திருச்சிராப்பள்ளி, மே,31-அரசு இ-சேவை மற்றும் ஆதார் சேவை மையங்களை தனியாருக்கு தாரை வார்க்கக் கூடாது. ஊழியர்களிடம் சட்டவிரோதமாக பிடித்தம் செய்த ஊதியத்தை திரும்ப வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி யூனியன் ஆப் ஐடி மற்றும் ஐ.டி இ.எஸ். எம்ப்ளாயீஸ் யூனியன் சார்பில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு சங்க மாவட்ட அமைப்பாளர் அரவிந்த் தலைமை தாங்கினார். பாலா, ராமையா, ரங்கராஜ், ஜெரால்ட், பிரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர். உண்ணாவிரதத்தை சிஐடியு புறநகர் மாவட்ட செயலாளர் சிவராஜ் துவக்கி வைத்தார். சிஐடியு புறநகர் மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம் வாழ்த்துரை வழங்கினார். போராட்டத்தை பிஎச்இஎல் சிஐடியு சங்க பொதுச்செயலாளர் பிரபு முடித்து வைத்தார்.
புதுக்கோட்டை
புதுக்கோட்டையில் யூனியன் ஆப் ஐ.டி, ஐ.டி.இ.எஸ் எம்ப்ளாயீஸ் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு சிஐடியு மாவட்டச் செயலாளர் கே.முகமதலிஜின்னா தலைமை வகித்தார். போராட்டத்தை தொடங்கி வைத்து மாவட்ட நிர்வாகி ஏ.ஸ்ரீதர் உரையாற்றினார். நிர்வாகிகள் எம்.ஜியாவுதீன், சி.மாரிக்கண்ணு, எஸ்.யாசிந்த் ஆகியோர் போராட்டத்தை ஆதரித்து பேசினர். கோரிக்கைகளை விளக்கி சங்க நிர்வாகிகள் செல்வம், கனகா, முருகேசன், முருகானந்தம் உள்ளிட்டோர் பேசினர். போராட்டத்தை நிறைவு செய்து சிஐடியு மாவட்ட் தலைவர் க.செல்வராஜ் உரையாற்றினார்.