உடுமலை, மார்ச் 21- கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சந்தைகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டதால் சனி யன்று உடுமலை சந்தை வெறிச்சோடி காணப்பட்டது. உடுமலை நகராட்சி சந்தை வளாகமானது 34 கமிஷன் கடைகள் மற்றும் 314 நிரந்தரக் கடைகளுடன் 16 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது. உடுமலை சுற்றுப் பகுதியில் விளையும் தக்காளி, வெங்காயம், முருங்கை, கத்தரி, தேங்காய் என தினமும் 500 டன்னுக்கும் மேற்பட்ட காய்கறி வகைகள் வரத்து உள்ளது. உள்ளூர் வியாபாரிகள் மட்டு மின்றி, பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கேரளா மாநிலம் மறையூர், மூணாறு பகுதிகளிலிருந்தும் வியாபாரிகள் வந்து கொள்முதல் செய்கின்றனர். இந்நிலையில், கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வர்த்தக நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. அனைத்து வார சந்தைகளையும் மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் மார்ச் 21 ஆம் தேதி இன்று முதல் 23 ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு சந்தை மூடப்படுகிறது. மூன்று நாட்கள் தொடர் விடு முறை விடப்பட்டுள்ளதால் பரபரப்பாக காணப்படும் சந்தை வளாகம் சனியன்று வெறிச்சோடி காணப்பட்டது.