tamilnadu

img

எண்ணூர் நேரு நகரில் கழிவுநீர் தேக்கம்

 திருவொற்றியூர், ஜூலை 29 - திருவொற்றியூர் மண்டலம், 2 ஆவது வார்டுக்கு உட்பட்ட எண்ணூர், நேருநகர் பகுதியில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் பாதாள சாக்கடை வசதி இல்லை. இதனால் வீடுகளில் கழிவுநீர் தொட்டி (செப்டிக் டேங்க்) அமைத்து, அது நிரம்பியபிறகு லாரிகள் மூலம் அப்புறப்படுத்துகின்றனர்.  குளிப்பது உள்ளிட்ட இதர கழிவுநீரை அப்புறப்படுத்து வதற்கு கூட கால்வாய் வசதி இல்லாததால், வேறு வழியில்லாமல் தெருவில் பள்ளம் தோண்டி அதில் வெளி யேற்றும் அவல நிலை உள்ளது. இவ்வாறு தேங்கியுள்ள இந்த கழிவு நீரில் கொசுக்கள் உற்பத்தி அதிகரித்து பொது மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்படுகிறது. எனவே, இந்த பகுதியில் மழைநீர் கால்வாய் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் திருவொற்றியூர் மண்டல அதிகாரிகளுக்கு பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனாலும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘இந்த பகுதியில் ஒரு சில இடங்களில் கால்வாய் அமைக்கப்பட்டது. ஆனால் அதை முழுமையாக முடிக்காமல் கிடப்பில் போட்டதால் கழிவுநீர் வெளியேறாமல் தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. ஆனாலும் திருவொற்றியூர் மண்டல அதிகாரிகள் இதுபற்றி கண்டுகொள்வதில்லை. நாள் கணக்கில் தேங்கியுள்ள இந்த கழிவுநீரால் பலர் மர்மக் காய்ச்சல் நோய்க்கு ஆளா கியுள்ளனர். எனவே உடனடியாக கழிவுநீரை அப்புறப்படுத்தி கால்வாய் அமைக்க வேண்டும்’’ என்றனர்.