tamilnadu

கடையம் வட்டார கிராமங்களில் கடும் குடிநீர் தட்டுப்பாடு

திருநெல்வேலி, ஜூன் 6-நெல்லை மாவட்டம் கடையம் வட்டார கிராமங்களில் சின்டெக்ஸ் குடிநீர் தொட்டிகளை முறையாக பராமரிக்காததால் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. ஒரு குடம் தண்ணீரை ரூ.10 கொடுத்து வாங்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. கடையம் பகுதியை வளம்கொழிக்கச் செய்யும் ராமநதி, கடனாநதி அணைகள் வறண்டதால் ஆறுகள், குளங்கள் தண்ணீர் இன்றி காணப்படுகின்றன. இதனால் உறை கிணறுகளில் ஊற்று எடுப்பது நின்று தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. கடையம் அருகே லட்சுமியூரில் சுமார் 500 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதி மக்களுக்கு ஊராட்சி சார்பில் முறையாக குடிநீர் வழங்கி வந்த நிலையில், கடந்த 25 நாட்களாக குடிநீர் விநியோகிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்த பகுதியில் 10 சின்டெக்ஸ் மற்றும் குடிநீர் தொட்டிகள் இருந்தும் மெயின் ரோட்டில் உள்ள ஒரே ஒரு சின்டெக்ஸ் குடிநீர் தொட்டியை நம்பியே லட்சுமியூர் மக்கள் உள்ளனர். இங்குள்ள ஆறுமுகப்பட்டி தெருவில் கட்டப்பட்ட குடிநீர் தொட்டி பயன்பாட்டிற்கு வராமல் காட்சிப்பொருளாகவே உள்ளது. சிவநாடானூர், அணைந்தபெருமாள் நாடானூர், செல்ல பிள்ளையார்குளம், ராமச்சந்திரபுரம், வள்ளியம்மாள்புரம், வடமலைப்பட்டி, மணல்காட்டானூர், ஐந்தாங்கட்டளை ஆகிய கிராமங்களிலும் குடிக்க தண்ணீரின்றி கிராம மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். கிராமங்களில் உள்ள சின்டெக்ஸ் குடிநீர் தொட்டிகளில் மோட்டார் பழுது, ஆழ்துளை குழாயில் தண்ணீர் இல்லாதது அல்லது கூடுதல் குழாய் அமைக்காதது என பெரும்பாலான சின்டெக்ஸ் தொட்டிகள் பயன்பாட்டில் இல்லாமல் காட்சிப்பொருளாக இருந்து வருகிறது. இந்த பகுதி மக்களின் அடிப்படை தேவைக்கு கூட தண்ணீரின்றி சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். சுமார் 400 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணறுகளிலும் தண்ணீர் அதலபாதாளத்திற்கு சென்று விட்டது. தற்போது இந்த பகுதி கிராம மக்கள், ராம் நகரில் உள்ள தாமிரபரணி கூட்டுக்குடிநீரை நம்பித்தான் வாழ்க்கை நடத்தி வருகின்றனர். இந்த பகுதியில் இருந்து சுமார் 5 முதல் 10 கிலோ மீட்டர் வரை சைக்கிள், ஆட்டோ, லாரி மூலமாக சென்று குடிப்பதற்கு தண்ணீர் எடுத்து வருகின்றனர். ஆட்டோக்களில் ஒரு குடம் தண்ணீருக்கு ரூ.10 விலை கொடுத்து  வாங்குகின்றனர். குடிநீர் தட்டுப்பாட்டிற்கு மழையில்லாததே காரணமென கூறப்பட்டாலும், அரசு முன் எச்சரிக்கையாக அனைத்து கிராமங்களிலும் சின்டெக்ஸ் குடிநீர் தொட்டியை முறையாக பராமரித்திருந்தால் தற்போது நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளித்திருக்கலாம் என கிராம மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம், இப்பிரச்சனையில் கவனம் செலுத்தி குடிநீர் தொட்டிகளை பராமரித்து மக்கள் பயன்பாட்டிற்கு விட வேண்டும் என அனைத்து தரப்பு மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

;