tamilnadu

img

ஒரே வேலை ஒரே ஊதியம் எப்போது? - எஸ்.கவிவர்மன் சிபிஎம் புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர்

அதிகாலை துவங்கி 9 மணிவரை அனைத்து பேருந்து நிறுத்தங்களும் வண்ணமயமாகும். பட்டாம் பூச்சிகள் போல படபடத்துக்கொண்டு வேலைத்தளங்களுக்கு பயணிக்கும் பெண்களின் கூட்டத்தை பேருந்துகள் நிரப்பிக்கொள்ளும். கவனிக்கப்பட வேண்டிய அவர்களின் கவலைகளை யார் கண்டுகொள்வது என்ற கேள்வியோடு துவங்குகிறேன். ஒரே நாடு, ஒரே கார்டு என்கிறது அரசு, ஆனால் ஒரே வேலை, ஒரே சம்பளம் என்பதில் பாலினப்பாகுபாடு மிக அழுத்தமாக கடைபிடிக்கப்படுகிறது. ஒரே வேலையில் சமமான உழைப்பு இருக்கும்போது பெண்கள் சம்பளம் மட்டும் குறைவாக இருப்பது விவசாய வேலையில் இருந்து கார்ப்பரேட் நிறுவனங்கள் வரை தொடர்கிறது. அதேபோல் பெண்கள் பார்க்கும் வேலை, ஆண்களுக்கான வேலை என பாகுபாடுகள் இந்தியாவில் அதிகமாக உள்ளது. விவசாய வேலை முதல் விண்வெளி ஆராய்ச்சிவரை ஆண்களுக்கு இணையாக பெண்கள் சாதனைபடைக்கின்றனர். ஆனால்  சித்தாளாக வேலைசெய்யும் பெண் ஒருநாளும் கொத்தனாராக மாறமுடியாது. ஒரே வேலை ஒரே சம்பளம் என்ற நிலையை அடைய, பாலின அடிப்படையில் வேலைக்கு தேர்வுசெய்வதை மாற்றவேண்டும். பெண்களின் திறமைக்கேற்ற வேலை என்பதைவிட வீட்டு வருமானத்திற்கு ஏதோ ஒரு வேலை எனபார்க்கப்படுகிறது.  சிறு நகரங்கள், கிராமப்புறங்களில் இயங்கும் தனியார் கல்வி நிறுவனங்களில் ஏராளமாக பெண்கள் பணியாற்றுகின்றனர். அவர்களின் ஊதியம் ரூ.3000-த்தில் துவங்கி 5000 வரை பெரும்பாலும் உள்ளது. துணிக்கடைகள், கம்யூட்டர் மையங்கள், தனியார் மருத்துவமனைகள், விவசாய வேலைகள், மருந்துக்கடைகள் போன்ற பணிகளில் பெண்கள் அதிகம் ஈடுபடுகின்றனர். குறைவான ஊதியத்தில் அதிக அளவு உழைப்பைச் செலுத்துகின்றனர். இப்படி பல துறைகளில் பெண்கள் தங்களை வளர்த்துக்கொண்டு சென்றாலும் கூட, பெண்களின் சம்பளத்தில் மட்டும் பாரபட்சம் நீடிக்கிறது. இப்படியான தனியார் துறைகளில் எந்த பணிப்பாதுகாப்பும் பெண்களுக்கு இல்லை. வரையறை செய்யப்பட்ட வருமானமும் இல்லை. இது மிகப்பெரிய சமூக அவலம். சட்டம், அரசு, அதிகாரம் இந்த வட்டங்களுக்கு வெளியே ஏழை நடுத்தர குடும்ப பெண்களின் வேலைத்தளம் மிகவும் பரிதாபகரமாக உள்ளது. 

அரசு துறைகள் தவிர்த்து அனைத்துத் துறைகளிலும் இந்நிலை தொடர்கிறது. பன்னாட்டுத் தொழிலாளர் அமைப்பு  மேற்கொண்ட ஆய்வின் முடிவுகள் இன்னும் அதிர்ச்சி தருகின்றன. உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நிறு வனங்களில், ஆண் - பெண் ஊதியப் பாகுபாடு பற்றி அவர்கள் நடத்திய ஆய்வில், வளரும் பொருளாதார நாடுகளில் ஆண் - பெண் சம்பள வித்தியாசம் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா 2-ம் இடத்தில் உள்ளது. இந்தியாவில் ஆண் - பெண் இருவருக்குமான சம்பள வித்தியாசம் 33 சதவிகிதம் என்பதையும் அந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.  கடந்த 15 ஆண்டுகளாக உயர்கல்வி படித்த பெண்களின் எண்ணிக்கை அதிகரித்தே வருகிறது. அதேபோல பட்டப்படிப்பு, செவிலியர், ஆசிரியர் படிப்பு எனப் படித்த பெண்களின் சதவிகிதம் ஆண்டுதோறும் அதிகரித்தவண்ணமே இருக்கிறது. ஆனாலும், உயர்பதவிகளிலும் பெண்களின் நிலை சொல்லிக்கொள்ளும்படி இல்லை. பொதுவாக செவிலியர், தொடக்கப்பள்ளி ஆசிரியர் பணிகளில் அதிக பெண்கள் கவனம் குவிப்பது, சில துறைகளே!. ‘அது ஆண்களுக் கானது’ என அவர்கள் விலகிச்செல்வது உள்ளிட்ட காரணங்களையும் முன் வைக்கிறது இந்த ஆய்வு. அரசாங்கம், தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களுக்கான ஊதிய வரன்முறை, பணிப்பாதுகாப்பு ஆகியவற்றில் உறுதியாகத் தலையிட வேண்டும். பாரபட்சம் போக்கப்பட வேண்டும்.