tamilnadu

img

புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவ கோரி திருப்பூர் மாவட்ட ஆட்சியருக்கு கே.சுப்பாராயன் எம்பி கடிதம்

திருப்பூரில் புலம் பெயர்ந்து வந்துள்ள தொழிலாளர்களுக்கு உணவு, இருப்பிட ஏற்பாடு செய்து தர கே.சுப்பராயன் எம்.பி. திருப்பூர் மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் எழுதியுள்ளார். ஞாயிறன்று ஆட்சியர் க.விஜயகார்த்திகேயனுக்கு எழுதியுள்ள கடிதத்தில் சுப்பராயன் கூறியிருப்பதாவது: புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பலர் சொந்த ஊர்களுக்குச் செல்ல முடியாமல் திருப்பூரில் தங்கியுள்ளனர். இதுவரை அவர்கள் கையில் இருந்த பணத்தை வைத்து உணவைச் சமைத்து உண்டு வந்தனர். தற்போது கையில் இருந்த பணமும், பொருளும் தீர்ந்துவிட்ட நிலையில் பசி, பட்டினியில் சொல்ல முடியாத துயரத்துக்கு ஆளாகியுள்ளனர். இவர்களிடம் ரேசன் கார்டுகளும் இல்லை. எனவே ஆட்சியர், இவர்கள் நிலை குறித்த விபரங்களை உடனடியாகச் சேகரிக்க வேண்டும். அவர்கள் உயிர் வாழ்வதற்குத் தேவையான உணவுப் பொருட்களை போர்க்கால வேகத்தில் உடன் வழங்க வேண்டும், பாதுகாப்பாக வாழ்வதற்கு உரிய இடங்களை உத்தரவாதம் செய்து தர வேண்டும். தடை உத்தரவு நீங்கும் வரை அந்த தொழிலாளர்களுக்குத் தேவையான அரிசி, பருப்பு, எண்ணெய், காய்கறிகள் உட்பட அத்தியாவசிய உணவுப் பொருட்களும், எரிபொருளும் தொடர்ச்சியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், சொந்த ஊர்களுக்குச் செல்ல விரும்புவோரை பட்டியலிட்டு அவரவர் ஊர்களுக்குத் தகுந்த பாதுகாப்புடன் அனுப்பி வைக்க உரிய ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கே.சுப்பராயன் கேட்டுக் கொண்டுள்ளார்.