tamilnadu

துப்புரவுத் தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை கோரி நாளை போராட்டம்

திருச்சிராப்பள்ளி, ஜன.31- சிஐடியு திருச்சி மாநகர் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் மாவட்ட அலுவலகத்தில் மாவட்டத் தலைவர் ராமர் தலைமையில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் திருச்சி மாநகராட்சியில் 1500-க்கும் மேற்பட்ட துப்புரவு தொழிலாளர்கள் மகளிர் சுய உதவிக்குழு மூலமாக பல ஆண்டு காலமாக பணிபுரிந்து வருகின்றனர். அதில்  பெரும்பகுதியினர் பெண்கள். துப்புரவு தொழிலாளர்களுக்கு சம்பளம், இஎஸ்ஐ, பிஎப் உட்பட சலுகைகளை வழங்க வேண்டுமென துப்புரவு தொழிலாளர் சங்கம் தொடர்ந்து போராடி வந்ததன் விளைவாக மாவட்ட ஆட்சியர் குறைந்தபட்ச சம்பளம் ரூ.500 வழங்க உத்தரவிட்டார். ஆட்சியர் அறிவித்த சம்பளத்தை 1.4.2019-லிருந்து வழங்காமல் மாநகராட்சி நிர்வாகம் காலம் தாழ்த்தி வந்தது. இதனையடுத்து நீண்ட போராட்டத்தையடுத்து 1.11.19 முதல் ரூ.500 சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. ஜனவரி 8 அன்று நடைபெற்ற அகில இந்திய வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்ற துப்புரவுத் தொழிலாளர் 14 பெண்கள் உள்பட 20 பேரை எவ்வித முன்னறிவிப்பும் இன்றி 9.1.2020 அன்று முதல் வேலைக்கு வரவேண்டாம் என மாநகராட்சி அரியமங்கலம் கோட்ட உதவி ஆணையர் அறிவித்துள்ளார்.  இதுகுறித்து பல்வேறு கட்டப் போராட்டங்கள் மற்றும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. மேலும் மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் ஆகியோரிடம் மனு கொடுக்கப்பட்டது. ஆனால் இதுநாள் வரை வேலை வழங்கப்படவில்லை. இதனால் அந்த 20 குடும்பங்களும் வாழ்வாதாரமின்றி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன.  எனவே வேலை இழந்த தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்கக்கோரி வேலை இழந்த துப்புரவுத் தொழிலாளர்கள் குடும்பத்துடன் இணைந்து சிஐடியு ஆட்டோ, சுமைப்பணி, தரைக்கடை, கட்டுமானம் உள்ளிட்ட சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பிப்ரவரி 2 முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

;