tamilnadu

img

பொது விவாதத்திற்கு ரஜினி தயாரா? : கே.பாலகிருஷ்ணன் கேள்வி

தேனி:
தேனிமாவட்டம் கம்பத்தில் வியாழனன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன்கூறியதாவது: வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக படுதோல்வி அடையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. நாளை (வெள்ளி) ஆரம்பிக்கும் பட்ஜெட்தொடரே அதிமுகவின் கடைசி பட்ஜெட் ஆகும்.ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் நீண்டகாலம் சிறையில் வாடும் ஏழுபேர் விடுதலை குறித்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியும், ஆளுநர் இதுவரை முடிவெடுக்கவில்லை. நீதிமன்றமும் ஆளுநரை கட்டாயப்படுத்த முடியாது என்கிறது. தமிழக அரசும் ஆளுநரை கட்டாயப்படுத்த முடியாது என்கிறது. ஆளுநருக்குஅத்தகைய அதிகாரம் உள்ளதா? தமிழக அரசு உடனடியாக ஏழுபேரையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

264 ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து டெண்டர்விடப்பட்டு, வேதாந்தா, ஓஎன்ஜிசி போன்ற நிறுவனங்கள் பணிமேற்கொண்டு வரும்வேளையில், காவிரி படுகையை வேளாண் பாதுகாப்பு மண்டலமாக முதல்வர் அறிவித்துள்ளார். இது கண்துடைப்பாக இருக்குமோ என கருதுகிறோம். வேறுசில பணிகளுக்கும் டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு வருகிற பட்ஜெட்கூட்டத்தொடரில் காவேரி படுகையை வேளாண் பாதுகாப்பு மண்டலமாக அறிவித்து  தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். ஹைட்ரோகார்பன், மீத்தேன் போன்ற திட்டங்களை எதிர்த்து போராடி யவர்கள்மீது புனையப்பட்ட வழக்குகளை உடனடியாக தமிழக அரசு திரும்பப் பெறவேண்டும்.விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6000 வழங்குவதாக பிரதமர் அறிவித்து, சிலருக்கு மட்டும் கொடுத்துவிட்டு பலருக்கு கொடுக்கவில்லை. விவசாயக் கூலித் தொழிலாளர்களுக்கு எவ்வித சலுகையும் வழங்கவில்லை. தமிழக அரசு மத்திய அரசுடன் இணைந்து இச்சட்டத்தை விரிவு படுத்தி விவசாய கூலி தொழிலாளர்களுக்கு உதவிதொகை வழங்க வேண்டும். பாசன மேம்பாட்டு திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்.மத்திய அரசு பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பாகத்தை முடித்து ஒருநாள்கூட ஆகவில்லை, வீட்டு உபயோகஎரிவாயு சிலிண்டர் விலையை ரூபாய் 148 வரை உயர்த்தி ஏழை .நடுத்தர மக்களை பாதிப்படையச் செய்துள்ளனர். அதேநேரத்தில் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு வரிச்சலுகையை வாரி வழங்கி உள்ளனர்.

ஒரேநேரத்தில் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் 90 ஆயிரம் பேரை விருப்ப ஓய்வு என்ற பெயரில் வெளியேற்றி உள்ளனர். ரூ.37 லட்சம் கோடி சொத்துள்ள எல்ஐசி நிறுவனத்தை தனியார் மயமாக்கும் நோக்கில் பங்குகளை விற்க திட்டமிட்டுள்ளார்கள். அம்பானி, அதானி போன்றவர்கள் மட்டுமே இப்பங்குகளை வாங்க முடியும்.குடியுரிமை சட்டம் மற்றும் மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கைகளுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கட்சி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரி கட்சிகள் 12ஆம்தேதி முதல் கண்டன ஆர்பாட்டங்கள் நடத்த முடிவு செய்து போராட்டம் நடைபெற்று வருகிறது. மார்க்கசிஸ்ட் கட்சி சார்பில் இதே கோரிக்கையை வலியுறுத்தி மண்டல அளவில் கண்டன பொதுக்கூட்டங்கள் நடக்க உள்ளது. கட்சியின் அகில இந்திய செயலாளர் சீத்தாராம் யெச்சூரி ஓசூரில் 15ஆம் தேதியும், மதுரையில் 16ஆம் தேதியும் பேசுகிறார்.

சிபிஐ விசாரணை தேவை அதிமுக ஆட்சியில் விஏஓ, குருப் 1, குரூப்2, காவலர் தேர்வு, ஐஐடி, பல்கலைக்கழக பேராசிரியர், துணைவேந்தர் நியமனம் என ஊழல் பெருகிக்கொண்டே செல்கிறது. இதுதொடர்பாக சாதாரண கிளார்க், கான்ஸ்டபிள் ஆகியோரை கைதுசெய்த காவல்துறையினர் இதில் சம்மந்தப்பட்ட முக்கிய நபர்களை கைது செய்யாமல் இருக்கிறார்கள். இதில் அமைச்சர்கள், உயர்மட்ட அதிகாரிகள் ஆகியோரை தப்பிக்கவைக்க முயற்சி நடைபெறுகிறது; எனவே முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணை தேவை எனக் கருதுகிறோம்.

உச்சநீதிமன்ற தீர்ப்பு சமூகநீதிக்கு ஆபத்து
கடந்த 7ஆம்தேதி உச்சநீதிமன்றம் இடஒதுக்கீட்டை அடிப்படை உரிமை இல்லைஎன தீர்ப்பு வழங்கி உள்ளது. சமூகநீதியை குழிதோண்டிப் புதைக்கிற வகையில் இத்தீர்ப்பு அமைந்துள்ளது. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, பழங்குடி மக்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும். இவ்வாறு அவர் கூறினார்.

ரஜினி பொது விவாதத்திற்கு தயாரா?
குடியுரிமை மற்றும் பெரியார் குறித்து ரஜினிகாந்த் தெரிவித்த கருத்துபற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த கே.பாலகிருஷ்ணன், கட்சி ஆரம்பிக்கவும், அவரது கொள்கைகளை தெரிவிக்கவும் ரஜினிக்கு முழு உரிமை உண்டு. மக்கள் உணர்வுகளுக்கு விரோதமாக, இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு நேர்விரோதமாக அவரது கருத்து அமைந்துள்ளது. தூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவத்திற்கு சமூகவிரோதிகள்தான் காரணம் என்கிறார். அரசோ, காவல்துறையோ ஏதும் அறிவிக்காத நிலையில் இவருக்கு எப்படி சமூகவிரோதிகள் என்று தெரிந்தது. 1970களில் நடந்த சம்பவத்தை இப்போது பேசவேண்டிய அவசியம் என்ன? இதுவரை மக்கள் பிரச்சனைக்காக வாய்திறக்காத ரஜினி இப்போது எந்த நிர்ப்பந்தத்தால் இப்படி பேசுகிறார்? குடியுரிமை சட்டத்தால் முஸ்லீம்கள் பெருமளவு பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இந்துக்களில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மலைவாழ் மக்கள், வீட்டுமனை இல்லாதவர்கள் பாதிக்கப்பட உள்ளனர். இதுகுறித்த பொது விவாதத்திற்கு ரஜினி தயாரா? என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், முல்லைப்பெரியாறு பிரச்சனையில் உச்சநீதிமன்ற  தீர்ப்பை கேரள அரசு நடைமுறைப்படுத்த மார்க்சிஸ்ட் வலியுறுத்தும். தமிழகம் முல்லைப்பெரியாறு தண்ணீர் பெறுவதில் உச்சநீதிமன்ற தீர்ப்பில் கூறியிருப்பதுபோல் இன்னொரு டணல் அமைக்க இருமாநில அரசுகளும் பேசி தீர்வுகாண வேண்டும் என்றும் கூறினார். பேட்டியின்போது, மாநிலக் குழு உறுப்பினர் கே.பாலபாரதி, மாவட்ட செயலாளர் டி.வெங்கடேசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.ராஜப்பன், ஏ.வி.அண்ணாமலை, ஏரியா செயலாளர் ஜி.எம்.நாகராஜன், மாவட்ட குழு உறுப்பி னர் லெனின் ஆகியோர் உடனிருந்தனர். (ந.நி.)

;