tamilnadu

img

அங்கன்வாடி ஊழியர் - உதவியாளர் சங்க 5-வது மாநில மாநாடு.... எழுச்சியுடன் துவக்கம்

தருமபுரி:
தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தின் 5-வது மாநில மாநாடு தருமபுரியில் வெள்ளியன்று எழுச்சியுடன் துவங்கியது.தருமபுரி வன்னியர் திருமண மண்டபத்தில் தோழர் எஸ்.சரஸ்வதி நினைவரங்கத்தில் துவங்கிய
மாநாட்டிற்கு சங்கத்தின் மாநிலத் தலைவர் சி.அங்கம்மாள் தலைமை வகித்தார். மாநிலச்செயலாளர் என்.சுசிலா சங்கக் கொடியேற்றி வைத்தார். மாநில துணைத்தலைவர் பா.சித்ரசெல்வி அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். வரவேற்புக்குழு செயலாளர் சி.நாகராசன் வரவேற்றார். மாநாட்டை சிஐடியு மாநிலத் தலைவர் ஏ.சவுந்தரராசன் துவக்கி வைத்து உரையாற்றினார். சிஐடியு மாநில பொதுச்செயலாளர் ஜி.சுகுமாறன், மாநிலப் பொருளாளர் மாலதிசிட்டிபாபு, அகில இந்திய செயலாளர் ஆர்.கருமலையான், மாநில செயலாளர் கே.சி.கோபிகுமார், உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழு மாநில அமைப்பாளர் எம்.தனலட்சுமி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். இதைத்தொடர்ந்து மாநில பொதுச்செயலாளர் டி.டெய்சி, மாநிலப் பொருளாளர் எம்.பாக்கியம் ஆகியோர் அறிக்கையை சமர்ப்பித்து பேசினர்.

அ.சவுந்தரராசன் பேச்சு
சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் மாநாட்டை துவக்கி வைத்து பேசியதாவது,அங்கன்வாடி ஊழியர்கள் கூலிக்காகவும், சம்பளத்திற்காகவும் அரசாங்கத்தின் அடிமையாக நடத்தப்படுகின்றனர். இதனால் பணி பாதுகாப்பு உரிமைகளுக்காக போராட வேண்டியுள்ளது. கோரிக்கையை வென்றிட ஒற்றுமையாக போராட வேண்டியுள்ளது. இந்தியாவில் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பொருளாதாரம் மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. இதனால் மக்கள் வாங்கும் சக்தியை இழந்துள்ளனர். பார்லே ஜி பிஸ்கெட்கம்பெனி மூடப்பட்டதால் 40 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை யிழந்துள்ளனர். திருப்பூரில் 700 பனியன்ஏற்றுமதி நிறுவனங்கள் மூடப்பட்டன. நுகர்வுதிறன் வீழ்ச்சியடைந்துள்ளது. நுகர்வுதிறனை அதிகப்படுத் தவேண்டும் என இடதுசாரிகள் சொல்கிறோம். பணவீக்கத்திற்கு ஏற்ப சம்பள உயர்வு வழங்க வேண்டும். அதனால்தான் பஞ்சப்படி எல்லோருக்கும் வழங்கவேண்டும் என போராடி வருகிறோம். ஆனால் மத்திய அரசுஅமல்படுத்த மறுத்து வருகிறது. இந்தியாவில் உள்ள 700 பெருமுதலாளிகளுக்கு ரூ.2.50 லட்சம் கோடி வரிச்சலுகையை மத்திய அரசு வழங்கியுள்ளது. ஆறுகளை இணைக்க வேண்டும் என்ற 60 ஆண்டு கோரிக்கையை நிறைவேற்ற மறுக்கிறது. இத்திட்டத்திற்காக 1லட்சம் கோடி ரூபாய் செலவு செய்தால் குடிநீர், விவசாய உற்பத்தி அதிகரிக்கும். விவசாயிகள், கூலித்தொழிலாளர்கள் வாழ்வாதாரம் உயரும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். மக்களிடையே நுகர்வு திறனை அதிகப்படுத்தும்.

மத்திய அரசு புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தி 3,5,8 ஆகிய வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துகின்றனர். இந்த கல்வி கொள்கை மாணவர்களின், தன்னம்பிக்கையை இழக்கச்செய்யும் நிலைமையை மத்திய அரசு உருவாக்குகிறது. ஒருநாட்டின் பலம் என்பது ஆயுதத்தால் தீர்மானிக்கப்படுவதில்லை, மக்கள் பலம் தான் சிறந்தது. ஆயுத பலம் கொண்ட அமெரிக்காவை, சின்ன நாடான வியட்நாம் மக்கள் விரட்டியடித்தனர். எனவே நம் கோரிக்கையை வென்றெடுக்க ஒன்றுபட்டு போராடவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

;