tamilnadu

img

டாஸ்மாக் கடைகள் திறப்பதை ஒத்தி வைத்திடுக!

முதல்வருக்கு  சிபிஎம் வலியுறுத்தல்

சென்னை,மே 5-  கொரோனா தடுப்பு நடவடிக்கையாக டாஸ்மாக் மதுக்கடைகள் திறப்பதை ஒத்தி வைக்க வேண்டும் என்று வலியுறுத்தி  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடிதம் அனுப்பியுள்ளது.  இதுதொடர்பாக கட்சியின் மாநிலச் செய லாளர் கே.பாலகிருஷ்ணன், முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து மக்கள் மிகுந்த அச்சத்துடன் வாழும் நிலைமை ஏற்பட்டுள் ளது. அடுத்து வரும் நாட்களில் மிக மோச மான அளவுக்கு பாதிப்புகள் ஏற்படும் என செய்திகள் கூறுகின்றன. தமிழக அரசும் நோய்த்தொற்று அதிகமாகும்போது அவர் களுக்கு மருத்துவ சிகிச்சை அளித்திட திரு மண மண்டபங்கள், பள்ளிக்கூடங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளை கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் வருகின்ற 7 ஆம் தேதி முதல் (சென்னை மாநகரை தவிர) இதர மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளை திறப்பது என அரசு மேற்கொண்டுள்ள முடிவு மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. கொரோனா தொற்றின் காரணமாக கடந்த 6 வாரங்களாக மக்கள் பொதுமுடக்கத்தில் வீடுகளில் அடைந்து கிடக்கின்றனர். வேலையும் வருமானமும் இன்றி பசி பட்டினியோடு வாடிக்  கொண்டுள்ளனர். அரசு அளித்துள்ள நிவாரணத் தொகை, உணவுப்பொருட்கள் சொற்பமானது எனினும், அதைக் கொண்டும் பலருடைய உதவிகளையும் பயன்படுத்தி அரைகுறை உணவுடன் வாழ்ந்து வருகின்றனர். தற்போது மே மாதம் 17 ஆம் தேதி  வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. அதற்கு  பின்னரும் நிலைமை சீரடையுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இவ்வாறு மக்கள் பசி பட்டினியோடு மிகுந்த நெருக்கடி யில் வேலையும், வருமானமும் இல்லாமல் வாழும் நிலையில் டாஸ்மாக் கடைகளை திறப்பது சாதாரண மக்களின் குடும்பங்களை கற்பனை செய்ய முடியாத நெருக்கடியில் தள்ளிவிடும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

வன்முறை அதிகரித்து  குடும்பங்கள் சீர்குலையும்

வீடுகளில் மக்கள் முடங்கியுள்ள நிலை யில் வீட்டிலேயே மது அருந்தும் பழக்கத்தை உருவாக்குவது குடும்பங்களுக்குள் மோசமான சிக்கலை உருவாக்குவதோடு இளம் குழந்தைகள், பெண்கள் பெரும் இன்னல்களுக்கு ஆட்படும் நிலைமை ஏற்படும். கல்வி பயிலும் மாணவ-மாணவி களின் கல்வியும் எதிர்காலமும் பாழ்படும். இதனால் குடும்ப வன்முறைகள் அதிகரித்து குடும்பங்களே சீர்குலையும் ஆபத்து உருவாகும். 

தமிழகத்தில் நோய்த்தொற்று சமூக  பரவலாக மாறியுள்ள சூழலில் டாஸ்மாக் கடை களை திறப்பது தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்க உதவி செய்யாது. அதன் மூலம் நோய்த் தொற்று பல மடங்கு அதிகரித்து மக்களின் உயிருக்கு பேராபத்து ஏற்படும். ஒருபுறம் நோய்த்தொற்று பரவலை தடுப்பதற்கு கோயம்பேடு மார்க்கெட்  மூடப்பட்டு, பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மறுபுறம் டாஸ்மாக் கடைகளை திறப்பது அரசின் நடவடிக்கைகளை பயனற்றதாக்கிவிடும். 

மது ஆலை அதிபர்களுக்கு ஆதரவாக...

மதுபானம் தயாரிக்கும் தொழில் அதிபர் களுக்கு சாதகமாக அரசு மேற்கொள்ளும் இந்த நடவடிக்கை கடந்த 6 வார காலமாக மதுவினை மறந்திருந்தவர்களை மீண்டும் குடிகாரர்களாக மாற்றவே உதவி செய்யும் என்பதையும் கவனப்படுத்துகிறோம். இதன்மூலம் தமிழகத்தில் எப்போதும் குடிப்பழக்கம் நீடித்துக் கொண்டே இருக்க வேண்டுமென அரசு விரும்புவதாகவே கருத வேண்டியுள்ளது.

எனவே, கொரோனாவை எதிர்த்த போராட்டத்தை வெற்றிகரமாக நடத்திடவும், பொதுமுடக்கத்தால் வருமானம் இன்றி தவிக்கும் மக்களது நலனையும் கணக்கில் கொண்டு டாஸ்மாக் கடைகளை மீண்டும் திறக்கும் முடிவினை ஒத்திவைக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.