அவிநாசி ஏப்.26-
அவிநாசி பகுதியில் எந்தவித முன்னறிவிப்புமின்றி மருந்துக் கடைகள் திடிரென அடைக்கப்பட்டதால் பொது மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
நாடு முழுவதும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் வெளியில் செல்லாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கின்றனர். இருப்பினும் , மருந்துக் கடைகள் போன்றவை திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் அவிநாசி ஒன்றிய பகுதிகளில் எந்தவித முன்னறிவிப்புமின்றி மருந்துக்கடைகள் திடீரென்று அடைத்தனர். இதனால் சிறு சிறு உடல் உபாதைகள் ஏற்பட்டோர் மற்றும் நோயாளிகள் மருந்துக் கடைகளில் மாத்திரை வாங்கச் செல்லும்போது கடைகள் அடைக்கப்பட்டிருந்ததால் பெரும் சிரமத்திற்குள்ளாகினர். ஆகவே, உடனடியாக மாவட்ட ஆட்சியர் தலையிட்டு மருந்துக் கடைகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.