திருச்சிராப்பள்ளி, செப்.27- பிஎஸ்என்எல் ஒப்பந்த ஊழியர்களுக்குக் கடந்த 8 மாதங்களாக வழங்கப்படாமல் உள்ள சம்பளத்தை உடனே வழங்க வேண்டும். ஒப்பந்தத் தொழிலாளர்களை ஆட்குறைப்பு செய்யக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தித் தமிழ்நாடு தொலை தொடர்பு ஒப்பந்தத் தொழிலாளர் சங்கத்தின் திருச்சி மாவட்டக்குழு சார்பில் திருச்சி தொலை தொடர்புத்துறை பிஜிஎம் அலுவலக வளாகத்தில் இரண்டாவது நாளாக வெள்ளியன்று வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்குப் பிஎஸ்என்எல்இயு மாவட்டத் தலைவர் தேவராஜ் தலைமை வகித்தார். போராட்டத்தை விளக்கிப் பிஎஸ்என்எல்இயு மாவட்டச் செயலாளர் அஸ்லம்பாஷா, அகில இந்தியப் பிஎஸ்என்எல் டிஓடி ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலாளர் ஜான்பாஷா, தமிழ்நாடு தொலை தொடர்பு ஒப்பந்தத் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் சுந்தர்ராஜ் ஆகியோர் பேசினர். அகில இந்தியப் பிஎஸ்என்எல் டிஓடி ஓய்வூதியர் சங்க மாநில அமைப்பு செயலாளர் சின்னையன், மாவட்டப் பொருளாளர் நாகராஜன், மகாலிங்கம், மனோகரன், இளங்கோ, ருக்மாங்கதன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு தொலைத் தொடர்பு ஒப்பந்தத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் முபாரக்அலி நன்றி கூறினார்.
நாகப்பட்டினம்
நாகைக் கிளைச் சங்கத் தலைவர் பி.மணிகண்டன் தலைமை வகித்தார். கிளைச் செயலாளர் பி.பிரகாஷ், அப்துல்ரகுமான், பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்கக் கிளைச் செயலாளர் பி.சண்முகம் மற்றும் சங்க நிர்வாகிகள் கே.திருக்குமார், ராஜசேகர், சிக்கல் கிருஷ்ணமூர்தி, கமலசரஸ்வதி உள்ளிட்டோர் உரையாற்றினர்.