tamilnadu

சிதிலமடைந்த நிலையில் கல்லூரி மாணவர் விடுதி சீரமைக்கப்படுமா?

திருப்பூர், மே 4 –திருப்பூர் காலேஜ் ரோட்டில் அமைந்துள்ள பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை கல்லூரி மாணவர் விடுதி சீரமைக்கப்படுமா என்று மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர். திருப்பூர் சிக்கண்ணா அரசு கல்லூரியில் படிக்கும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்காக இந்த விடுதி உள்ளது. 26 அறைகள் கொண்ட இந்த விடுதியில் 150–க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கிப் படித்து வருகின்றனர். ஆனால் இந்த விடுதியில் போதுமான அடிப்படை வசதிகள் இல்லை. குறிப்பாக விடுதி கட்டிடத்தின் காங்கிரீட் மேல்தளம் மிகவும் சேதமடைந்துள்ளது. ஜன்னல் சிலாப்புகள் உடைந்து அபாயகரமாக காணப்படுகிறது. மழைக்காலத்தில் மழைநீர் சுவர் வழியாக கசிந்து அறைக்குள் வருவதால் சிரமம் ஏற்படுகிறது என மாணவர்கள் கூறுகின்றனர்.அதுபோல் மாணவர்களுக்கான கழிவறைகள் மிக மோசமான நிலையில் உள்ளன. சுகாதாரமில்லாமலும், சீரான தண்ணீர் வசதியும் இல்லை. குழாய்கள் சேதமடைந்து இருப்பதால் வாளியில் தண்ணீரை கொண்டு சென்றுதான் பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது. தண்ணீர் தொட்டியை சரிவர சுத்தம் செய்யாமல் பாசி படர்ந்து காணப்படுகிறது. இந்த விடுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சீரமைப்பு பணிகள் நடந்துள்ளன. ஆனால் விடுதியின் முன்புறம் மட்டும் பெயரளவுக்கு சீரமைப்பு செய்து வர்ணம் பூசப்பட்டுள்ளது. விடுதியின் பின்புறம், உட்புறத்தில் கான்கிரீட் மேற்தளம் உடைந்துள்ளதை சரி செய்யவில்லை. முதலாமாண்டு, மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு வரும் 9ஆம் தேதி தேர்வு தொடங்க உள்ளது. மாணவர்கள் விடுதியில் தங்க கூடாது. வீட்டுக்கு செல்லுமாறு விடுதி காப்பாளர் கூறுகிறார். ஆனால் நாங்கள் ஊருக்கு சென்று திரும்புவது சிரமமாக இருப்பதால் 50–க்கும் மேற்பட்டவர்கள் விடுதியில் உள்ளோம். நாங்கள் இங்கு எங்களுடைய சொந்த முயற்சியில் தான் தங்கி உள்ளோம். விடுதியில் போதுமான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும், சேதமடைந்து காணப்படும் கட்டிடத்தை மாவட்ட நிர்வாகம் சீரமைக்க முன்வர வேண்டும் என்று மாணவர்கள் கூறினர்.

;