tamilnadu

img

நெப்பத்தூர் கூலித் தொழிலாளி சீனிவாசனின் கொலைக்கு நீதி கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை....

மயிலாடுதுறை:
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகேயுள்ள நெப்பத்தூரில் உள்ள ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவரின் ஆர்கேபி என்ற செங்கல் சூளையில்கொலை செய்யப்பட்ட கூலித் தொழிலாளி சீனிவாசனின் கொலைக்கு நீதி கேட்டு போராட்ட ஒருங்கிணைப்பு குழுவினர் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தை கட்சி, மக்கள் அதிகாரம், திராவிடர் விடுதலை கழகம், தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும்17-க்கும் மேற்பட்ட முற்போக்கு இயக்கங்கள் கொண்ட போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் பல்லாயிரக் கணக்கானோர் பங்கேற்றனர். 

கொலை வழக்காகப் பதிவு செய்யக்கோரியும், கொலைக்கு நீதிக் கேட்டும், வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றக் கோரியும், தொடர் கொலைகள் நடந்து வரும் ஆர்.கே.பி செங்கல் சூளையைமூட வலியுறுத்தியும் நடைபெற்ற போராட்டத்திற்கு முன்னதாக நீதிமன்ற சாலையிலிருந்து ஆயிரக்கணக்கானோர் பேரணியாக புறப்பட்டு கச்சேரிசாலை, மணிக்கூண்டு, பட்டமங்கலத்தெரு, தரங்கம்பாடி சாலை வழியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தடைந்து முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.வழியெங்கும் பல்வேறு தடைகளை காவல்துறை ஏற்படுத்தியும் அதனை முறியடித்து போராட்டத்தை தொடர்ந்து நடத்தினர். போராட்ட ஒருங்கிணைப்புக்கு தலைவரும், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளருமான பி.சீனிவாசன் தலைமைவகித்தார். தீண்டாமை ஒழிப்பு முன்னணி பொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜ், மாநிலச் செயலாளர் சின்னை.பாண்டியன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முதன்மை செயலாளர் பாவரசு, மாவட்டச் செயலாளர் பா.ரவிச்சந்திரன், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி.ஸ்டாலின், எஸ்.துரைராஜ், சி.வி.ஆர்.ஜீவானந்தம், டி.கணேசன், எஸ்.சிங்காரவேலன், ப.மாரியப்பன், சீர்காழி இளங்கோவன் மற்றும் ஒன்றியச் செயலாளர் சி.மேகநாதன், மாவட்டக்குழு உறுப்பினர்கள், வாலிபர், மாணவர், மாதர் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

காலையிலிருந்து போராட்டம் நடைபெற்றும் மாவட்ட ஆட்சியரும், காவல்கண்காணிப்பாளரும் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு வராத நிலையில், ‘ஏழைக் கூலித் தொழிலாளியின் கொலைக்கு நீதிக் கேட்டு கடந்த 9 நாட்களாக போராட்டம் நடைபெற்றும் அதைக் கண்டுகொள்ளாமல் கொலையாளிகளுக்கு சாதகமாக செயல்படும்ஆட்சியரும், எஸ்.பியும் மயிலாடுதுறையை விட்டு வெளியேற வேண்டும்’ எனபோராட்டக்குழு முழக்கமிட்டதை யடுத்து போராட்டக் குழுவின் தலைவர்களை மாவட்ட ஆட்சியர் லலிதா அலுவலகத்திற்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில், சிபிசிஐடிக்கு உத்தரவிடுவதாகவும், உயிரிழந்த சீனிவாசனின் மனைவிக்கு கல்வித் தகுதி அடிப்படையில் அரசு வேலையும், அதிகப்பட்ச நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும், செங்கல் சூளையை நிரந்தரமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் மாவட்ட ஆட்சியர் உறுதியளித்தார். இதனையடுத்து தற்காலிகமாக போராட்டம் கைவிடப்பட்டது.

;