tamilnadu

img

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவ விசாரணை.... ஆணையத்தில் 616 பேர் சாட்சியம்... ரஜினி நேரில் ஆஜராகவில்லை.....

தூத்துக்குடி:
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக தமிழக அரசு நியமித்த ஒருநபர் விசாரணை ஆணையத்தில் இதுவரை 616 பேர் சாட்சியம் அளித்துள்ளனர். இதன் 24 ஆம் கட்ட விசாரணை வெள்ளிக்கிழமையன்று நிறைவுபெற்றது.மக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்திய தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி  2018ஆம் ஆண்டு மே மாதம் 22 ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தில் காவல்துறையினர் நடத்திய கொடூரமான துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். எதிர்க்கட்சிகள் மற்றும் மக்களின் போராட்டத்தை தொடர்ந்து இந்த துப்பாக்கிச் சூடு  சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக தமிழக அரசு, ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையத்தை அமைத்தது.

இந்த ஆணைய நீதிபதி அருணா ஜெகதீசன் மாதந் தோறும் தூத்துக்குடி முகாம் அலுவலகத்தில் விசாரணை நடத்தி வருகிறார். விசாரணையில், கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்கள், போராட்டத்தில் பங்கேற்றவர்கள், போராட்டத்தை முன்னெடுத்த முக்கிய நிர்வாகிகள், வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள், அரசு அலுவலர்கள், தீயணைப்புப் படையினர், ஆம்புலன்ஸ் வாகன ஊழியர்கள் உள்ளிட்ட 585 பேரின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. மேலும் 775 ஆவணங்களும் பதிவு செய்யப்பட்டன.ஆணையத்தின் 24-வது கட்ட விசாரணை  நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஜனவரி 18 அன்று தொடங்கியது. இதில் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்த  தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களை சேர்ந்த அரசு மற்றும் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட 56 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்கு சமூக விரோதிகள் போராட்டத்தில் ஊடுருவியதே காரணம் என்று நடிகர் ரஜினி பேசியதால் அவரையும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன. இதையடுத்தே அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. 5 நாட்கள் நடைபெற்ற விசாரணை வெள்ளிக்கிழமையன்று முடிவடைந் தது. இதில் மொத்தம் 31 பேர் ஆஜராகி சாட்சியம் அளித்தனர். நடிகர் ரஜினிகாந்த் நேரில் ஆஜராகவில்லை. அவருக்குப் பதிலாக அவரது வழக்கறிஞர் இளம்பாரதி ஆஜராகி, காணொலிமூலம் விசாரணை நடத்த வேண்டுகோள் விடுத்து மனு தாக்கல்செய்தார். 

இதுவரை ஆணையம் சார்பில் நடைபெற்ற 24 கட்ட விசாரணைகளில் 980 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டது.இதில் 616 பேர் ஆஜராகி சாட்சியம் அளித்துள்ளனர். 850 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டுள்ளன.ஆணையத்தின் 25 ஆம் கட்ட விசாரணை பிப்ரவரி  15 ஆம் தேதிமுதல் 19 ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;