tamilnadu

img

முன்னாள் மேயர் உள்பட 3 பேர் படுகொலை விசாரணையில் முன்னேற்றமில்லை

திருநெல்வேலி:
நெல்லையில் முன்னாள் பெண் மேயர் உமா மகேசுவரி உள்பட 3 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில், நெருங்கிய குடும்ப உறவினர்களிடம் மீண்டும் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர் நெல்லை மாநகராட்சி முன்னாள் மேயரான தி.மு.க.வைச் சேர்ந்த உமாமகேஸ்வரி (62), அவரது கணவர் முருகசங்கரன் (72), வேலைக்கார பெண் மாரி (38) ஆகிய 3 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் இதுவரை துப்பு துலங்கவில்லை. வட மாநில கொள்ளை கும்பலா, சொத்து பிரச்சனையா, அரசியலுக்காக பணம் கொடுத்த பிரச்சனையா என்று தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இது தொடர்பாக செல்போனில் பேசிய விபரம், வங்கி பரிவர்த்தனைகள், சொத்துக்கள் கை மாறிய ஆவணங்கள் போன்றவற்றை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.பொதுவாக 3 பேர்களை கொலை செய்யும்போது கொலையாளிகளின் ஏதாவது ஒரு தடயம் சம்பவ இடத்தில் கிடக்கும். ஆனால் இந்த கொலைகளில் சம்பவ இடத்தில் எந்த தடயமும் இல்லை. மேலும் கொலையாளிகள் அங்கு சுமார் அரைமணி நேரத்திற்கும் மேல் தங்கி இருந்து தடயங்களை அழித்து விட்டு, நிதானமாக சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

மேலும் கொலை செய்யப்பட்ட முருக சங்கரன் உடலில் 40-க்கும் மேற்பட்ட கத்தி குத்துகள் ஆக்ரோசமாக விழுந்துள்ளன. இதனால் தனிப்பட்ட விரோதம் காரணமாக பழி வாங்கும் நோக்கிலேயே இப்படி சம்பவங்கள் நடக்கும் என்று போலீசார் கருதுகிறார்கள். கொள்ளைக் கும்பல் வந்தால், இத்தனை கத்தி குத்துகள் விழ வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது.இதனால் இதுவரை இல்லாத வகையில் புதிய கோணத்தில் விசாரணை நடத்த தனிப்படை போலீசார் முடிவு செய்துள்ளனர். இதைத் தொடர்ந்து பெண் தொடர்பு அல்லது பெண்கள் பிரச்சனை காரணமாக இந்த கொலை நடந்திருக்குமா? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.இதற்கு முன்பு முன்னாள் மேயர் உமாமகேஸ்வரி வீட்டில் மற்றொரு பெண் வேலை பார்த்ததாகவும், அந்த பெண் வேலையை விட்டு நின்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது. எனவே அது சம்பந்தமாக ஏதாவது பிரச்சனையில் கொலை நடந்து இருக்குமா என்ற புதிய கோணத்தில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.இதுவரை பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தியும் துப்பு துலங்காமல் தொடர்ந்து இழுபறி நிலை நீடிப்பதால், நெருங்கிய குடும்ப உறவினர்களிடம் மீண்டும் விசாரணை நடத்தவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

;