tamilnadu

திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி முக்கிய செய்திகள்

சுந்தரனார் பல்கலை.யில் 5 ஆண்டு முதுநிலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்க மே 8 கடைசி நாள்

திருநெல்வேலி, மே 6 -நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் கீழ் அளிக்கப்பட்டு வரும் 5 ஆண்டு படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பங்களை அளிக்க, மே 8 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக பல்கலைக்கழக பதிவாளர் எஸ்.சந்தோஷ்பாபு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:சுந்தரனார் பல்கலைக்கழக துறைகளில் 5 ஆண்டு ஒருங்கிணைந்த முதுநிலை கணிதம், இயற்பியல், வேதியியல், மின்னணுதொடர்பியல், உயிரி தொழில்நுட்பவியல், கடல் அறிவியல் (கடல் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம்-ராஜாக்கமங்கலம்), சுற்றுச்சூழல் அறிவியல் (ஸ்ரீ பரமகல்யாணி சுற்றுச்சூழல் அறிவியல் மையம் - ஆழ்வார்குறிச்சி), வணிகவியல் பட்டப் படிப்புகளுக்கு 2019-2020-ம் கல்வியாண்டிற்கு சேர்க்கைக்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்கள் பெறப்பட்டு வருகின்றன.சிபிஎஸ்இ கல்வி முறையில் பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்களும் விண்ணப்பிக்கும் வகையில் கடைசி நாள் மே 8-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.ஐந்து ஆண்டு ஒருங்கிணைந்த முதுநிலைபட்டப் படிப்புகளுக்கான கலந்தாய்வு, அபிஷேகப்பட்டியில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் மே 10-ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும். பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல், மாற்றுச்சான்றிதழ், நன்னடத்தை சான்றிதழ், சாதிச் சான்றிதழ், ஊனமுற்றோராக இருந்தால் அதற்கான சான்றிதழ் ஆகியவற்றின் அசல் மற்றும் நகல்களை கொண்டு வர வேண்டும்.மொழிப்பாடம் தவிர்த்து மற்ற நான்குபாடங்களில் மாணவர்கள் எடுத்த மதிப்பெண்கள் அடிப்படையில் சேர்க்கை நடைபெறும். தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள் முதல் ஆண்டு கட்டணமாக ரூ.9,400அல்லது முதல் தவணையாக ரூ.4,700-ஐ பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள இந்தியன் வங்கியில் பணமாக செலுத்த வேண்டும்.தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள் அன்றையதினமே விடுதியில் சேர விண்ணப்பிக்கலாம்.கலந்தாய்விற்கு அரங்கில் மாணவர்களுடன் பெற்றோர் அல்லது பாதுகாவலர் ஒருவர் மட்டும் அனுமதிக்கப்படுவர். மே 10 ஆம் தேதி நடைபெறும் கலந்தாய்வில் கலந்துகொள்ளாத மாணவர்களுக்கு சேர்க்கைக்கான மறுவாய்ப்பு அளிக்கப்பட மாட்டாது. மேலும், இதுதொடர்பான விவரங்களுக்கு 0462 2563063 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


ஒட்டப்பிடாரம் தொகுதியில் இதுவரை ரூ.68 லட்சம் பறிமுதல்

தூத்துக்குடி, மே 6-தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் மே 19-ம் தேதி நடக்கிறது. இதனால் தேர்தல் நடத்தை விதிகளை கண்காணிக்கவும், வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுப்பதற்கும் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு இரவு பகலாக கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.அதே போன்று பாதுகாப்புப் பணிக்காக துணை ராணுவம், தமிழ்நாடு சிறப்பு போலீஸ், வெளி மாவட்ட போலீசார் என மொத்தம் சுமார் 1000 பேர் குவிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் தொகுதி முழுவதும் முக்கிய இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைத்து வாகன தணிக்கை மற்றும் கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.பறக்கும் படையிலும் துணை ராணுவத்தினர் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். ஞாயிறன்று கோடாங்கிபட்டி சோதனைச்சாவடியில் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்திக் கொண்டிருந்தபோது சென்னையில் இருந்து தூத்துக்குடி வந்த ஒரு காரை வழிமறித்து சோதனை செய்தனர். அந்த காரில் வந்த பாலசுப்ரமணியம் என்பவர் முறையான ஆவணங்கள் இன்றி ரூ.5 லட்சம் வைத்து இருந்தார். உடனடியாக அதிகாரிகள் அதனை பறிமுதல் செய்து விளாத்திகுளம் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர். இதுவரை ஒட்டப்பிடாரம் தொகுதியில் மொத்தம் ரூ.67 லட்சத்து 96 ஆயிரத்து 80 பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.


மார்க்ஸ் பிறந்த நாள் கருத்தரங்கம்

திருநெல்வேலி, மே 6-காரல் மார்க்சின் பிறந்த தின விழா கருத்தரங்கம் நெல்லை சிபிஎம் மாவட்ட குழு அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.கருத்தரங்கிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜகுரு தலைமை வகித்தார். மாவட்ட குழு உறுப்பினர் வி.பொன்ராஜ் வரவேற்றார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.சுடலைராஜ், மாவட்ட குழு உறுப்பினர்கள் பெருமாள், பீர் முகம்மது ஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் கே.ஜி.பாஸ்கரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வீ.பழனி ஆகியோர் பேசினர்.மேடை கலைவாணர் முன்னாள் எம்.எல்.ஏ என்.நன்மாறன் கருத்தரங்கில் சிறப்புரையாற்றினார். சிபிஎம் பாளை தாலுகா செயலாளர் பா.வரகுணன் நன்றி கூறினார்.

;