tamilnadu

img

குழிதோண்டுவதற்கு வெடி பொருள் பயன்படுத்த பொதுமக்கள் எதிர்ப்பு

அவிநாசி, மே 4-அவிநாசி பேரூராட்சியில் மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டும் பணிக்காக குழி தோண்டுவதற்கு கடந்த திங்களன்று பாறைகளில் வெடி வைப்பதற்கு ஒப்பந்ததாரர் முயற்சித்தார். இதையறிந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மீண்டும் சனியன்று வெடி வைக்கும் முயற்சித்தனர். ஆனால் பொதுமக்களின எதிர்ப்பின் காரணமாக வெடி வைத்து குழி தோண்டும் முயற்சி கைவிடப்பட்டது. அவிநாசி பேரூராட்சி குடிநீர் பற்றாக்குறையைப் போக்க திருப்பூர் 4ஆவது குடிநீர் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் மேல்நிலை தொட்டிகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அவிநாசி, அன்னூர், மேப்பேரிபாளையம் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் ரூ.243 கோடி மதிப்பில் மேல்நிலை தொட்டி கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. அவிநாசி பேரூராட்சிப் பகுதியில் மட்டும் ரூ.53 கோடி மதிப்பில் ராயம்பாளையம், காமராஜர் நகர், சீனிவாசபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மேல் நிலை குடிநீர்த் தேக்கத் தொட்டிகள் கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன. இதில், அவிநாசி பேரூராட்சி 13ஆவது வார்டு வஉசி பூங்கா வளாகத்தில் 5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 16 மீ உயரம் கொண்ட மேல்நிலை நீர் தேக்கத்தொட்டி கட்ட திட்டமிடப்பட்டு, பணி துவங்கியது. நிலத்தடியில் பாறைகள் தென்பட்டதால், அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. அப்போது நிலத்தில் குழி தோண்ட முயன்றபோது இரண்டு அடி ஆழத்திலேயே பாறைகள் தென்பட்டது. இவற்றை வெடி (ஜெலெட்டின் குச்சி) வைத்து தகர்க்க ஒப்பந்ததாரர் திட்டமிட்டார். அதன்படி, பாறைகளில் துளையிட்டு அதில் 130 ஜெலெட்டின் குச்சிகளை வைத்தார். இதையறிந்த அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அவிநாசி பேரூராட்சி நிர்வாகத்தினர் பொதுமக்களிடயே பேச்சுவார்த்தை ஈடுபட்டனர். இதில் பாறைகளில் துளையிடும் கருவி மூலம் குழிதோண்டுவதென முடிவு செய்தனர். இந்நிலையில், சனியன்று குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி அன்பரசு வெடி வைப்பது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார். அப்போது பொதுமக்கள் மீண்டும் எதிர்ப்பு தெரிவித்தனர். வெடி வைத்து குழி தோண்டு முயற்சி கைவிடப்பட்டது.

;