tamilnadu

img

எழுத்தாளர்கள், கல்வியாளர்கள், அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவேண்டும் : நாட்டைக்காப்போம் அமைப்பு கோரிக்கை

நாட்டைக் காப்போம் மையக்குழு சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சி.சே. இராசன் வெளியிட்டுள்ள  அறிக்கை:

ஊரடங்கு உத்தரவால் வாழ்வாதாரங்களை இழந்து   பெரும்பான்மையான மக்கள் பசியால் வாடி கொண்டிருக்கின்றனர். அவசர தேவைகளுக்காக வெளியே  செல்லும் பலதரப்பு மக்களின்  இருசக்கர வாகனங்களும் காவல்துறையினரால்  பறிமுதல் செய்யப்பட்டு   காவல்நிலையத்திற்கு வந்து வாங்கிக்கொள்ளுங்கள் என்கின்றனர் . இதுப்போன்ற நேரத்தில் காவல்துறையினர் தங்கள் அதிகாரங்களை சாதாரண மக்களிடம் காட்டி அவர்களை அலைக்கழிப்பது சரியா? மக்களின்  சூழலை புரிந்துக் கொண்டு  எச்சரித்து அனுப்புவது மட்டுமே சரியானதாக இருக்கும். இதனை தமிழக அரசானது  காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு எடுத்துரைக்க வேண்டியது அவசியம்.

கொரோனா பாதிப்பினாலான ஊரடங்கு உத்தரவு மே 3ஆம் தேதி வரை மத்திய அரசு நீடித்து உள்ளதால் பொது மக்கள் அனைவரும்  வீட்டிற்குள்ளே முடங்கி உள்ளனர். பெரும்பாலான மக்கள் தினக்கூலிகள். மக்களின் வாழ்வாதார அத்தியாவாசிய தேவைகள் ஏதும்  பூர்த்தி செய்யாமலே ஊரடங்கு உத்தரவு  நீட்டிக்கப்பட்டுள்ள சூழல்.. ஊரடங்கு கால செலவிற்காக ஒவ்வொரு குடும்பத்திற்கும் அரசு 15ஆயிரம் ரூபாய்  வழங்க வேண்டும் என மக்கள் சார்பாக சிவில் சமூக அமைப்புகள்  தொடர்ந்து கோரிக்கை வைத்துக்கொண்டிருக்கின்றனர். அதனை அரசு கண்டு கொள்ளவே இல்லை.

தேசிய ஊரடங்கு மே3ஆம் தேதிவரை நீட்டித்த பிரதமரின் அறிவிப்பு  வெறும் அறிவுரையாகதான் அமைந்துள்ளதே ஒழிய மக்களுக்கு  தேவையான நிவாரண உதவி,பொருள் உதவி, பண உதவி குறித்த எந்த திட்டமும் இல்லாத அறிவிப்பாகதான் உள்ளது. பொருளாதார பேரழிவிலிருந்து  அனைத்து மக்களையும்  குறிப்பாக அமைப்பு சாரா தொழிலாளர்களையும் பாதுகாக்க வேண்டிய  பொறுப்பு அரசுக்கு இருந்தாலும்  பெரிய அளவிலான செயல்திட்டங்கள் எதையும் அரசு முன்வைக்க வில்லை  .இதனால்  பசி,பட்டினி மற்றும் பஞ்சத்தினால் நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விடுமோ என சிவில் சமூக அமைப்புகள் கவலைக் கொள்கின்றன.. இதனை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்நேரத்தில் அரசு வழங்கும் ஒருசில நலதிட்டங்களை அந்தந்த பகுதிகளில் உள்ள சமுக நல அமைப்புகள்  தானாகவே முன் வந்து தன்னார்வலர்கள் மூலம் மக்களுக்கு சேவை செய்து வருகின்றனர். அந்த சேவையையும் அரசின் மூலமாகதான் செய்ய வேண்டும் என நோயைக் காரணம் காட்டி  மக்களுக்கு செய்ய வேண்டிய உதவிகளை அரசு கட்டுபடுத்துவது மனித உரிமை மீறல் ஆகும். இதனால்  தமிழகத்தில் பசியால் வாடுவோர் எண்ணிக்கை அதிகரிக்கும். இந்த இக்கட்டான காலக்கட்டத்தில் சிவில் சமூக அமைப்புகள் தன் கடமையை செய்ய முன்வருவருவதை  அரசு ஊக்குவிக்க வேண்டும்.. கூட்டம் கூடுவதைத் தவிர்க்க வேண்டும் என்ற காரணம் சொல்லி நிவாரண பொருட்களை விநியோகம் செய்யும் சமூக அமைப்புகள் ,தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் அரசியல் கட்சிகளை  இச்சேவையிலிருந்து விலக்கிக் கொள்ள கூடாது.

இன்றைய தினம் (மார்ச் 16) சென்னை உயர்நீதி மன்றம்  வழங்கியுள்ள தீர்ப்பையும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். தமிழக அரசானது இக்காலக்கட்டத்தில் அனைத்து துறை வல்லுனர்களையும்,அரசியல் கட்சிகளையும்,சிவில் சமூக அமைப்புகளையும் அரவணைத்து அவர்கள் மூலம்  திட்டமிட்டு நிவாரண பணிகளில் ஈடுபட வேண்டும்.. ஒவ்வொரு கிராமங்களிலும் ஊர்களிலும் அந்தந்தபகுதியில் உள்ள  தன்னார்வலர்களை அடையாளம் கண்டு அவர்கள் மூலமாக நிவாரண பணிகளை செயல்படுத்துவது தான் சிறப்பாக இருக்கும். நோய் பரவலை காரணம் காட்டி அனைத்து நடவடிக்கைகளும் 'அரசு' வாயிலாகத்தான் செய்யவேண்டும் என தமிழக அரசு நினைக்கும் தன் போக்கை மாற்றி அந்தந்த பகுதி தன்னார்வலர்களை கொண்டு திட்டங்களை செயல்படுத்துவதும், உள்ள கட்சி பேதமின்றி அனைவரையும் அரவணைத்து  செல்ல வேண்டியதும் மிகமிக அவசியம். அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளான ஏப்ரல் 14 அன்று  அண்ணலின் உறவினரும் எழுத்தாளருமான ஆனந்த் டெல்டும்டே மற்றும் எழுத்தாளர் கவுதம் நவ்லகா பீமா கொரேகான் வழக்கில் சரணடைந்து கைது செய்யப்பட்டுள்ளனர். ஏப்ரல் 14 அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளில்  தேசிய புலனாய்வு முகாமை (ழிமிகி) மூலம் சிறைப்படுத்தப்பட்டுள்ள எழுத்தாளர்கள் ஆனந்த் டெல்டும்டே, கவுதம் நல்லகா இருவரையும் கொரோனா ஊரடங்கு காலத்தை கவனத்தில் கொண்டு அரசு அவர்களை  விடுதலை செய்ய வேண்டும்.

முப்பது நூல்களுக்கு மேல் எழுதியுள்ள, கல்வியாளர் ஆனந்த் டெல்டும்டே போன்றவர்களையும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான கருத்தியலை முன்எடுப்பவர்களையும், ஒடுக்கப்பட்ட மக்களின் எதிரிகளை அடையாளம் காட்டுபவர்களையும் சிதைக்க நினைப்பது பாசிசத்தின் வடிவமாகும். கொரோனா ஊரடங்குக் காலத்திலும் பாசிச சர்வாதிகாரம் தலை விரித்தாடுவது ஒடுக்கப்பட்ட மக்களுக்கும், உழைக்கும் மக்களுக்கும், சிறுபான்மை மக்களுக்கும், மனித உரிமைக் காப்பாளர்களுக்கும்  மிகுந்த அச்சத்தை உருவாக்குகிறது. கல்வியாளர் ஆனந்த் டெல்டும்டே, எழுத்தாளர் கவுதம் நவ்லகா  மட்டுமல்ல  சிறையில் எற்கனவே அடைக்கப்பட்டுள்ள பேராசிரியர் சாய்பாபா, வழக்கறிஞர் சுதா பரத்வாஜ், கவிஞர் வரவர ராவ் இன்னும் சிறையில் இருக்கிற பல்வேறு அறிவுஜீவிகள் மற்றும் அனைத்து அரசியல் கைதிகளும் இக் கொரோனா காலக்கட்டத்தில் விடுதலை செய்யப்பட வேண்டும் என நாட்டைக்காப்போம் அமைப்பு அரசை கேட்டுக்கொள்கிறது.
 

;