tamilnadu

img

தேசிய மருத்துவ ஆணையமும் சிதைபடும் சுகாதாரமும் - டாக்டர் எஸ்.காசி

தேசிய மருத்துவ ஆணைய சட்டம் நடைமுறைக்கு வருகிறது. இதனால் 1956 முதல், தன்னாட்சி நிறுவனமாக இயங்கி வந்த இந்திய மருத்துவக் கவுன்சில் நிரந்தரமாகக் கலைக்கப்பட்டுவிட்டது. மாறாக முழுக்க முழுக்க மத்திய அரசின் கட்டுப்பாட்டில், அதன் கைப்பாவையாக இயங்குகிற தேசிய மருத்துவ ஆணையம் விரைவில் அமைக்கப்படவுள்ளது. கடந்த ஐந்தாண்டுகளில் மோடி தலைமையிலான ஆட்சியில், ஒரு சட்டம் இயற்றப்படும் முன்பே அதன் உள்ளடக்கங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுவிடும். உதாரணமாக ‘தேசிய மருத்துவ ஆணையம் ‘நீட்’ மற்றும் ‘நெக்ஸ்ட்’தேர்வுகளை நடத்தும்’ என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் ‘நீட்’தேர்வை கடந்த 3 வருடங்களாக கட்டாயப்படுத்தி நடத்திவருகிறது மேலும் தற்போது பரிந்துரைக்கப்படுகிற ‘தேசிய கல்விக் கொள்கையின், மருத்துவம் சார்ந்த பல்வேறு பிற்போக்குத் தனமான விசயங்களை இந்த ஆணையம் செயல்படுத்த உள்ளது. ‘மருத்துவக் கல்வி மற்றும் மருத்துவ சேவைகளின் தரத்தை மேம்படுத்துவதே தேசிய மருத்துவ ஆணையத்தின் நோக்கம்’ என்று சொல்லப்பட்டாலும், மருத்துவக் கல்வி மற்றும் மருத்துவ சேவைகள் குறித்த விசயங்களில், மாநில அரசுக்கு உள்ள அதிகாரங்களை அபகரிப்பதும் ‘‘தடையற்ற தனியார் மயத்தை புகுத்துவதும், பணம் படைத்த – நகர்ப்புற, மேல்தட்டு மாணவர்களுக்கு மட்டுமே மருத்துவராகும் வாய்ப்பை அளிப்பதும்’’ இதன் நோக்கமாகும்.

ஜனநாயக விரோத/கூட்டாட்சிக்கு எதிரான ஆணையம்

 25பேரை உறுப்பினராகக் கொண்ட தே.ம.ஆணையத்தில், பெரும்பான்மை மத்திய அரசின் நியமன உறுப்பினர்களே. எந்த உறுப்பினரும் நேரடியாக டாக்டர்களால் தேர்ந்தெடுக்கப்பட மாட்டார்கள். ஒரு மாநிலத்திற்கு ஒரு நியமன உறுப்பினர் வீதம் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து தேசிய மருத்துவ ஆணையத்தின் அங்கமான ‘மருத்துவ ஆலோசனைக்குழு’ விற்கு நியமிக்கப்படுவார்கள். மாநில அளவிலான மருத்துவ கவுன்சிலில் இருந்து ஒரு நபர் நியமிக்கப்படுவார். இந்த ஆலோசனைக்குழுவிற்கு எந்த அதிகாரமும் கிடையாது. இந்த மருத்துவ ஆலோசனைக் குழுவிலிருந்து ‘சுழற்சி முறையில்’ 6 பேர் தே.ம.ஆணைய உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். தமிழ்நாடு போன்ற பெரிய, மருத்துவக் கல்லூரிகள் அதிகமுள்ள மாநிலங்களுக்குக் கூட 10 முதல் 12 வருடங்களுக்கு ஒருமுறைதான் இந்த ஆணையத்தின் உறுப்பினராக வாய்ப்பு கிடைக்கும். எனவே மாநிலங்கள் தம் தேவைகள் குறித்தோ, பிரச்சனைகள் குறித்தோ தே.ம.ஆணையத்தில் விவாதிக்க இயலாது. இதை விட ‘அதிக பிரதிநிதித்துவம் கொண்ட ஜி.எஸ்.டி. கவுன்சிலிலேயே மாநில உரிமைகள்’ எந்த அளவிற்கு மதிக்கப்படுகிறது, என்பதைப் பார்த்தால், தே.ம.ஆணையத்தில் மாநிலங்களின் கையறு நிலையை எளிதாக புரிந்து கொள்ள இயலும்.

    தே.ம.ஆணையத்தில் நியமன உறுப்பினர்களைக் கொண்ட 4 வாரியங்கள் செயல்படும். இதில் ஒரு வாரியம், ‘’மருத்துவக் கல்வியின் தரம் மற்றும் மதிப்பீடு (செய்யும்) வாரியமாகும்’’. தனியார் “ரேட்டிங்” நிறுவனங்களைக்கொண்டு அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் ஆய்வு மேற்கொள்ளும். அதில் ‘குறைபாடுகள்’ கண்டறியப்பட்டால், கோடிக்கணக்கில் அபராதம் விதிக்கப்படும். இதனால் 24 அரசு மருத்துவக் கல்லூரிகளைக் கொண்ட தமிழ்நாடு மற்ற ,மாநிலங்களை விட பெருந்தொகையை அபராதமாக கட்டவேண்டிய கட்டாயம் வரலாம். நாளடைவில் மாநில அரசுகள் மருத்துவக் கல்லூரிகளைத் துவங்க தயக்கம் காட்டுவார்கள்.

இரு தேர்வுகள்

நீட் தேர்வு: மருத்துவக் கல்வி/கல்லூரி சேர்க்கை குறித்து தத்தம் கொள்கைகளையும், சேர்க்கை வழிமுறைகளையும் பாடத்திட்டத்தையும் உருவாக்க அந்தந்த மாநிலங்களே அதிகாரம் பெற்றவை. மத்திய அரசுக்கும், எம்சிஐக்கும் அத்தகைய அதிகாரம் இல்லை என்று கூறியே அல்டமாஸ் கபீர் தலைமையிலான அமர்வு, 2013ல் ‘நீட்’ தேர்வை ரத்து செய்தது ஆனால் ஐஎம்சி சட்டத்தில் 10டி பிரிவு சேர்க்கப்பட்டு திருத்தம் செய்ததன் மூலமாகவே ‘நீட்’ தேர்வு திணிக்கப்பட்டது. 2016ல் ‘நீட்’ தேர்வை ஆதரித்தவர்கள், “இதன் மூலம் மருத்துவக் கல்வியில் ஊழலை ஒழிக்கவும், கல்வியின் தரத்தை உயர்த்தவும் முடியும்” என்று கூறினார்கள். ‘நல்லமதிப்பெண் வாங்கும் மாணவர்களுக்கு மருத்துவ சீட் உத்தரவாதம்’ என்றும் சொன்னார்கள், ஆனால் கடந்த 3 வருட அனுபவம் அதற்கு எதிர்மாறாக இருக்கிறது. ‘நீட்’ தேர்வுக்குப்பின் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கல்விக்கட்டணங்கள் 5 முதல் 10 மடங்கு உயர்த்தப்பட்டு, ‘வெள்ளையாகவும்’, ‘கறுப்பாகவும்’ வாங்கப்படுகிறது. ‘நீட்’ தேர்வில் தகுதிபெற்ற மாணவன் ‘நல்ல மதிப்பெண்’ பெற்றாலும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் கேட்கிற ‘கல்விக் கட்டணத்தை’ செலுத்தினால் மட்டுமே மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கும். யார் அதிக விலைகொடுத்து வாங்குகிறார்களோ’ – அவர்களுக்கு மதிப்பெண் குறைவாகயிருந்தாலும் ‘மெடிக்கல் சீட்’ கிடைத்துவிடும். இதில் எங்கே தரம் இருக்கிறது?

நெக்ஸ்ட்: தேசிய வெளித் தேர்வு (NATIONAL EXIT TEST) ‘‘நீட் தேர்வின் மூலமாக அனுமதிக்கப்படும் மருத்துவ மாணவர்களின் தரம் உயர்ந்திருக்கும்’’ என்று ‘நீட்’ தேர்வுக்கு ‘வக்காலத்து’ வாங்கிவிட்டு, “பெரும்பாலான மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவக்கல்வியின் தரம் சரியில்லை, அதனால் மருத்துவராகப் போகும் மருத்துவ மாணவனுக்கு தரம் குறைந்திருக்கிறது” என்று கண்டுபிடித்து ‘நெக்ஸ்ட்’ என்ற தேர்வை தே.ம.ஆணையம் நடத்த உள்ளது. ‘இறுதியாண்டு எம்.பி.பி.எஸ் தேர்வை ‘தேசிய வெளித் தேர்வு’ என்ற பெயரில் அகில இந்திய அளவில் மத்திய அரசு நடத்தும்’ என்று அது கூறுகிறது. மாநில அரசுக்கு ‘மருத்துவக்கல்வி’யின் மீதுள்ள அதிகாரத்தையும், மாநில அரசுகளால் உருவாக்கப்பட்ட, பல்கலைக்கழகங்களின் மாண்பையும் ஒரு சேர சூறையாடும் நோக்கம் இது. இது அரசியலமைப்புச்சட்டத்தை துச்சமாக நினைத்து, தன் வரம்பு மீறி செயல்படுகிற மத்திய அரசின் சர்வாதிகாரத் தன்மையை வெளிப்படுத்துவதாகும். ஏனெனில் அரசியல் சாசனப்படி பல்கலைக்கழகங்களை உருவாக்கவோ, நிர்வகிக்கவோ மத்திய அரசுக்கு அதிகாரமில்லை. இவை மாநில அரசின் அதிகார வரம்பில் உள்ளவை. மேலும் இறுதியாண்டு தேர்வுக்கு முன் “நடத்திய தேர்வுகள் தரமற்றவை” என்று கூறி மருத்துவப் பல்கலைக்கழகங்களை சிறுமைப்படுத்துவதோடு, தான் நடத்தாத ‘நெக்ஸ்ட்’ தேர்வுக்கும் சேர்த்து மருத்துவப்பட்டங்களை மருத்துவப் பல்கலைக்கழகங்கள் வழங்கவேண்டிய நிலை ஏற்படும். வரைவு‘தேசிய கல்விக் கொள்கை,’ மருத்துவ பல்கலைக்கழகங்கள் போன்ற சிறப்புப் பல்கலைக்கழகங்களை மூடவேண்டுமென்று பரிந்துரைக்கிறது. அதற்கான வேலைகளை தேசிய மருத்துவ ஆணையம் துவக்கிவிடும்.

போட்டித் தேர்வான “பிஜி நீட்” மருத்துவ (மேற்படிப்பிற்கான போட்டித் தேர்வு) தேர்வை நீக்கிவிட்டு, தகுதித் தேர்வான “இறுதியாண்டுத் தேர்வுடன் இணைப்பது” ஒன்றுக்கொன்று முரணானது, நெக்ஸ்ட் தேர்வின் உள்நோக்கத்தைத் தெளிவுபடுத்துகிறது.‘நீட்’தேர்வில் தேர்ச்சிபெற்று மருத்துவராக முயற்சித்தாலும்,‘நெக்ஸ்ட்’தேர்வின் மூலம் மேலும் வடிகட்டுவதே’இதன் நோக்கமாகும். ஒருபுறம், ‘தனியார் மருத்துவக் கல்லூரிகள் தாமே மருத்துவ சீட்டுகளின் எண்ணிக்கையை நிர்ணயம் செய்துகொள்ளலாம்’ என்று கூறிவிட்டு, போதிய அடிப்படை, உள்கட்டமைப்போ, நோயாளிகள் மற்றும் மருத்துவ ஆசிரியர்களோ இல்லாத தரமற்ற தனியார் கல்லூரிகளில் படிக்கவைத்துவிட்டு, மறுபுறத்தில் மாணவர்கள் நெக்ஸ்ட் தேர்வை எழுதித் தன் ‘’தரத்தை’’ நிரூபிக்கவேண்டுமென்று தே.ம.ஆணையம் கூறுகிறது.

நெக்ஸ்ட்’ தேர்வில் தேர்ச்சி பெறவில்லையென்றால் பயிற்சி மருத்துவராக முடியாது. ஆறுமாதமோ அல்லது ஒரு வருடமோ காத்திருந்து தேர்வுக்குத் தயாராகி மீண்டும் ஒரு ‘பெருந்தொகையைக் கல்வி, தேர்வு மற்றும் விடுதிக்கட்டணங்களாக செலவு’ செய்யவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். ‘கோச்சிங்’ மையங்கள் பல உருவாகும், ‘கல்வி வியாபாரம்’ கொடிகட்டிப் பறக்கும். ஏழை, எளிய, கிராமப்புற மாணவன் இதனால் ஏற்படும் ‘மன அழுத்தத்தைத் தாண்டியே’ மருத்துவராக வேண்டும். ஏற்கனவே கிராமப்புறங்களில் உள்ள மருத்துவர் பற்றாக்குறையை இது மேலும் மோசமாக்கும். தவிர இறுதியாண்டு மருத்துவ மாணவர்கள் ‘பொது மருத்துவம்’, ‘பொது அறுவை சிகிச்சை’ மற்றும் ‘மகளிர் மற்றும் குழந்தைகள்’ குறித்த பாடங்களை மட்டுமே படிப்பார்கள். தேர்வு முறையில், எழுத்துத் தேர்வு’ தவிர செயல்முறைத் தேர்வுகள் மற்றும் வாய் மொழித் தேர்வுகள் இணைந்திருக்கும். எனவே இத்தகைய தேர்வை அகில இந்திய அளவில் ஒற்றைத் தேர்வாக நடத்துவது தேவையற்ற நடைமுறை சாத்தியமற்ற செயல்.

தற்போது பல மாநிலங்களில், உச்சநீதிமன்ற ஆணையின்படி, மாநில அளவிலான ‘கல்விக்கட்டண நிர்ணயக்குழு’ அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரிகளில் சிறுபான்மைக் கல்லூரிகளில் 50%  இடங்களையும் மற்ற கல்லூரிகளில் 65% இடங்களையும் அரசு ஒதுக்கீடாக பெற்று, குறைந்த கட்டணத்தில் மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள். மேலும் மீதமுள்ள 50% இடங்களிலும் 15%  வரை மட்டுமே (வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு) மிக அதிக கல்விக் கட்டணத்தை தனியார் கல்லூரி நிர்வாகிகள் நிர்ணயிக்கமுடியும். ஆனால் தற்போது தே.ம.ஆணையம் அமைக்கப்பட்டதைத் தொடர்ந்து, 50%  இடங்களை தங்கள் விருப்பப்படி எந்த விலைக்கு வேண்டுமானாலும் விற்றுக்கொள்ளலாம். இது பணக்காரர்களுக்கு 50%  இடஒதுக்கீடு செய்வதற்கு ஒப்பாகும். வரைவு தேசிய கல்விக் கொள்கை, அந்தந்த கல்வி நிறுவனங்களே (அரசு மற்றும் தனியார்) கல்விக்கட்டணத்தை தீர்மானிக்கும் என்று கூறுகிறது எனவே ‘தன்னாட்சி உரிமை’என்ற பெயரில் கட்டணக்கொள்ளை நடக்கவிருக்கிறது.

இணைப்புப் படிப்பு/ சமூக சுகாதார மருத்துவர்
 

2017ல் தாக்கல் செய்யப்பட்ட மசோதாவில், உத்தேசித்திருந்த ‘இணைப்புப்படிப்பை’ (6மாதம் அலோபதி பயிற்சி பெற்று, ‘ஆயுஷ்’ மருத்துவர்கள் அலோபதி மருத்துவராக பதிவு செய்து கொள்ளலாம்) நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிந்துரையை ஏற்று, மத்திய அரசு விலக்கிக் கொண்டது. ஆனால், ஃபிரிட்ஜ் கோர்ஸ், இல்லையென்று சொல்லிவிட்டு, அதைவிட மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் “சமூக சுகாதார மருத்துவர்”என்ற பெயரில், அரைவேக்காடு, போலி டாக்டர்களை, சட்டப்பூர்வமாக உருவாக்குகிறார்கள். நவீன மருத்துவத் துறையுடன் (அலோபதி) தொடர்புடைய எவரையும், தே.ம.ஆணையம், இத்தகைய மருத்துவராக முன்மொழியலாம் – பதிவு செய்யலாம். முறையாக மருத்துவம் படித்த ‘அலோபதி’ மற்றும் ‘இந்தியமுறை’ மருத்துவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதற்கு மாறாக, கிராமப்புறங்களிலும் மருத்துவ சேவை கிடைக்காத இடங்களிலும், இதுபோன்ற “சட்டப்பூர்வ போலி டாக்டர்களைக்” கொண்டு, மருத்துவசேவை வழங்குவதன் மூலம், ‘ஒரு பகுதி மக்களை’ (கிராமப் புற, ஏழை மக்கள்).‘இரண்டாம் தரக் குடிமக்களாகப்’பார்க்கும் போக்கு நடைமுறைப்படுத்தப்படும். இதன் மூலம் கிராமப்புறங்களில் மருத்துவர்களின் பற்றாக்குறையை சரிசெய்து விட்டதாக பீற்றிக் கொள்வார்கள்.

மத்திய அரசின் சர்வாதிகாரம்

தே.ம.ஆணையத்தின் செயல்பாட்டில் தலையிடவும், முடிவுகளை மாற்றவும், நிராகரிக்கவும் மத்திய அரசுக்கு அதிகாரம் உண்டு. எல்லாவற்றிக்கும் மேலாக ‘தேவை’ யென்று கருதினால், தனக்கு திருப்தியில்லையென்றால் தே.ம.ஆணையத்தை கலைக்கவும் மத்திய அரசுக்கு உரிமை உண்டு தே.ம.ஆணையத்தின் செயல்பாடுகளில் குறையிருந்தால் மத்திய அரசிடம் மட்டுமே மேல்முறையீடு செய்யமுடியும். ஜனநாயகத்திற்கு எதிரான, கூட்டாட்சி தத்துவத்தை புறந்தள்ளுகிற, மக்களுக்கும் மருத்துவ மாணவர்களுக்கும் எதிரான இத்தகைய தேசிய மருத்துவ ஆணையத்தை மக்கள் மன்றங்களில் தொடர்ந்து எதிர்ப்பதே – நம் முன் உள்ள கடமையாகும்.

கட்டுரையாளர் : பொதுச் செயலாளர், மக்கள் நல்வாழ்விற்கான மருத்துவர் அரங்கம்.
 

 

;