக வளாகத்தின் தரைத் தளம் முறையாக மேம்படுத்தப்படாததால் தார் மற்றும் சிமெண்ட் கான்கிரீட் தரைப் பகுதி முழுவதும் பழுதடைந்து ஆழமான பள்ளங்களாக மாறி கிடக்கின்றது. இதனால் மழை நீர் தேங்கி வடியாமல் உள்ளது. சிதம்பரம் மற்றும் சீர்காழி பகுதியிலிருந்து கொள்ளிடம், புதுப்பட்டினம், தர்க்காஸ் வழியாக பேருந்துகள், மீன் மற்றும் கருவாடுகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் மிகுந்த சிரமத்துடன் துறைமுகத்துக்குள் வந்து செல்கின்றன. மீன்வளத் துறை அலுவலகம் முன்பாகவே தண்ணீர் தேங்கி சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. எனவே பழையாறு துறைமுகத்தின் தரை தளத்தை மேம்படுத்த மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பழையாறு கிராம மக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

;