tamilnadu

img

அமராவதி அணை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை  

அமராவதி ஆற்றின் உப நதிகளான வரதமா நதி, குதிரை ஆறு ஆகியவற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு பொதுப்பணித்துறையினர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.  

உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையின் மூலம் திருப்பூர், கரூர் மாவட்டத்தில் உள்ள 55 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருவதுடன், நூற்றுக்கணக்கான கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது.  

கடந்த மே மாதம், பழைய, புதிய ஆயக்கட்டு பாசன நிலங்களிலுள்ள நிலைப்பயிர்களை காப்பதற்காகவும், குடிநீர் தேவைக்காகவும் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.   இந்நிலையில், அமராவதி அணை நீர்பிடிப்பு பகுதிகளான மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பருவ மழை தீவிரமடைந்துள்ளதால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து முழு கொள்ளளவை எட்டியுள்ளது.  

மேலும் கடந்த ஒரு வாரமாக, கேரளா மாநிலம் மறையூர், காந்தலூர் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால், பிரதான நீர்வரத்து ஆறான, பாம்பாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.  

இதனால் 90 அடி உயரமுள்ள அணையின் நீர்மட்டம்87 அடியை தாண்டியது. முழுக்கொள்ளளவை எட்டும் நிலை ஏற்பட்டதால் அணையிலிருந்து 4 மதகுகள் வழியாக அமராவதி ஆற்றில் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 11 ஆயிரத்து 700 கன அடியாகவும் இருந்தது.  மேலும் அமராவதி ஆற்றின் உப நதிகளான வரதமா நதி, குதிரை ஆறு ஆகியவற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக அமராவதி ஆற்றின் கரையோர மக்களுக்கு பொதுப்பணித்துறையினர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர். தொடர்ந்து பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

;