tamilnadu

img

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து டெல்டா மாவட்டத்தில் தொடர் முழக்கப் போராட்டம்

தஞ்சாவூர், மே 9-ஹைட்ரோ கார்பன் திட்டத்தைத் தடுத்து நிறுத்த வலியுறுத்தி தஞ்சாவூர், நாகை, திருவாரூர், கடலூர்,புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஜூன் 1 ஆம் தேதி தொடர் முழக்கப் போராட்டம் நடத்துவது எனதமிழ்நாடு விவசாயிகள் சங்கம்(இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பு) முடிவு செய்துள்ளது.தஞ்சாவூரில் இச்சங்கத்தின் மாநில நிர்வாகக் குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து செய்தியாளர்களிடம் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலர் வே. துரைமாணிக்கம் தெரிவித்தது:ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான அனுமதியை மாநில அரசின் துணையுடன் மத்திய அரசு வழங்கியுள்ளது. இத்திட்டத்தில் கடலூர், நாகை, திருவாரூர் மாவட்டங்களில் 44 இடங்களில் துளை போட்டு ஹைட்ரோ கார்பன் எடுக்கப்படவுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்துக்கும் இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்படவுள்ளது.இப்பணியைத் தொடங்கினால், காவிரி பாசனப் பகுதி மிகப் பெரிய சேதாரத்தைச் சந்திக்கும். விளைச்சல் குறைந்து, உணவு தட்டுப்பாடு ஏற்படும்.காவிரிப் பாசனப் பகுதி பாலைவனமாக மாறக்கூடிய அபாய நிலை ஏற்படும். எனவே, இத்திட்டத்தைத் தடுத்து நிறுத்தி, காவிரிப் பாசனப் பகுதியைப் பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக மாற்ற வேண்டும்.

இதை வலியுறுத்தி தஞ்சாவூர், நாகை, திருவாரூர், கடலூர், புதுக் கோட்டை ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள அனைத்து ஒன்றியத் தலைமையிடங்களில் மக்கள் கூடும் இடத்தில்ஜூன் 1 ஆம் தேதி தொடர் முழக்கப் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட் டுள்ளது. இதன் பிறகும் இத்திட்டம் கைவிடப்படாவிட்டால் மக்களைத் திரட்டி தொடர் போராட்டம் நடத்துவோம்.பெண்ணையாற்றின் குறுக்கே அணைக் கட்டுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும். குறுவை சாகுபடிக்குக் காவிரி நீரைப் பெறுவதற்கு மேலாண்மை ஆணையக் கூட்டத்தைக் கூட்டி தாமதமின்றி பெற்றுத் தர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கரும்பு விவசாயிகளுக்கு 5 ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ள ரூ.3,800 கோடியைப் பெற்றுத் தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பால் உற்பத்தியாளர்களுக்கான பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும்” என்றார் துரைமாணிக்கம்.கூட்டத்துக்கு மாநிலத் தலைவர் எஸ்.குணசேகரன் தலைமை வகித்தார். துணைத் தலைவர்கள் பி.பெரும்படையார், சி.எம்.துளசிமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.