tamilnadu

ஆட்டோ டிரைவர் வெட்டிக்கொலை

திருவண்ணாமலை, பிப்.13- திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்கால் பொன்னுசாமி நகரை சேர்ந்தவர் ஆனந்த் (35). லாரி டிரைவராக இருந்த இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு சொந்தமாக ஆட்டோ வாங்கி ஓட்டி வந்தார். திருவண்ணாமலை பேருந்து நிறுத்தம் அருகே பயணிகளை அழைத்துச் செல்லும்போது, அங்கு உள்ள ஆட்டோ டிரைவர்கள், சங்கத்தில் உறுப்பினராக உள்ளவர்கள் மட்டும்தான் இங்கு பயணிகளை ஏற்ற வேண்டும், மற்ற ஆட்டோ ஓட்டுநர்கள் பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடாது என்று ஆனந்திடம் தெரிவித்துள்ளனர். ஆனால் ஆனந்த் இதை கண்டுகொள்ளாமல் பேருந்து நிலையம் அருகில் இருந்து தொடர்ந்து பயணிகளை ஏற்றிச் சென்று வந்துள்ளார். இதுதொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு, ஆனந்திற்கும் மற்றொரு ஆட்டோ டிரைவர் பாஸ்கர் (40) என்பவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆனந்த், தனது நண்பர்களை வைத்து பாஸ்கரை தாக்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வியாழக்கிழமை அதிகாலை 12.30 மணியளவில் ஆனந்த் பயணிகளை ஏற்றிச் செல்வதற்காக திருவண்ணாமலை பேருந்து நிலையம் அருகே சென்றுள்ளார். அங்கு சென்ற பாஸ்கர் ஆட்டோவில் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஆனந்தை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டார்.  தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவண்ணாமலை கிழக்கு காவல் துறையினர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஆனந்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஆனந்த்  உயிரிழந்தார். புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த பாஸ்கரை கைது செய்தனர்.