tamilnadu

திருப்பூர் முக்கிய செய்திகள்

தொழிலில் நஷ்டம்: வியாபாரி தற்கொலை

திருப்பூர், ஏப்.27-தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால், திருப்பூரில் வியாபாரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருப்பூர் பிச்சம்பாளையம் கந்தசாமி லே-அவுட் பகுதியை சேர்ந்தவர் கணேஷ் (38). பனியன் துணிகளை வாங்கி விற்பனை செய்து வந்தார். இந்நிலையில் இவருடைய தொழிலில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் கணேஷ் மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையறிந்த திருப்பூர் வடக்கு காவல்துறையினர் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  


 மோட்டார் வாகன விபத்து வழக்கு: ஆலோசனைக் கூட்டம்

திருப்பூர், ஏப்.27-திருப்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விரைந்து முடிப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் வெள்ளியன்று நடைபெற்றது. திருப்பூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில் வரும் மே.13 ஆம் தேதி மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது. இதில், மோட்டார் வாகன வழக்குகளை விரைந்து முடிக்குமாறு மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான எஸ்.அல்லி உத்தரவிட்டிருந்தார். அதன்பேரில், 3 ஆவது கூடுதல் மாவட்ட நீதிபதி கருணாநிதி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் வெள்ளியன்று நடைபெற்றது. இதில், மே 13 ஆம் தேதி நடைபெறும் மக்கள் நீதிமன்றத்தில் மோட்டார் வாகன விபத்து தொடர்பாக நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு எவ்வாறு சமரசத் தீர்வு காண்பது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.  இதன் மூலமாக பாதிக்கப்பட்டவர்கள், அவர்களது குடும்பத்தினருக்கு உரிய இழப்பீட்டுத் தொகையை பெற்றுத் தருவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. இக்கூட்டத்தில், வழக்குகளை கண்டறியும் குழுவில் உறுப்பினர்களாக உள்ள நீதிபதிகள் அழகேசன், உதயசூரியா, காப்பீட்டு நிறுவன மேலாளர்கள், காப்பீட்டு நிறுவன வழக்குரைஞர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் மோசடி:பெண் அதிகாரி தற்காலிக இடைநீக்கம்

திருப்பூர், ஏப்.27-திருப்பூர் வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் மோசடியில் ஈடுபட்ட பெண் அதிகாரி தற்காலிக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். திருப்பூர் மாவட்டம், முதலிபாளையம் அருகே உள்ள மாணிக்காபுரத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது. கடந்த மார்ச் மாதத்துக்கு முன்பு வரை 3 ஆண்டுகள் சங்கத்தில் செயலாளராக இருந்தவர் தமிழ்ச்செல்வி. இவர் மீது உறுப்பினர்கள் ரூ.1கோடி பணத்தை மோசடி செய்ததாக புகார் தெரிவித்தனர்.இந்நிலையில், கடந்தாண்டு தணிக்கையின்போது பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதை ஆதாரத்துடன் கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக நடந்த விசாரணையில் தமிழ்ச்செல்வி மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் பிரபு, மோசடியில் ஈடுபட்ட தமிழ்ச்செல்வியை தற்காலிக இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார். மேலும் அவரிடமிருந்து ரூ.21 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

;