தஞ்சாவூர், ஜூலை 5- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கம் சார்பாக, தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த குறிச்சியில் உள்ள இந்தியன் வங்கி ஊழியர் சங்க (ஐபிஇஏ) பள்ளிக்கு நிதியுதவி வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கஜா புயல் நிவாரணப் பணிகளில், தமுஎகச தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டது. அரசு நிவாரணப்பொருட்கள் கொடுக்கத் தொடங்கியவுடன், தமுஎகச நிவாரணப் பொருட்கள் வழங்கும் பணியை நிறைவு செய்தது. அப்போது திரட்டப்பட்ட நிதியில் மீதமிருக்கும் ரூ.2 லட்சத்து 12 ஆயிரம் ரூபாயை பாதிக்கப்பட்ட அந்தப் பகுதியில் இருக்கும் ஏதாவது ஒரு பள்ளிக்கு வழங்குவது என்று முடிவு செய்திருந்தது. அதன் அடிப்படையில், கடந்த மாதம் ஈரோட்டில் நடைபெற்ற தமுஎகச செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு, அந்தத்தொகையை பட்டுக்கோட்டை அருகில் உள்ள குறிச்சி IBEA பள்ளிக்கு (இந்திய வங்கி ஊழியர் சங்கம் நடத்தும் பள்ளி) கொடுப்பது என்று இறுதி செய்யப்பட்டது. வெள்ளிக்கிழமை தமுஎகச மாநிலப் பொருளாளர் சு.இராமச்சந்திரன் அதற்கான காசோலையை வழங்கினார். இந்நிகழ்வில் தமுஎகச மாநில துணைப் பொதுச்செயலாளர் களப்பிரன், மாவட்டச் செயலாளர் இரா.விஜயகுமார், மாநிலக்குழு உறுப்பினர் முருக.சரவணன், பட்டுக்கோட்டை கிளைப் பொருளாளர் பக்கிரி, பள்ளி நிர்வாகிகள் சோமசுந்தரம், பாலச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.