tamilnadu

img

பொய் வழக்கு பதிந்து அதிகார துஷ்பிரயோகம்

தரங்கம்பாடி ஜூன் 15- பெண்ணிடம் தகாத வார்த்தை பேசி அத்துமீறிய பெரம்பூர் காவல் ஆய்வாளரை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நாகை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் பெரம்பூரில் கண்டன ஆர்ப்பாட்டம் சனியன்று நடைபெற்றது.  திருவிளையாட்டம் கிராமத்தில் வசிக்கும் நெடுஞ்செழியனின் தகப்பனார் மகாலிங்கம் என்பவருக்கு சொந்தமான நிலம் சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு உள்ள நிலையில் அந்த நிலத்தை அபகரிக்கும் நோக்கில் அதே ஊரை சேர்ந்த சிலர் செயல்பட்டதை அறிந்த கட்சியின் வட்ட செயலாளரும், திருவிளையாட்டம் ஊராட்சி தலைவராக இருமுறை பதவி வகித்த பி.சீனிவாசன் மற்றும் கட்சியினர், நிலத்தின் உரிமையாளரான நெடுஞ்செழியனுக்கு ஆதரவாக செயல்பட்டனர். இதனிடையே சட்டவிரோதமாக நிலத்தை அபகரிக்க முயன்ற நபர்களிடம் கையூட்டு பெற்றுக் கொண்ட பெரம்பூர் காவல் ஆய்வாளராக உள்ள பெரியசாமி கடந்த 1 மாதமாக நெடுஞ்செழியனின் வீட்டுக்கு சென்று மிரட்டுவது, அவரது மனைவியை ஆபாசமாக பேசுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இது பற்றி வட்ட செயலாளர் சீனிவாசன் காவல் ஆய்வாளரின் அத்துமீறலை கண்டித்துள்ளார். இதை பொறுத்துக் கொள்ள முடியாத ஆய்வாளர் சில நாட்களுக்கு முன்பு பொய் வழக்கு பதிவு செய்துள்ளார். அத்துமீறலை கண்டித்ததால் பொய் வழக்கு போட்ட காவல் ஆய்வாளரை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான நாகை மாலி தலைமை வகித்து கண்டன உரையாற்றினார். வட்ட செயலாளர் பி சீனிவாசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சி.வி.ஆர்.ஜீவானந்தம், சிங்காரவேலன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் கணேசன், டி.சிம்சன், ராசைய்யன், ரவிச்சந்திரன்,   வட்ட செயலாளர்கள் மேகநாதன்(மயிலாடுதுறை), விஜயகாந்த்(குத்தாலம்), வட்டக்குழு உறுப்பினர்கள் கோவிந்தசாமி, காபிரியேல் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கட்சி வித்தியாசமின்றி கலந்து கொண்டு கண்டன முழக்கமிட்டனர்.  உடனடியாக வழக்கை திரும்ப பெறுவதோடு, உரிய நியாயம் கிடைக்க வில்லையெனில் மீண்டும் போராட்டத்தை நடத்துவோம் என எச்சரித்துள்ளனர்.

;