tamilnadu

img

150 ஏக்கர் விவசாய‌ நிலம் மோசடியாக விற்பனை... பத்திரப் பதிவு ரத்து கோரி சிபிஎம் ஆர்ப்பாட்டம்....

தூத்துக்குடி:
எட்டையபுரம் அருகே 150 ஏக்கர் விவசாய‌ நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்தது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் எட்டயபுரம் சார்பதி வாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் தாலுகா சோழபுரம், குறுவட்டம், லக்கமாதேவி, குமரி குளம், விகாம்பட்டி, ஆத்தி கிணறுஉள்ளிட்ட கிராமப் பகுதிகளில் இருக்கும் விவசாய நிலங்களை போலியான ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு செய்து மோசடி நடந்துள்ளது.

800 ஏக்கர் வரை?
சோழபுரம் பிர்காவில் தனியார் கம்பெனி சூரிய மின்சக்தி திட்டத்திற்கான பணிகளைத்துவக்கிய போது, அந்த நிலங்கள் போலியான ஆவணங்கள் மூலம் பத்திரப் பதிவுநடைபெற்றிருக்கிறது என்பது விவசாயி களுக்கு தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி யடைந்த விவசாயிகள், சார்பதிவாளர் அலுவலகத்தில் உள்ள சொத்து சான்றிதழை சரி பார்த்தபோது, 20க்கும் மேற்பட்ட விவசாயிகளின் சுமார் 150 ஏக்கர் நிலங்கள் இப்படிப்பட்ட மோசடி ஆவணங்களின் மூலம் சட்டவிரோதமாக பத்திரப் பதிவு நடைபெற்றிருப்பது தெரியவந்துள்ளது. 

இன்னும் விசாரித்தால் சுமார் 800 ஏக்கர் வரை இப்படிப்பட்ட மோசடி நடந்திருக்கலாம் என விவசாயிகள் அச்சம் தெரிவிக்கின்றனர். இதையடுத்து உடனடியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு அளித்தது.இந்நிலையில், இந்த நில மோசடியை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சார்பதிவாளர் அலுவலகம் முன்பாக போலி ஆவணங்களின் மூலம்  செய்த பத்திரப்பதிவை உடனடியாக ரத்து செய்யவேண்டும், பத்திரப் பதிவு செய்த சார்பதிவாளர் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும், சம்பந்தப்பட்ட பத்திரப் பதிவுக்கு உடந்தையாக இருந்த  நபர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு  கட்சியின் தாலுகா செயலாளர் கு.ரவீந்திரன் தலைமை தாங்கினார். தலைவர்கள் செல்வகுமார், நடராஜன், முருகேசன், கட்சி தோழர்கள் சிவா, கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

;