tamilnadu

img

தோழர் பி.சீனிவாசராவ் நினைவு தினத்தில் (செப்-30) தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராக தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி நேரடி நடவடிக்கை

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பட்டியலின மக்கள்  மீது மனித நாகரிகம் வெட்கிப்போகும் அளவிற்கு சாதிய பாரபட்சங்கள் தொடர்கிறது. சத்துணவுக்கூடங்கள் முதல் மயானம் வரை தீண்டாமைக் கொடுமைகள் நீள்கிறது. இத்தகைய தீண்டாமைக் கொடுமைகளுக்கு முடிவுகட்டும் நேரடிக்களப் போராட்டங்களை செப்டம்பர் 30, தோழர்.பி.சீனிவாசராவ் நினைவு தினத்தில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி நடத்தி வருகிறது. அவ்வாறே வரும் 2019 செப்டம்பர் 30 அன்று பின்வரும் போராட்டங்கள் தமிழகத்தில் நடைபெறவிருக்கிறது என தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் தலைவர் த.செல்லக்கண்ணு, மாநில பொதுச்செயலாளர் கே.சாமுவேல்ராஜ் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

1. ஆலய நுழைவுப் போராட்டம்
விருதுநகர் மாவட்டம், விருதுநகர் ஒன்றியம் பாவாலி கிராமத்திலுள்ள பட்டியலின மக்கள் கன்னிமாரியம்மன் காமாட்சி கோவிலில் நுழையும் போராட்டம் நடைபெறும். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.கிருஷ்ணன், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில தலைவர் த.செல்லகண்ணு, மாவட்ட தலைவர் எம்.சி.பாண்டியன், மாவட்ட  செயலாளர் எம்.முத்துக்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட  செயலாளர் கே.அர்ஜூனன் ஆகியோர் ஆலய நுழைவுப் போராட்டத்திற்கு தலைமை ஏற்கிறார்கள்.

2. பஞ்சமி நிலமீட்பு
திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், சாத்தனூர் ஊராட்சி, கடம்பன் குட்டை கிராமத்தில் புல எண் 236/245ல் 10 ஏக்கர் பஞ்சமிநிலம் பழங்குடி இருளர் மக்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. தற்போது தனிநபர் அபகரிப்பில் உள்ள இந்த பஞ்சமி நிலத்தை மீட்டு பழங்குடி மக்களுக்கு வழங்கிடும் நிலமீட்புப் போராட்டம் நடைபெறவுள்ளது. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.கே.மகேந்திரன், மாநில துணைப் பொதுச்செயலாளர் பி.செல்வன், மாவட்ட தலைவர் எம்.ரவி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட  செயலாளர் எம்.சிவக்குமார் ஆகியோர் தலைமை ஏற்கிறார்கள்.

3. நிழற்குடை பாகுபாட்டை ஒழித்திட 
புதுக்கோட்டை மாவட்டம், கூத்தாண்டவர் கோயில் ஒன்றியம், தெம்மாகூர் கிராமத்தில் தலித் மக்கள் பேருந்து நிழற்குடையில் சமமாக அமர்வதை சகிக்காத சாதியவாதிகள் தொடர்ந்து மேல் கூரையையும், இருக்கைகளையும் அகற்றி வருகின்றனர். மேற்கூரையும், இருக்கையும் அமைத்து, அமரும் போராட்டம் நடைபெறவுள்ளது. மாநில துணைப்பொதுசெயலாளர்கள் சின்னை பாண்டியன், மு.கந்தசாமி, மாவட்ட தலைவர் எம்.உடையப்பன், மாவட்ட செயலாளர் அன்பு மணவாளன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட  செயலாளர் கவிவர்மன் ஆகியோர் தலைமை ஏற்கிறார்கள்.

4. குடிமணைப்பட்டா கோரி
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் நகர், தோப்பூரில் பல்லாண்டுகளாக குடியிருந்து வரும் 184 தலித் குடும்பங்களுக்கு பட்டா வழங்கும் வரை காத்திருக்கும் போராட்டம் நடைபெறவுள்ளது. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பாலபாரதி, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் யு.கே.சிவஞானம், மாவட்ட தலைவர் ஆர்.அண்ணாத்துரை,  மாவட்ட  செயலாளர் பி.பி.பழனிச்சாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட  செயலாளர் ரகுராமன் ஆகியோர் தலைமை ஏற்கிறார்கள்.

5. நில மீட்புப் போராட்டம்
தருமபுரி மாவட்டம், தருமபுரி வட்டம், உங்கரானஅல்லி கிராமத்தில் 2011-ல் பட்டியலின மக்களுக்கு புலஎண் 65ல் 2.59 ஏக்கர் நிலம் ஆதிதிராவிட நலத் துறையால் 78 பயனாளிகளுக்கு வழங்கிட  கையகப்படுத்தப்பட்டது. ஆனால் அளந்து கொடுக்கப்படாமல் தனிநபர் ஆக்கிரமிப்பில் உள்ளது. ஆக்கிரமிப்பை அகற்றி தலித் பயனாளிகளுக்கு வழங்கிடும் நேரடிப் போராட்டம் நடைபெறவுள்ளது. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி.டில்லிபாபு, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில பொதுச்செயலாளர் கே.சாமுவேல்ராஜ், மாவட்ட தலைவர் டி.எஸ்.ராமச்சந்திரன், மாவட்ட  செயலாளர் டி.மாதையன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஏ.குமார் ஆகியோர் தலைமை ஏற்கிறார்கள். 

மேற்கண்ட சமூக உரிமைப் போராட்டங்களுக்கு தமிழக மக்கள் ஆதரவு வழங்கிட அன்புடன் வேண்டுகிறோம்.


 
த. செல்லகண்ணு                                       கே.சாமுவேல்ராஜ்

தலைவர்                                                          பொதுச் செயலாளர்

;