tamilnadu

img

சாதி பெயரை சொல்லி ஆட்டோ ஓட்டுநர் மீது தாக்குதல் நடவடிக்கை எடுக்கக்கோரி சார் ஆட்சியரிடம் ஆட்டோ ஓட்டுநர்கள் புகார் மனு

வெள்ளகோவில், மே 7-வெள்ளகோவில் பகுதியில் ஆட்டோ ஓட்டுநரை சாதி பெயர் சொல்லி திட்டியும், தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆட்டோ ஓட்டுநர்கள் சார் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். இதுகுறித்து தலித் விடுதலை இயக்கம் மாநில பொது செயலாளர் கருப்பையா தலைமையில், சார் ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் பகுதியில் 1996ஆம் ஆண்டு வெள்ளகோவில் டவுன்&பஸ்டேண்ட நண்பர்கள் ஆட்டோ ஓட்டுநர் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் என்ற பெயரில் துவங்கப்பட்டது. இச்சங்கத்தில் பெரும்பான்மையாக அருந்ததியர்கள் உறுப்பினராக உள்ளனர். இந்நிலையில் தாராபுரம், பொன்னிவாடி கிராமத்தை சேர்ந்த முத்துச்சாமி கவுண்டர் மகன் ரவிச்சந்திரன் 2007 ஆம் ஆண்டு சங்கத்தில் உறுப்பினராக இணைந்தார். இவர் பின்னாளில் இந்துமுன்னணி அமைப்பில் இணைந்து கொண்டு, மேலும் சிலரை சேர்த்துக்கொண்டு சங்கத்தின் விதிமுறைகளுக்கு எதிராக செயல்பட்டுள்ளார். இதனால் சங்க உறுப்பினர்கள் கூட்டத்தை கூட்டி ரவிச்சந்திரனை நீக்கிவிட்டனர். இதுகுறித்து வெள்ளகோவில் காவல்நிலையத்தில் அக்டோபர் 4ந் தேதி ரவிச்சந்திரன் புகார் அளித்தார். இதில் இரு தரப்பினரையும் அழைத்து காவல்துறை கண்காணிப்பாளர் முன்னிலையில்பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் ரவிச்சந்திரன் புகார் மனுவை அக்டோபர் 5ந் தேதி வாபஸ் பெற்று கொள்ளவும், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இடையூறு இல்லாமல் நூறு மீட்டருக்கு அப்பால் நிறுத்தி ஆட்டோ ஓட்டிக்கொள்ளலாம் என எழுத்துப்பூர்வமாக எழுதிக்கொடுத்தார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ரவிச்சந்திரன் ஆட்டோ ஓட்டுநர் சண்முகத்தை சாதி பெயர் சொல்லி திட்டியதோடு தாக்கினார். இதுகுறித்து வெள்ளகோவில் காவல்நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது. பின்னர் காவல்துறை துணை கண்காணிப்பாளரிரிடம் மனு அளிக்கப்பட்டது. ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனையடுத்து ஆட்டோ ஓட்டுநர் பிரபு என்பவரையும் தாக்க முயன்றார். இதுகுறித்தும் காவல்துறை துணை கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. இந்நிலையில், ரவிச்சந்திரன் திங்களன்று மக்கள் சேவா சங்கம் என்ற பெயரில் ஆட்டோ சங்க பெயர் பலகை வைத்து, தகராறில் ஈடுபட்டு நண்பர்கள் ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தினருக்கு இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர். இதனால், 30 ஆண்டுகளுக்கு மேலாக இப்பகுதியில் ஆட்டோ இயக்கி வரும் ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. உடனடியாக சார் ஆட்சியர் நேரடியாக தலையீடு செய்து மக்கள் சேவா சங்க ஆட்டோ ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சார் ஆட்சியரிடம் அளித்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மனுவை பெற்றுக்கொண்ட சார் ஆட்சியர் நேரில் வந்து விசாரிப்பதாக தெரிவித்துள்ளார்.

;