tamilnadu

சீர்காழி ,பொன்னமராவதி ,திருச்சிராப்பள்ளி ,புதுக்கோட்டை முக்கிய செய்திகள்

புத்தூர் ஆசிரியர் கூட்டுறவு  சங்கத் தேர்தல்

சீர்காழி, ஆக.30-  நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே புத்தூரில் கொள்ளிடம் வட்டார ஆசிரியர்கள் கூட்டுறவு சிக்கனம் மற்றும் கடன் சங்கம் உள்ளது. 318 ஆசிரியர்கள் உறுப்பினர்களாக உள்ள இந்த சங்கத்திற்கான தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. தலைவர் பதவிக்கு ஆசிரியர் சண்முகசுந்தரம் தலைமையிலான ஒரு அணியினரும், ஆசிரியர் நல்லமணி தலைமையில் மற்றொரு அணியும் போட்டியிட்டனர்.  இந்நிலையில் பேச்சுவார்த்தை மூலம் தலைவர் தேர்வு செய்யும் முயற்சி தோல்வியடைந்தது.  அதையடுத்து, ஆசிரியர்கள் தேர்தலை சந்திக்க தயார் நிலையில் இருந்தனர். அதன்படி வாக்குப்பதிவு நடைபெற்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.  மொத்தமுள்ள 11 இயக்குநர்கள் தேர்வு செய்யப்பட்ட பின்பு தலைவர் தேர்தலில் ஆசிரியர் சண்முக சுந்தரத்துக்கு உறுப்பினர்கள் வாக்களித்ததைத் தொடர்ந்து சண்முகசுந்தரம் தலைவராக தேர்வு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. வெற்றி பெற்ற சண்முகசுந்தரத்துக்கு, ஆசிரியர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

விவசாயிகளுக்கு ஓய்வூதியத் திட்டம்

சீர்காழி, ஆக.30- சிறு, குறு விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு மாதம் ரூ.3 ஆயிரம் வீதம் மத்திய அரசின் பங்களிப்போடு ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது. விவசாயத் தொழில் செய்பவர் மட்டுமே இத்திட்டத்தில் பயன் பெறும் தகுதியுடையவர்.  18 முதல் 40 வயது வரை உள்ள சிறு குறு விவசாயிகள் மட்டுமே இத்திட்டத்தில் இணைய முடியும். எனவே பிரதம மந்திரியின் ஓய்வூதிய திட்டத்தில் சேர்ந்து விவசாயிகள் பயனடையலாம் என நாகை மாவட்டம் கொள்ளிடம் வட்டார வேளாண் உதவி இயக்குநர் சுப்பையன் தெரிவித்துள்ளார். 

கோவில் விழா  ஆலோசனைக் கூட்டம்

பொன்னமராவதி, ஆக.30- கொன்னையூர் முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா வரும் 8-ம் தேதி நடைபெற உள்ளது. விழா பாதுகாப்பு தொடர்பான ஆலோசனை கூட்டம், புதுக்கோட்டை பொன்னமராவதியில் வட்டாட்சியர் பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.  கோவில் செயல் அலுவலர் அழ.வைரவன், காவல் ஆய்வாளர் கருணாகரன், துணை ஆய்வாளர் பிரபாகரன், வட்டார வளர்ச்சி அலுவலர் சுவாமிநாதன், விழாக்குழு நிர்வாகிகள் ஆர்.எம்.ராஜா  அம்பலக்காரர், மாரிமுத்து, சிங்காரம், தீயணைப்புத்துறை அலுவலர் தியாகராஜன், கிராம நிர்வாக அலுவலர் ஹேமலதா, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மணல் மாட்டு வண்டி ரீச் கோரி தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்

திருச்சிராப்பள்ளி, ஆக.30- மணல் மாட்டு வண்டி தொழிலாளர் சங்க ஆலோசனை கூட்டம் திருச்சியில் வெள்ளியன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்க மாவட்ட செயலாளர் சேகர் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் ராமர். சிஐடியு புறநகர் மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம் ஆகியோர் சிறப்புரையாற்றினர். பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடத்திய அமைதி பேச்சுவார்த்தையின் அடிப்படையில் கொள்ளிடம் ஆற்றில் 5 இடங்களில் மணல் மாட்டு வண்டி ரீச் திறக்க வலியுறுத்தி வரும் செப்டம்பர் 6ம் தேதி மணல் மாட்டு வண்டி தொழிலாளர் குடும்பத்துடன் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

சாலை விபத்தில் பெண் பலி

புதுக்கோட்டை, ஆக.30- தஞ்சாவூரில் இருந்து அரசு பேருந்து ஒன்று வியாழக்கிழமை இரவு புதுக்கோட்டை புதிய பேருந்து நிலைய வளாகத்திற்குள் வந்த போது, திருச்சி பேருந்துகள் நிற்கும் இடத்தில் நின்றிருந்த புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஐ.டி.ஐ.காலனியை சேர்ந்த வள்ளியப்பன் மனைவி சரஸ்வதி(60) மீது மோதியது. படுகாயம் அடைந்த அவர், புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதில் வெள்ளி காலை சரஸ்வதி சிகிச்சை பலனின்றி இறந்தார். இச்சம்பவம் குறித்து புதுக்கோட்டை நகரக் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுகையில் இன்று மின்தடை

புதுக்கோட்டை, ஆக.30- புதுக்கோட்டை நகரியம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி சனிக்கிழமை நடைபெற உள்ளது. எனவே சாந்தநாதபுரம், புதிய, பழைய  பேருந்து நிலையம், சார்லஸ்நகர், கீழராஜவீதி, நிஜாம்காலனி, மார்த்தாண்டபுரம், சத்தியமூர்த்தி நகர், அசோக்நகர், மருப்பணிரோடு, திருவப்பூர், திருக்கோகர்ணம், அம்பாள்புரம், அடப்பன்வயல், காமராஜபுரம், கணேஷ் நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு அன்று காலை 9 முதல் மாலை 4.45 மணி வரை மின் வினியோகம் இருக்காது என மின் உதவி செயற்பொறியாளர் சையதுஅகமது இஸ்மாயில் தெரிவித்து உள்ளார்.