tamilnadu

img

அந்த முகங்களில் துளியும் அச்சம் இல்லை... பேராசிரியர் விஜய் பிரசாத்

2019 இறுதியில் பன்னாட்டு நிதி நிறுவனம் (ஐஎம்எப்), உலகப் பொருளாதார நிலைமை குறித்து வழக்கமான தனது அறிக்கையை வெளியிட்டது. இந்த அறிக்கை, உலக அளவில் பொருளாதார நிலை குறித்து மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அறிக்கையாக கருதப்பட்டு வருகிறது. 2019 நிறைவில் உலக பொருளாதார வளர்ச்சி விகிதம் வெறும் 3 சதவீதம் என்ற அளவில் ஸ்தம்பித்து நிற்கிறது என அறிக்கையில்  விவரிக்கப்பட்டிருக்கிறது. அறிக்கையை தயாரித்துள்ள ஐஎம்எப் அமைப்பின் முதன்மையான பொருளாதார வல்லுநர்கள், 10 ஆண்டுகளுக்கு முன்பு 2008ல் உலகப் பொருளாதார நெருக்கடி துவங்கிய காலத்திலிருந்து இது மிக மிக பலவீனமான வளர்ச்சிவிகிதம் என்று ஒப்புக்  கொண்டிருக்கிறார்கள். அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தகப் போர் உள்ளிட்ட பல காரணங்களை அவர்கள் முன் வைக்கிறார்கள்.
மூலதனச் செலவு நிறுத்தம்
ஆனால் அதே நேரத்தில் பிரதான காரணமாக, உலகம் முழுவதும் ஏற்பட்டிருக்கக்கூடிய பொருளாதார வீழ்ச்சியை சுட்டிக்காட்டியுள்ளனர். இன்னும் குறிப்பாக, பெரும் தொழில் நிறுவனங்கள், நீண்டகால அடிப்படையிலான மூலதனச் செலவுகளை மிகுந்த எச்சரிக்கையுடன் நிறுத்தி வைத்திருக்கின்றன; அல்லது குறைத்துள்ளன; இதன் விளைவாக உலகம் முழுவதுமே இயந்திரங்கள் கொள்முதலோ அல்லது உற்பத்தி சாதனங்கள் கொள்முதலோ பெரிய அளவிற்கு நடைபெறவில்லை; மிகப்பெரும் வீழ்ச்சி பதிவாகியிருக்கிறது என ஐஎம்எப் பொருளாதார வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள்.
இதன் பொருள் என்ன?
தொழில் நிறுவனங்கள் தங்களது தொழிலை விரிவுபடுத்துவதற்கான மூலதனச் செலவை செய்வதற்கு தயாராக இல்லை; புதிய தொழில்நுட்பங்களை வாங்குவதற்கு தயாராக இல்லை. மாறாக, இந்த நிறுவனங்கள், வெளியில் கொடுத்து தங்களது உற்பத்தியை நடத்திக் கொள்ளலாம் என்ற நிலைக்கு வந்து சேர்ந்திருக்கின்றன. இதன் விளைவாக வேலைவாய்ப்பு  என்பது மிகக் கடுமையான முறையில் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறது. இதன் தொடர் விளைவாக ஒரு நிரந்தர மான ‘குறைந்த கூலி கட்டமைப்பு’ உருவாக்கப்பட்டு வருகிறது. வேறு வார்த்தைகளில் சொல்லப்போனால் பெரு முதலாளித்துவ பெரு நிறுவனங்கள் சமூகத்தை ஒரு பிணக்காடாக மாற்றி வருகின்றன; ஏற்கெனவே வேலை தேடி வெவ்வேறு இடங்களுக்கு பிரிந்து சென்று சிதைந்து நிற்கிற கோடானு கோடி தொழிலாளர்களின் குடும்பங்களையும், சமூகங்களையும் இன்னும் கடுமையான நெருக்கடிக்குள் தள்ளுகின்றன; இது, மக்கள் சமூகங்களை பின்னோக்கி பழைமைவாதத்திற்கு இழுத்துச் செல்பவர்களின் கைகளில் கொண்டு போய் சேர்க்கிறது; ஒட்டுமொத்த சமூகத்தின் நலனும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது.
‘கடன்’ என்ற பெயரில்...
மறுபுறத்தில் பொருளாதார நெருக்கடி மேலும் மேலும் முற்றி ஒட்டுமொத்தமாக மிகப்பெரிய அளவிற்கு வீழ்வதை தடுக்கும் பொருட்டு, உலகம் முழுவதுமே பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகள் வட்டி விகிதங்களை நிரந்தரமாக குறைத்திருக்கின்றன. இதன் மூலம் பெரும் கார்ப்பரேட் உலகிற்கு மக்களின் சேமிப்புப் பணம், அரசாங்கத்தின் பணம் மிகக்குறைந்த வட்டிக்கு தாராளமாக கிடைக்கச் செய்யப்பட்டிருக்கிறது. இந்த கார்ப்பரேட் நிறுவனங்கள், தற்சமயம் எந்தவிதமான உற்பத்தித் துறையிலும் மூலதனச் செலவை  மேற்கொள்ளாமல் நிறுத்தி வைத்திருக்கிற போதிலும், பல டிரில்லியன் டாலர் தொகையை வங்கிகளிடமிருந்து மூலதனத்திற்கான கடன் என்ற பெயரில் சூறையாடிக் கொண்டிருக்கின்றன. இதைத்தான் மாமேதை காரல்மார்க்ஸ், “உற்பத்தியே செய்யாமல் கடன் என்ற பெயரில் பல்வேறு வடிவங்களில் செல்வ ஆதாரங்களை மூலதனமாக மாற்றிக் குவித்து சுரண்டிக் கொழுக்கிற முதலாளித்துவம்” என்று குறிப்பிட்டார். உலகம் முழுவதும் பங்குச் சந்தைகளின் மதிப்பு இன்றைய நிலவரப்படி சுமார் 90 டிரில்லியன் டாலர் ஆகும். இது ஒட்டுமொத்த உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் ஒப்பிடும்போது அதிகமாகும். ஒவ்வொரு நாட்டிற்குள்ளும் இப்படி கார்ப்பரேட் நிறுவனங்களின் கைகளில், உற்பத்தியில் ஈடுபடுத்தப்படாத பெரும் மூலதனம் குவிந்திருக்கிறது. வேறு நாடுகளிலிருந்து எல்லை தாண்டி வந்த மூலதனமல்ல இது; மாறாக அந்தந்த நாட்டிற்குள் மிக அதீதமாக குவிக்கப்பட்ட செல்வ வளமே இது. இத்துடன் அந்நிய நேரடி முதலீடு என்ற பெயரில் வந்த மூலதனத்தையும் சேர்த்துக் கணக்கிட்டால் அது அளவில்லாத செல்வக்குவிப்பாக இருக்கிறது என்பதை உணர முடியும்.
சரிவும் குவிப்பும்                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                       கடந்த 50 ஆண்டுகாலமாக மேலே குறிப்பிட்ட இரண்டு நடவடிக்கைகள் தொடர்ந்து மனித சமூகத்திற்கு எதிராக நடந்து கொண்டிருக்கின்றன. ஒன்று, பெருமுத லாளித்துவ நிறுவனங்கள், தொழில் உற்பத்தித் துறையில் ஈடுபடுத்துகிற மூலதனம் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவது; இரண்டு, நிதி மூலதனத்தின் குவிப்பும் முக்கியத்துவமும் தொடர்ந்து அதிகரித்து வருவது. ஒட்டுமொத்தத்தில் லாப விகிதங்கள் மூலமான மூலதனக் குவிப்பு வீழ்ந்துள்ளது; எனினும் கடன் விகிதங்கள் மூலமான மூலதனக் குவிப்பு அதிகரித்துள்ளது. இந்தப் பிரச்சனையை தீர்ப்பதற்கான எந்தவிதமான உண்மையான முயற்சியையும் முதலாளித்துவ கட்டமைப்பு மேற்கொள்ளவில்லை. ஏனென்றால் முதலாளித்துவ கட்டமைப்பிற்குள் இதற்கு தீர்வு இல்லை. எனினும் சில முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால் அவற்றால், பொருளாதார நெருக்கடிகளின் அடுத்தடுத்த தொடர் விளைவுகளை கட்டுப்படுத்தக்கூட முடியவில்லை. 1. நவீன தாராளமயத்தின் முக்கியமான கொள்கை யாக, வரி எனும் கட்டமைப்பிலிருந்து முதலாளித்துவ வர்க்கத்தை விடுவிப்பது இருக்கிறது; அது முதலாளித்துவ வர்க்கத்தை வரிகளிலிருந்து விடுவித்திருக்கிறது என்பது மட்டுமல்ல, நிதி மூலதனம் மற்றும் அந்நிய நேரடி முதலீடு ஆகியவற்றிற்கான கட்டுப்பாடுகளை தகர்த்திருக்கிறது; அரசின் சேவைகள் அனைத்தையும் தனியார்மயமாக்கியிருக்கிறது; சமூகத்தின் செல்வ வளங்களை நுகர்பொருளாக மாற்றியிருக்கிறது. 2. மூன்றாம் உலக நாடுகளும் சோசலிச முகாமும் பலவீனப்படுத்தப்பட்ட நிலையில் உலகம் முழுவதும் கோடானுகோடி தொழிலாளர்கள் தங்களது கூலி மிகக்கடுமையாக குறைக்கப்படுகிற அபாயத்தை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. நிரந்தரப் பணிகள் எல்லாம் ஒப்பந்தப் பணிகளாக மாற்றப்பட்டன; கூலி நிர்ணயம் உள்ளிட்ட பிரச்சனைகளில் அரசின் ஒழுங்காற்று விதிகள் அனைத்தும் சிதைக்கப்பட்டன. தொழிலாளர் சந்தை ‘சீர்திருத்தங்கள்’ அமலுக்கு கொண்டுவரப்பட்டன. 3. உலகம் முழுவதும் வட்டிவிகிதங்கள் குறைக்கப் பட்டதன் விளைவாக கடன்கள் தாராளமாக கிடைப்பது உறுதி செய்யப்பட்டது. சர்வதேச நிதி ஆராய்ச்சி கல்வி நிறுவனத்தின் விவரங்களின்படி இன்றைய நிலையில் உலக கடன் என்பது 250 டிரில்லியன் டாலராக இருக்கிறது. இது உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட 230 சதவீதம் அதிகமாகும். அரசாங்கங்களின் கடன்கள் சுமார் 70 டிரில்லியன் டாலர் என்ற அளவில் உள்ளன. ஒட்டு மொத்த உலகின் கடனில் சரிபாதிக்கும் அதிகமாக தனியார் பெரும் நிறுவனங்களின் கைகளுக்கு சென்று சேர்ந்திருக் கிறது. கடந்த 50 ஆண்டு காலமாக இந்த பெரும் நிறுவனங்களே மிக மிக அதிக அளவில், மிக மிக வேகமான முறையில், மிக மிக விரிவான முறையில் கடன்கள் என்ற பெயரில் செல்வ வளங்களை வாரிச் சுருட்டியிருக்கின்றன. இந்தக் கடன்கள் அடிப்படையில் ‘வளர்ச்சி’ அளவீடு செய்யப்படுகிறது; ஆனால் மலைபோல் குவிந்திருக்கிற இந்தக் கடன்கள், உலகின் தலைவிதியை வேறுவிதமாக எழுதிக் கொண்டிருக்கின்றன.                 
சிக்கன நடவடிக்கை என்ற பெயரில்...
எனவே இப்போது நீடித்துக் கொண்டிருப்பது நீண்ட காலத்திற்கு இந்த உலகை கடுமையான துயரத்திற்குள் தள்ளியிருக்கக்கூடிய மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியாகும். இதிலிருந்து மீள்வது என்ற பெயரில்தான் உலகம் முழுவதும் அரசாங்கங்கள் சிக்கன நடவடிக்கை என்ற பெயரிலான கொள்கையை தீவிரமாக அமலாக்குகின்றன. இந்த சிக்கன நடவடிக்கைகள் மற்றும் நீண்டகால பொருளாதார நெருக்கடி ஆகிய இரண்டின் விளைவாகத்தான், செல்வ வளங்களை குவிப்பதற்காக அமெரிக்கா, சீனாவின் மீது வர்த்தகப் போரை நடத்தி வருகிறது. எனவே அமெரிக்கா - சீனா இடையிலான வர்த்தகப் போர் என்பது அவர்களுக்கு இடையிலான ஒரு தனித்த நிகழ்வு அல்ல. இந்த இரண்டு பெரும் பொருளாதார சக்திகளுக்கு இடையே ஒரு வேளை ஏதேனும் உடன்பாடு ஏற்பட்டாலும் கூட ஏற்கெனவே ஏற்படுத்தப்பட்டிருக்கிற கடுமையான விளைவுகளில் பெரிய மாற்றம் எதுவும் உருவாகாது. இத்தகைய பின்னணியில்தான், இந்த உண்மை நிலையில் இருந்து உலகின் கவனத்தை திசைதிருப்பவும் தனது நலன்களை பாதுகாத்துக் கொள்ளவும் அமெரிக்கா, மேற்காசியாவின் துயரத்தை மேலும் தீவிரப்படுத்தும் வேளையில் இறங்கியிருக்கிறது. ஈரான் ராணுவத் தளபதி படுகொலை சம்பவமும், இதன் ஒரு பகுதியே.
அலைஅலையாக எழும் தொழிலாளர் வர்க்கம்
இந்த நிலையில் உலகம் முழுவதும் சிக்கன நடவடிக்கைகள் என்ற பெயரிலான முதலாளித்துவ அரசுகளின் தாக்குதலுக்கு எதிராக அலை அலையாக தொழிலாளர் வர்க்க இயக்கங்கள் எழுந்து நிற்கின்றன. ஜனவரி 8 அகில இந்திய பொது வேலைநிறுத்தம் அதைத்தான் உணர்த்துகிறது. லத்தீன் அமெரிக்காவில் பல்வேறு நாடுகளில் எதேச்சதிகார அரசுகளின் பொருளாதார தாக்குதல்களுக்கு எதிராக மக்கள் ஒன்றுபட்டு நிற்கிற போராட்டங்கள் நடந்த வண்ணம் உள்ளன. ஆனால் இந்தப் போராட்டங்களை, எதிர்ப்புக்  குரலை ஒடுக்குவதற்கு அரசாங்கங்கள் கடும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. ஈரானை மிரட்டுகிற டொனால்டு டிரம்ப், ஆஸ்திரேலியாவில் நாடே எரிந்துகொண்டிருக்கிற போதும் மவுனமாக வேடிக்கைப் பார்க்கும் பிரதமர் ஸ்காட்  மோரிசன், பல்கலைக்கழகங்களுக்குள் கூலிப்படையினர் புகுந்து மாணவர்களை தாக்குகிற போதும் வாய்மூடிக் கொண்டிருக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி என முதலாளித்துவ ஆட்சியாளர்கள் எதேச்சதிகாரத்தை கையில் ஏந்தியபடி நின்றுகொண்டிருக்கிறார்கள். இந்த  மனிதத்தன்மையற்ற தாக்குதல்களுக்கு எதிராக சமூக ஊடகங்கள் கொதித்து எழுகின்றன. உலகெங்கிலும் இந்த அநீதிகளுக்கு எதிராக இளைய தலைமுறையினரின் கரங்கள் இணைகின்றன. அவர்களது முஷ்டிகள் விண் ணோக்கி உயர்ந்து முழக்கமிடுகின்றன. உலககெங்கிலும் எல்லாப் போராட்டங்களிலும் இளைஞர்களின் முகங்களே. அந்த முகங்களில் துளியும் அச்சம் இல்லை. கவிஞர் வில்லியம் வேர்ட்ஸ்வொர்த் பிரெஞ்சுப் புரட்சியின்போது எழுதினார்: “இளமையாக இருப்பது சொர்க்கத்தைப் போன்றது; முடிவில் (புரட்சியின் முடிவில்) நாம் அளவில்லாத மகிழ்ச்சியைத் தவிர வேறெதையும் பெறப்போவதில்லை! - தமிழில்: எஸ்.பி.ராஜேந்திரன்

;