tamilnadu

மாணவர்களிடம் ம.சு. பல்கலைக்கழகம் வசூல் வேட்டை.... அமைச்சர் தலையிட மூட்டா வேண்டுகோள்...

தூத்துக்குடி:
தூத்துக்குடி மூன்றாம் மண்டலம் மூட்டா செயலாளர் பொ.சிவஞானம் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

தமிழக அரசு உயர் கல்வித்துறை அமைச்சர்  24.05.2021 நாளன்று உயர்கல்வித்துறை செயலர் மற்றும்  அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன்  பல்கலைக்கழக செயல்பாடுகள் மற்றும் பல்கலைக்கழகத் தேர்வுகள் குறித்து காணொலி மூலம் கலந்துரையாடினார். தமிழக அரசின் செய்தி வெளியீட்டின்படி அனைத்து பல்கலைக்கழக மாணவர்களுக்கும் தேர்வு கட்டணம் செலுத்துவதற்கு ஜுன் 3ம் தேதி  வரை  அனுமதிவழங்கியுள்ள நிலையில் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக நிர்வாகம் அவற்றை மதிக்காமல் காற்றில் பறக்கவிட்டு எதேச்சதிகாரமாக தேர்வு கட்டணம் குறித்து அறிவிக்கையினை வியாழனன்று வெளியிட்டுள்ளது. அவ்வறிவிக்கையின் படி மாணவர்கள் தேர்வு கட்டணத்தை  மே 29 வரை செலுத்தலாம் என்றும்,  மே 31 முதல் ஜூன் 4 வரைதேர்வு கட்டணம் செலுத்துவதற்கு ரூபாய் 1000 அபராதத்தினையும் விதித்துள்ளது. 

மாணவர்களும், அவர்தம் பெற்றோரும் கொடூர நோய் மற்றும்  பொருளாதார பிரச்சனையில் சிக்கித் தவிக்கும் இந்தப் பெருந்தொற்று காலத்திலும் அபராதம் என்ற பெயரில் மாணவர்களிடம் வசூல் வேட்டை செய்யும் ம.சு. பல்கலைகழக துணைவேந்தர், தேர்வு கட்டுப்பாடு அதிகாரி மற்றும் அதன் நிர்வாகத்தை மூட்டா  வன்மையாக கண்டிக்கிறது. பண வேட்கை கொண்ட ம.சு. பல்கலைகழக நிர்வாகத்தில் உயர் கல்வி அமைச்சகம் உடனடியாக தலையிட்டு  தக்க நடவடிக்கை எடுத்து மாணவர்களுக்கு நல்வழி காட்டிட வேண்டுகிறோம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

;