சரியாக 75 ஆண்டுகளுக்கு முன்பு, மே 23, 1945 அன்று, கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அகில இந்திய விவசாயிகள் சங்கம் ஆகியவற்றினால் மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தின் அன்றைய அம்பர்கான் (இப்போது தலசாரி) தாலுகாவில் உள்ள ஸாரி கிராமத்தில் ஒரு பெரிய மாநாடு நடைபெற்றது. தலசாரி மற்றும் தஹானு தாலுகாக்களைச் சேர்ந்த 5,000 க்கும் மேற்பட்ட ஆதிவாசி பெண்கள் மற்றும் ஆண்கள் அங்கு கூடியிருந்தனர்.
கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக மாவட்டத்தில் பரவலாக இருந்த கொத்தடிமை தொழிலாளர் முறையையும் மற்றும் திருமண அடிமைத்தனத்தின் வெறுக்கத்தக்க நிலப்பிரபுத்துவ முறையையும் அகற்ற ஒரு தீர்மானகரமான அறைகூவலினை விவசாயிகள் சங்க தலைவர்கள் ஷாம்ராவ் பருலேக்கர் மற்றும் கோதாவரி பருலேக்கர் ஆகியோர் விடுத்தனர். இவ்வாறு தான் வரலாற்று சிறப்புமிக்க வோர்லி ஆதிவாசி கிளர்ச்சி தானே மாவட்டத்தில் தொடங்கியது.அதற்கு நான்கு மாதங்களுக்கு முன்னர், மகாராஷ்டிர மாநில விவசாயிகள் சங்கத்தின் மாநாடு 1945 ஜனவரி 7 ஆம் தேதி தானே மாவட்டத்தின் தித்வாலாவில் பருலேக்கர்கள் எடுத்த முன் முயற்சியின் காரணமாக நடைபெற்றது. தலசாரியைச் சேர்ந்த ஆதிவாசி பிரதிநிதிகள் 15 பேர் இம்மாநாட்டில் கலந்து கொண்டனர். மேலும் அவர்கள் நில உரிமையாளர்கள் மற்றும் கந்து வட்டிக்காரர்கள் மூலம் தாங்கள் சுரண்டப்பட்டதையும், கொள்ளையடிக்கப்பட்ட கொடுமைக் கதைகளையும் மாநாட்டில் விவரித்தனர்.
ஸாரி மாநாடு முடிந்த ஒரு சில மாதங்களுக்குள், கொத்தடிமை முறையும் திருமண அடிமைத்தனமும் ஆதிவாசி மக்களின் மகத்தான ஒற்றுமை, போராட்டம் மற்றும் தியாகம் ஆகியவற்றின் மூலம் விவசாயிகள் சங்கம் மற்றும் செங்கொடியின் தலைமையின் கீழ் ஒழிக்கப்பட்டது.இந்த போராட்டம் அதற்கு பின்னர் கூலி, வனம் மற்றும் நில உரிமைகளுக்காகவும், பின்னர் நீர், உணவு, வேலைவாய்ப்பு, கல்வி, சுகாதாரம் மற்றும் பல்வேறு பிரச்சனைகளுக்காகவும் தொடர்ந்து வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது. இந்த போராட்டம் இன்றும் தடையின்றி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இக்கிளர்ச்சியின் தீ ஜூவாலை தானே மற்றும் பால்கர் மாவட்டங்களின் பிற தாலுகாக்களுக்கும் பரவியது, பின்னர் அது நாசிக், நந்தூர்பார், அகமதுநகர், புனே, நான்டெட் யவத்மால் மற்றும் பிற மாவட்டங்களுக்கும் பரவியது.
கடந்த 75 ஆண்டுகளில் தானே-பால்கர் மாவட்டங்களில் மட்டும் இதுவரை 61 ஆதிவாசி மக்கள் தங்கள் இன்னுயிரை ஈந்து தியாகிகளாகி உள்ளனர். பிரிட்டிஷ், காங்கிரஸ் மற்றும் பாஜக தலைமையிலான அடுத்தடுத்த அரசாங்கங்களின் காவல்துறையினரால் இவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். நாசிக் மாவட்டத்தில் 3 ஆதிவாசி மக்கள் போராட்டத்தில் உயிரை இழந்துள்ளனர்.
கடந்த நான்கு தலைமுறைகளாக லட்சக்கணக்கான மக்கள் தானே-பால்கர் மாவட்டங்களில் சிபிஐ (எம்) கட்சியின் செங் கொடியை உயர்த்திப் பிடித்து வருகின்றனர். மக்களின் பிரச்சனைகளுக்காக விவசாயிகள் சங்கம், சிஐடியு,மாதர்சங்கம், வாலிபர் சங்கம், மாணவர் சங்கம் போன்ற வெகுஜன அமைப்புகளும், ஏஏஆர்எம் போன்ற வெகுஜன அமைப்பும் தொடர்ந்து போராடி வருகின்றன. பாஜக -ஆர்எஸ்எஸ்-க்கு எதிராக அனைத்து முற்போக்கான, ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற சக்திகளையும் மத்தியிலும் மாநிலத்திலும் ஒன்றிணைக்க சிபிஐ (எம்) முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இவற்றின் விளைவாக, கடந்த 10 மாநில சட்டமன்றத் தேர்தல்களில் 9 தேர்தல்களில் தஹானு (முந்தைய ஜவஹர்) எஸ்.டி தொகுதியில் சிபிஐ (எம்) வென்றுள்ளது. மீண்டும் 2019 அக்டோபரில் நடந்த கடைசி தேர்தலிலும் கூட சிபிஐ (எம்) வெற்றி பெற்றுள்ளது.சிபிஐ (எம்) 1962 முதல் கடந்த 58 ஆண்டுகளாக தொடர்ந்து தலசாரி பஞ்சாயத்து சமிதியில் வெற்றி பெற்று வருகின்றது. சமீபத்தில் உருவாக்கப்பட்ட தலசாரி நகர் பஞ்சாயத்து சமிதியிலும் வெற்றி பெற்றுள்ளது. 2020 ஜனவரியில் நடைபெற்ற உள்ளாட்சி அமைப்பு தேர்தலிலும் கட்சி மொத்தம் 18 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதில் 6 ஜில்லா பரிசத் இடங்களும், 12 பஞ்சாயத்து இடங்களும் அடங்கும்.
இந்த கொரோனா காலங்களிலும் வரலாற்றுச் சிறப்புமிக்க வோர்லி ஆதிவாசி கிளர்ச்சியின் பவள விழாவை (75வது ஆண்டு விழா) மே 23 அன்று மாநிலம் தழுவிய அளவில் கொண்டாட சிபிஐ (எம்), அகில இந்திய விவசாயிகள் சங்கம் ஆகியவை முடிவு செய்துள்ளன. மாவட்டத்திலும், மாநிலம் முழுவதிலும் உள்ள ஆயிரக்கணக்கான வீடுகள் தோறும் கிராமங்கள் தோறும் செங்கொடிகளை ஏற்றுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.அந்த தினத்தில், கடந்த 75 ஆண்டுகளாக நூற்றுக்கணக்கான தலைவர்களும் ஆயிரக்கணக்கான ஆர்வலர்களும் 64 தியாகிகளும் செய்திட்ட பங்களிப்புகள் மாநிலம் முழுவதும் கொண்டு செல்லப்படும்.மே 27 அன்று, அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் மத்தியக் குழுவின் அறைகூவலின் படி, மோடி தலைமையிலான பாஜக ஆட்சியினை கண்டித்து மகாராஷ்டிரா முழுவதிலும் உள்ள கிராமங்களில் உரிய இடைவெளிகளுடன் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும்.
===பேரா.ராமக்குமார்===
அகில இந்திய விவசாயிகள் சங்கம்
===தமிழில் : அ.கோவிந்தராஜன்===