கும்பகோணம் ஜூன் 10- தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் ராமலிங்கம். அவரது இடத்தில் வெட்டப்பட்டு விற்பனை செய்த மூங்கில் முள்கள், அதே ஊரைச் சேர்ந்த அண்டக்குடையான் சண்முகம் என்பவர் இடத்தில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. இதை சண்முகம், ராமலிங்கத்திடம் எனது இடத்தில் உள்ள முட்களை அப்புறப்படுத்துமாறு தெரிவித்து வந்ததாக தெரிகிறது. அப்போது நான் முள்ளை விற்று விட்டேன் என கூறியுள்ளார். இந்நிலையில் சண்முகம் மூங்கில் முள்ளை தீ வைத்து கொளுத்தி விட்டதாக நாச்சியார்கோவில் காவல் நிலையத்தில் ராமலிங்கம் புகார் செய்தார். இதன்பேரில் சண்முகம் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு விசாரணை செய்தனர். அப்போது சமூக கொடுமைகள் எதிர்ப்பு இயக்க தலைவர் சொக்கலிங்கம் உடன் வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். அப்போது நாச்சியார்கோயில் காவல் ஆய்வாளர் ரேகா ராணியிடம் புகாரை யொட்டி பேச்சுவார்த்தை நடத்தியபொழுது முதியவர் சோனா என்கிற சொக்கலிங்கத்தை அவமரியாதையாக பேசியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சொக்கலிங்கம் அதிகாரியை கண்டித்து கடந்த ஜூன் 4-ஆம் தேதி நாச்சியார்கோயில் கடைத்தெருவில் உண்ணாவிரதம் போராட்டம் இருக்க முயன்றார். அப்போது திருவிடைமருதூர் துணை கண்காணிப்பாளர் ராமச்சந்திரன் மற்றும் காவல்துறையினர் அவரை கைது செய்து முதுமை காரணமாக வீட்டில் விட்டு விட்டு அவரது மகன் ஸ்டாலினை டிஎஸ்பி ராமச்சந்திரன் மிரட்டி சென்றதாக கூறப்படுகிறது. அச்சுறுத்தும் காவல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், சோழன் மாளிகை சரகத்திற்கு உட்பட்ட கருப்பூர் மருதாநல்லூர் கருவளர்ச்சேரி ஆகிய பகுதிகளில் விவசாயிகளுக்கு காப்பீட்டு பணப் பலனை வழங்காமல் மோசடி செய்து உள்ள வேளாண் துறை கூட்டுறவு விவசாய கடன் சங்க நிர்வாகிகள் மற்றும் காப்பீட்டுத் துறை அதிகாரிகள் மீது சிபிசிஐடி விசாரணை செய்ய வலியுறுத்தியும், சமூக கொடுமைகள் எதிர்ப்பு இயக்க தலைவர் மருத்துவர் கோசொக்கலிங்கம் தன் வீட்டிலேயே தொடர் உண்ணாவிரத போராட்டம் கடந்த 6 நாட்களாக இருந்து வந்தார். இந்நிலையில் கும்பகோணம் வட்டாட்சியர் நெடுஞ்செழியன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இதுகுறித்து நடவடிக்கை எடுக்க உறுதியளித்ததின் பேரில் தற்காலிகமாக உண்ணாவிரதம் முடித்து வைக்கப்பட்டது. பேச்சுவார்த்தையின் போது சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சின்னை.பாண்டியன் திருவிடைமருதூர் தெற்கு ஒன்றிய செயலாளர் பழனிவேல், கண்ணன் பகத்சிங், சிக்கண்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.