tamilnadu

img

பட்டா கேட்டு கண்ணீர் விடும் கொறுக்கை ஊராட்சி மக்கள்....

நீதிமன்ற உத்தரவு என்ற பெயரால் மூன்று தலைமுறைகளாக மக்கள் வசித்து வரும் கொறுக்கை ஊராட்சியில் 6 மற்றும் 7-வது வார்டு, தலைக்காடு, கண்ணன்மேடு பகுதியைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தங்களின் அடையாளத்தை வாழ்வுரிமையை அரசு இயந்திரம் பறிக்க நினைப்பதை எண்ணி கலக்கத்தில் உள்ளனர்.இரண்டு தனி நபர்களுக்கிடையில் புறம்போக்கு நிலத்தில் யார் வைக்கோல் போர் வைத்துக்கொள்வது, அந்த நிலத்தை பயன்படுத்திக் கொள்வது என்று ஏற்பட்ட தகராறில் ஒருவர் நீதிமன்றம் செல்ல, நீதிமன்றம் சம்பந்தப்பட்ட பிரச்சனைக்கு நீதி வழங்காமல் அந்த ஊரையே காலி செய்யவேண்டுமென உத்தரவிட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம், பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை ஆகியவை காவல்துறை உதவியோடு சாமானிய மக்களை முற்றுகையிட்டு ஒருவாரத்திற்குள்ளாக நீர்நிலை ஆக்கிரமிப்பில் குடியிருந்து வரும் இப்பகுதி மக்கள் அனைவரும் வீடுகளை காலி செய்திடவேண்டுமென்று கூறியுள்ளார்கள். திருத்துறைப்பூண்டி வட்டாட்சியர் நூற்றுக்கும் மேற்பட்டோரின் பெயர் பட்டியலை தயார் செய்து மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைத்துள்ளார். “தூங்கும் போது கல்லை தலையில் போட்டால் கூட வலி தெரியாமல் உயிர் பிரிந்து விடும். ஆனால் பட்டபகலில் பாறாங்கல்லை தலையில் போடுகிறார்களே, நாங்கள் என்ன செய்ய போகிறோம்” என அப்பாவி மக்கள் தலையில் அடித்துக் கொண்டு கதறுகிறார்கள். 

கட்டமைப்பு
கொற்கை ஊராட்சி ஒரு சமத்துவபுரமாக அனைத்து சாதி, மதங்களை சேர்ந்த மக்கள் ஒற்றுமையாக வாழக் கூடிய, கட்சி வேறுபாடுகளை கடந்து பழகக்கூடிய பாரத விலாஸாக பெருமையுடன் விளங்கும் ஊராட்சி ஆகும். சம்மந்தப்பட்ட கொற்கை மேலத்தெரு, தலைக்காடு 7-வது வார்டு மற்றும் 6-வது வார்டு பகுதியில் 10-க்கும் மேற்பட்ட மாடிவீடுகள், ஓட்டுவீடுகள், கூரைவீடுகள் என்று பல பகுதிகளில் மக்கள் வசிக்கிறார்கள். அந்தப் பகுதியில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி உள்ளது. தார்ச்சாலைகள் போடப்பட்டுள்ளன. இங்கு வசிக்கும் மக்கள் அனைவரிடத்திலும் அரசு ஆவணங்கள் குறிப்பாக ஆதார் அட்டை, ரேசன் கார்டு, வங்கி, தபால் நிலைய கணக்கு புத்தகங்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் அனைத்து வகையான ஆவணங்கள் ஆகியவை உள்ளன. மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. வாக்காளர் அட்டைகளுடன் சுமார் ஆயிரம் பேர் உள்ளனர்.

இப்படிப்பட்ட பகுதியை தான் பொதுப்பணித்துறையின் வெண்ணாறு பிரிவு எண். II நீர்வள ஆதாரத்துறை உதவிப்பொறியாளர் நீதிமன்ற உத்தரவின் பேரில் ஒரு வார காலத்திற்குஉள்ளாக வீடுகளை காலி செய்து, அனைத்து பொருட்களையும் அப்புறப்படுத்திக் கொண்டு ஆடு, மாடுகளை ஓட்டிக்கொண்டு அப்பகுதிமுழுவதையும் வெறும் திடலாக ஆக்கி விடவேண்டுமென ஆணை பிறப்பித்துள்ளார். தவறும் பட்சத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து அகற்றப்படும் இனங்களுக்கு அவரது துறை எந்தவிதத்திலும் பொறுப்பேற்காது என்றும் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அரசின் அனைத்து சேவைகளையும் பெற்று பன்னெடுங்காலமாக இப்பகுதியில் வசித்து வரும் குடியிருப்பு வாசிகளை ஒருவார காலத்தில் இப்பகுதியை விட்டு வெளியேற வேண்டுமென அரசு தரப்பு நோட்டீஸ்அனுப்புவது, நாம் ஜனநாயக நாட்டில்தான் வாழ்கிறோமா என்ற கேள்வியை எழுப்புகிறது.

கண்ணீரும், கதறலும் 
இங்கு வசிக்கக் கூடிய 75 வயதான மாணிக்கம் மனைவி சரோஜா, நாங்கள் மூன்று தலைமுறைகளாக வாழ்ந்து வருகிறோம். இந்த இடத்தை விட்டு நாங்கள் எங்கு செல்வது என்று வேதனையுடன் கேட்கிறார். அதே போல பல் மருத்துவ பட்டயப்படிப்பு படிக்கும் சினேகா என்ற இளம் மாணவி, உறுதியான குரலில் நாங்கள் இங்கிருந்து காலி செய்யமாட்டோம். எங்கள் பிணத்தைதான் அவர்கள் அள்ளிக்கொண்டு போக முடியும் என்று கூறுகிறார். 76 வயது வடுவம்மா, 72 வயது பக்கிரிசாமி, 35 வயது பிரபு,40 வயது மாலா போன்ற பலரும் ஒரே குரலில் கண்ணீரோடும், கதறலோடும் “எங்களை மோசம் பண்ணிடாதீங்க, அப்படி ஏதாவது செஞ்சா, நாங்க சாவறத தவிர வேற வழியில்ல” என்றார்கள். ஒரு முதியவர் “வெண்மணியில பண்ணின மாதிரி இங்கேயும் பண்ண பாக்கிறாங்கய்யா” என்று கூறியது கேட்டு அதிர்ந்து போனோம்.

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டம், கொறுக்கை கிராமம், புல எண்.474, 479, 480 மற்றும் 481 வகைப்பாடு அரசு புறம்போக்கு அண்ணாபிள்ளை வடிகால் என்கிற நல்லார் வடிகாலில் தலைக்காடு ஏரி என்றழைக்கப்படும் புறம்போக்கு பகுதியில் பயன்பாட்டில் உள்ள ஆக்கிரமணங்களை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில் சட்ட விதிகளுக்குட்பட்டு அகற்றிட வேண்டும் என்பதுதான் தற்போதைய நிலை. நீதிமன்ற தீர்ப்பை மதிக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. தீர்ப்பை நிறைவேற்றாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பிற்கு ஆளாக நேரிடும் என அதிகாரிகள் அச்சப்படுவது சரியானதுதான். ஆனால் தமிழகம் முழுவதும் பல்வேறு அரசு கட்டிடங்கள், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகங்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் மற்றும் பெருந்திட்ட வளாகங்கள் என ஏராளமான ஆக்கிரமிப்புகள் கண்ணுக்கு தெரிந்த நீர்நிலைகளில் தான் உருவாகியுள்ளன. அதுமட்டுமல்லாமல் பல்வேறு இடங்களில் அரசியல்வாதிகள், கட்ட பஞ்சாயத்து செய்பவர்கள், நிதிநிறுவன அதிபர்கள், பெரும் வணிகர்கள், ஹோட்டல் அதிபர்கள், கல்வி நிறுவனங்களை நடத்தக் கூடியவர்கள் என வலுவான நிலையில் உள்ள பெரிய மனிதர்கள் நீர்நிலைகளை ஆக்கிரமித்திருப்பது கண்கூடான ஒன்று. அத்தகைய அரசின் சொத்துக்களை மீட்டெடுத்து ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும் என்பதிலும் மாற்றுக்கருத்தில்லை.ஆனால் கொறுக்கை ஊராட்சியில் நிலவும் பிரச்சனை முற்றிலும் வேறுபட்டது. ஏரி என்ற ஒன்று இருந்ததற்கான சுவடே இல்லாமல்முழுமையாக ஒரு ஊர் அங்கே உருவாகியுள்ளது. இது பல ஆண்டுகளை கடந்த வரலாறு. இங்குள்ளகுடியிருப்புகளை அகற்றிவிட்டு அங்கு என்ன செய்ய போகிறார்கள்? இந்த பகுதியைச் சார்ந்த அனைத்து கட்சிகளும் இதற்காக ஒன்று சேர்ந்து ஒரு போராட்ட ஒருங்கிணைப்பு குழுவை உருவாக்கி தொடர்போராட்டங்களுக்கு திட்டமிட்டு வருகிறார்கள். மேலும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்பின் தலைவர்கள், அனைத்து கட்சி தலைவர்கள்  என அனைவரையும் சந்தித்து இந்த கிராம மக்கள் கோரிக்கை மனுக்களை அளித்து வருகின்றனர்.

மாவட்ட ஆட்சியர் ப.காயத்ரி கிருஷ்ணனை சந்தித்து அவர்கள் முறையிட்டபோது, “நான் நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்கிறேன். அதன்பிறகு வகைமாற்றம் செய்து பட்டா வழங்குவதற்கு அரசுக்கு பரிந்துரை செய்ய முயற்சி செய்கிறேன்” என்று கூறியது சற்று ஆறுதலான செய்தி, ஆனால் பல்வேறு பணிச்சுமை காரணமாக கொறுக்கை கிராமத்திற்கு அவர் வர இயலவில்லை. கடந்த 2006-ஆம் ஆண்டு மறைந்த முதலமைச்சர் கருணாநிதி ஆட்சி நிறைவாண்டில் (2010-2016) கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ், கான்கிரீட் வீடு பெறுவதற்கான தகுதி அட்டையை மாநிலம் முழுவதும் பெருமளவில் வழங்கினார். அந்த அட்டை இங்குள்ள குடியிருப்பு வாசிகள் அனைவரிடமும் தற்போதும் உள்ளது. எதிர்பாராத வகையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு 2011 தொடங்கி 10 ஆண்டு காலம் அதிமுக ஆட்சி அதிகாரத்தில் இருந்ததால் இவர்களுக்கு பட்டா கிடைக்கவில்லை. வெள்ளந்தியான இப்பகுதி மக்கள், “கலைஞர் கொடுத்திருக்க வேண்டிய பட்டாவை அவரது மகன் ஸ்டாலின் எங்களுக்கு கொடுக்க வேண்டும்” என்று வேண்டுகோள் வைக்கிறார்கள். இவர்களது கோரிக்கை மிகவும்நியாயமானது. இவர்கள் வசிக்கும் இடத்தை காலிசெய்ய இயலாது என்பதும் நிதர்சனமானது. எனவே தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் அச்சத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற மக்களுக்கு வாழ்வளிக்கும்  வகையில் பட்டா வழங்கிட வேண்டும். அவர்களது வாழ்வில் ஒளியேற்ற வேண்டும். இவர்களின் பல்லாண்டு அனுபவ இடங்களை தவிர்த்து ஏனைய பகுதிகளில் புதிய நீர்நிலைகளை உருவாக்குவதற்கு இந்த மக்கள் தடையேதும் கூறவில்லை.

செய்தி, படங்கள் : எஸ்.நவமணி, ஏ.கே.வேலவன் 

;