tamilnadu

பொது இடங்களில் கிருமி நாசினியை தொடர்ந்து தெளிக்க வலியுறுத்தல்

திருப்பூர், மார்ச் 15 – உலக நாடுகளில் கோவிட் – 19 வைரஸ் கிருமிகளின் தாக்கம் அதிகரித்திருக்கும் நிலையில் பொதுமக்கள் கூடும் அரசு அலுவலகங்கள், பேருந்து நிலையங்கள், பேருந்து நிழற்குடைகள் உள்ளிட்ட இடங்களில் பவர் ஸ்பிரேயர் மூலம் காலை, மாலை ஆகிய இரு வேளைகளில் கிருமி நாசினியைத் தொடர்ந்து தெளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என நுகர்வோர் அமைப்பு வலியுறுத்தி உள்ளது. உலக நுகர்வோர் தினமான மார்ச் 15 ஞாயிறன்று திருமுருகன்பூண்டி இந்தியன் ஆயில் வளாகத்தில் இந்த நுகர்வோர் அமைப்பின் செயற்குழுக் கூட்டம் தலை வர் எஸ்.காதர்பாட்சா தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட வழங்கல் அலுவலர் எம்.முருகன் நுகர்வோர் விழிப் புணர்வு பற்றி உரையாற்றினார். பேருந்து பயணிகளின் பொது நலன் கருதி நாள்தோறும் பவர் ஸ்பிரேயர் மூலம் பேருந்துகளில் காலை, மாலை ஆகிய இரு வேளைகளில் கிருமி நாசினி தெளித்து பொது மக்கள் அச்சப்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், அத்துடன் பொது இடங்களிலும் கோவிட் 19 வைரஸ் நோய்க் கிருமி தடுப்பாக கிருமி நாசினி தெளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் நுக்ரவோர் அமைப்பின் பொதுச் செயலாளர் ராமலிங்கம், பொருளாளர் சென்னியப்பன், அமைப்புச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, செயற்குழு உறுப்பினர் தனசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர். வழக்கறிஞர் கவிதா நன்றி கூறினார்.

;