tamilnadu

img

ஒரு வாரத்திற்கு தேவையான கொரோனா தடுப்பூசிகள் இருப்பில் உள்ளன... திருச்சி ஆட்சியர்.....

திருச்சிராப்பள்ளி:
திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போடும் மையம், கொரோனா சிகிச்சை முன்னேற்பாட்டுப் பணிகள் ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் எஸ்.திவ்யதர்ஷினி செவ்வாயன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “திருச்சிமகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் 450 படுக்கைகளுடன் கொரோனா சிகிச்சைப் பிரிவு இயங்கி வருகிறது. தேவைபட்டால் படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் வசதி
உள்ளது. கொரோனா ஊரடங்கின்போது, இந்த மருத்துவமனை யில் கொரோனா சிகிச்சை மட்டும் அளிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது கட்டுப்பாடுகள் மட்டுமே அமலில் உள்ளதால் பல்வேறு அத்தியாவசிய, அவசர சிகிச்சைகளும் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகின்றன.

இதுமட்டுமின்றி, திருச்சி மாவட்டத்தில் 2 இடங்களில் கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. பாரதிதாசன் பல்கலைக்கழக காஜாமலை வளாகத்தில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட நீரிழிவு, ரத்த அழுத்தம் உள்ளிட்ட பாதிப்புகளுடன் உள்ள 45 வயதுக்கு மேற்பட்டோருக்கும், சேதுராப்பட்டிஅரசு பொறியியல் கல்லூரி விடுதியில் அறிகுறிகளே தென்படாமல் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளவர்களுக்கும் மருத்துவக் குழுக்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது.திருச்சி மாவட்டத்தில் மருத்துவத் துறையினர், முன்களப் பணியாளர், பொதுமக்கள் என இதுவரை 1.41 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில், பொதுமக்கள் மட்டும் 91 ஆயிரம் பேர். தொழிற்சாலைகளுக்கே சென்று அரசு மற்றும் தனியார் மருத்துவமனை மூலம் முகாம் அமைத்து தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி திருச்சி மாவட்டத்தில் திங்களன்று தொடங்கப்பட்டது.  திருச்சி மாவட்டத்தில் ஒரு வாரத்துக்குத் தேவையான கொரோனா தடுப்பூசிகள் இருப்பில் உள்ளன. ஓரிரு நாட்களில் மேலும் கொரோனா தடுப்பூசிகள் திருச்சி மாவட்டத்துக்குக் கொண்டு வரப்படவுள்ளன. திருச்சி மாநகரில் 11 இடங்கள் உட்பட மாவட்டத்தில் தற்போது 14 கட்டுப்பாட்டுப் பகுதிகள் உள்ளன. நாள்தோறும் 4,000 முதல் 
4,500 வரை கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படு கின்றன” என்றார்.

;