tamilnadu

img

திண்டுக்கல்லில் புதிய மருத்துவக்கல்லூரிக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்

திண்டுக்கல்:
திண்டுக்கல்லில்  ரூ.327கோடி மதிப்பில் புதிதாகஅமையவுள்ள மருத்துவக்கல்லூரிக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சனிக்கிழமையன்று அடிக்கல் நாட்டினார்.தமிழகத்தில் திருப்பூர், நீலகிரி, இராமநாதபுரம், நாமக்கல், திண்டுக்கல், விருதுநகர், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், திருவள்ளூர் ஆகிய 9 இடங்களில் புதிய மருத்துவக்கல்லூரிகள் அமைப்பதற்கு மத்திய அரசுஅண்மையில் ஒப்புதல் அளித்தது.திருப்பூர், நீலகிரி, இராமநாதபுரம், நாமக்கல், திண்டுக்கல், விருதுநகர் ஆகிய 6இடங்களில் அமைய இருக்கும் மருத்துவ கல்லூரிகளுக்கான பூர்வாங்க பணிகளுக்கு தலா ரூ.100 கோடியும்,அதற்கான நிலத்தையும் தமிழக அரசு ஒதுக்கியது.மேலும், அந்தக்கல்லூரிகளுக்கு முதல்வர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

திண்டுக்கல் அருகே ஒடுக்கத்தில் அரசு மருத்துவக் கல்லூரி கட்டப்படுகிறது. இதற்காக மாநகராட்சிக்கு சொந்தமான 22 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது. இதையடுத்து மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டு விழா சனிக்கிழமையன்று நடைபெற்றது. விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி புதிய அரசு மருத்துவகல்லூரிக்கான அடிக்கல்லை நாட்டினார்.   ரூ.14.2 கோடி மதிப்பில் புதிய திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, சுற்றுலாத்துறை உள்பட பல்வேறு துறைகளின் கீழ் ரூ.63.54 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மொத்தம் ரூ.418.42 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்து பேசினார்.முன்னதாக விழாவுக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், விஜயபாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசுதலைமை செயலாளர் சண்முகம் வரவேற்றுப்பேசினார்.  சுகாதாரத்துறை செயலாளர் பீலாராஜேஷ் மற்றும்அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்  விஜயலட்சுமி நன்றி கூறினார்.

திப்பு, ஹைதர் பெயர்களை தவிர்த்த முதல்வர்
 திண்டுக்கல் ஒடுக்கத்தில் அரசு மருத்துவக்கல்லூரிக்கான அடிக்கல் நாட்டு விழா சனிக்கிழமையன்று நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்புரையாற்றிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது திண்டுக்கல்லின் சுதந்திர போராட்ட வரலாற்றை குறிப்பிட்டு பேசினார். அப்போது திண்டுக்கல்  மலைக்கோட்டை பற்றியும், அதனை கட்டிய முத்துகிருஷ்ணப்பநாயக்கரைப் பற்றியும், விருப்பாச்சி கோபால் நாயக்கர் பற்றியும், வீரமங்கைவேலுநாச்சியார் பற்றியும் குறிப்பிட்டார். ஆனால் மாமன்னர்கள் திப்புசுல்தான் மற்றும் ஹைதர் அலி பற்றி குறிப்பிடவில்லை. திண்டுக்கல் மண்ணின் வீர வரலாற்றில் மிக முக்கியமான மன்னர்கள் என்றால் திப்புசுல்தானும், ஹைதர் அலியும் தான். அதற்காகத்தான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா திண்டுக்கல்லில் மணிமண்டபம் அமைத்துள்ளார். 

ஜெயலலிதா இறப்பிற்கு பிறகு இந்த மணிமண்டபத்தை பாஜக மற்றும் இந்து அமைப்புகளின் எதிர்ப்பின்காரணமாக பல ஆண்டுகள் திறக்காமல் அதிமுக அரசுகிடப்பில் போட்டுள்ளது. தற்போதும் திப்புசுல்தான் மற்றும் ஹைதர் அலியை பற்றி பேசினால் பாஜகவிடமிருந்து எதிர்ப்பு வருமோ என்று பயந்து, அவர்களது பெயர்களைகுறிப்பிடாமல் முதல்வர் பேசியுள்ளார்.இதனை பல்வேறு தரப்பினர் விமர்சித்துள்ளனர். (நநி)

;