தூத்துக்குடியில் கோடைமழை: பொதுமக்கள் மகிழ்ச்சி
தூத்துக்குடி, ஏப்.20-நீண்ட நாட்களுக்கு பிறகு மழை பெய்ததால் கோடை வெப்பம் தணிந்து மக்கள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர்.தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு வழக்கத்துக்கு முன்னதாகவே கோடை காலம் தொடங்கியது. கடும் வெயில்சுட்டெரித்ததால் பொதுமக்கள் அவதியடைந்தனர். பகல் நேரத்தில் வெளியே தலைகாட்ட முடியாத வெப்பம் நிலவியது. இந்நிலையில் தூத்துக்குடி நகர் பகுதியில் வெள்ளியன்றுஇரவு லேசான மழை பெய்தது. தொடர்ந்து காலையிலும் சிறிது நேரம் மழை பெய்தது. தூத்துக்குடியில் கோடைமழை துவங்கியுள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அடுத்த சில தினங்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கோடை மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடியில் மீனவர் கொலை?
தூத்துக்குடி, ஏப்.20 -தூத்துக்குடி திரேஸ்புரம் மாதவன் நாயர் காலனியைச் சேர்ந்தவர் ஜாஸ் மகன் முத்துசெல்வம். மீனவரான இவர்சனிக்கிழமை காலை 9 மணியளவில் அப்பகுதி கடற்கரையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து தருவைகுளம் மரைன் போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அவரது உடலைக் கைப்பற்றி பரிசோதனைக்காக தூத்துக்குடிஅரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், முத்துசெல்வன் உடலில் சில காயங்கள் இருப்பதாகவும், அவர் மர்ம நபர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் அவரது தந்தை ஜாஸ் போலீசில் புகார் செய்துள்ளார். இதுதொடர்பாக மரைன் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். முத்து செல்வனுக்கு தேன்மொழி என்ற மனைவியும் 3 குழந்தைகளும் உள்ளனர்.
பைக் விபத்தில் 2 வாலிபர்கள் பலி
தூத்துக்குடி, ஏப்.20-தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே உள்ளகுலசேகரநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ராஜபாண்டி(35), பாலசுந்தர்(19), ஆலங்குளம் மணிராஜ் (22). இவர்கள்மூவரும் ஏப்.14-ம் தேதி மதியம் 2 மணியளவில் ஒட்டப்பிடாரத்தில் இருந்து குலசேகரநல்லூர் நோக்கி ஒரே பைக்கில் சென்று கொண்டிருந்தனர். பைக்கை ராஜபாண்டி ஓட்டிச் சென்றார். மற்ற இருவரும் பின்னால் அமர்ந்திருந்தனர். இந்த பைக் ஒட்டப்பிடாரம்-திருநெல்வேலி விலக்கு ரோட்டில் திரும்பும்போது நிலைதடுமாறி விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் படுகாயம் அடைந்த 3 பேரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் ராஜபாண்டி சிகிச்சைபலனின்றி சனிக்கிழமை காலை இறந்தார். இதுகுறித்து ஒட்டப்பிடாரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மற்றொரு விபத்து தூத்துக்குடி வாகைகுளத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன்(35). இவர் ஏப்.18-ம் தேதி தனது பைக்கில் வாகைகுளம் சந்திப்பில் சென்றுகொண்டிருந்த போது எதிரே மற்றொரு பைக்கில் வந்த திம்மராஜபுரத்தைச் சேர்ந்த கடற்கரை மகன்ரமேஷ் (22) என்பவரது பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயம் அடைந்த மாரியப்பன், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலியில் உள்ள தனியார்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை காலை உயிரிழந்தார். இதுகுறித்து புதுக்கோட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.