திருநெல்வேலி, ஜூலை 1- மேற்கு தொடர்ச்சி மலையில் பரவலாக மழை பெய்து வருவதால் பாபநாசம் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழை ஜூன் முதல் வாரத்தில் தொடங்கும். இதையொட்டி நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் உள்ள அருவிகள், அணைகளுக்கு நீர்வரத்து ஏற்பட்டு குளிர்ச்சியான சூழல் நிலவும். ஆனால் இந்த ஆண்டு உற்சாகத்துடன் தொடங்கினாலும் அதன்பிறகு மழை பெய்யாமல் தென்மேற்கு பருவமழை பொய்த்து விட்டது என்றே கூறலாம். 2 நாட்களுக்கு முன் இரவு மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பரவலாக மழை பெய்தது. இதையொட்டி பாபநாசம் அணைக்கு நீர்வரத்து சற்று அதிகரித்து உள்ளது. பாபநாசம் அணைக்கு வினா டிக்கு 521 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.தற்போது வினாடிக்கு 667 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து பாசனம், குடிநீருக்காக 356 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதேபோல் தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள ராமநதி அணைக்கும் நீர்வரத்து வினாடிக்கு 3 கன அடியில் இருந்து 18 கன அடியாக அதிகரித்துள்ளது.