tamilnadu

img

தை முதல் நாளில் பொங்கல் வைக்கும் உரிமையை தலித் மக்களுக்கு பெற்றுத் தந்த தியாகி என்.வெங்கடாசலம்

வெண்டையம்பட்டி மக்கள்  வீரவணக்க அஞ்சலி

தஞ்சாவூர், ஜன.16- தைத்திங்கள் முதல் நாளில் இன்று தமிழர்கள் வாழும் இடங்களில் உற்சா கமாக பொங்கல் விழா கொண்டாடப்படு கிறது. ஆனால் இதற்கு முன்பு ஆதிக்க சாதியினரால், தை முதல் நாளில் பொங்கல் வைப்பதற்கு, தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட தலித் மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. பஞ்சைப் பராரிகள், உயர் சாதியினரான எங்க ளுக்கு நிகராக பொங்கல் வைப்பதா என ஆணவத்தால் இதுபோன்ற கொடுமை முந்தைய ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் நடந்தது.  ஆனால் தலித் மக்களுக்கும் மற்ற வர்களைப் போல சம உரிமை உண்டு என்ற கருத்து செங்கொடி இயக்கம், மாவட்டத்தில் வலுப்பெறத் தொடங்கிய காலத்தில் ஏற்பட்டது. சமூக மாற்றத் திற்கும், சமத்துவ உரிமைகளுக்காக வும், பொதுவுடமை இயக்கத் தலை வர்கள் போராடி உரிமைகளை பெற்றுத் தந்த வரலாற்றை எவராலும் மறைக்க வோ, மறுக்கவோ முடியாது. 

மாவட்டத்தில் 1970 களுக்கு முன்னர் பூதலூர் பகுதியில், தை முதல் நாளில் ஆதிக்க சாதியினரும், தை மாதம் 5 ஆம் தேதிக்கு பிறகே, தலித் மக்கள், தலித் கிறிஸ்தவர்களும் பொங்கல் வைப்பது வழக்கமாக இருந்துள்ளது. இது தலித் மக்கள் மனதில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. உயர் சாதியினராக மற்றவர்களால் கூறப்பட்டாலும், மதத்திற்கும், சாதிக்கும் அப்பாற்பட்ட பொதுவுடமைவாதியும், மக்கள் தியாகியுமான அனைவராலும் தோழர் என்.வி- என அழைக்கப்பட்ட சமூகப் புரட்சியாளர் தோழர் என்.வெங்கடா சலம் இந்த நிலையை மாற்றி சமூக, சமத்துவத்தை உருவாக்கினார்.  அப்போதைய வெண்டையம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவராக இருந்த தோழர் என்.வி. கடந்த 1970 ஆம் ஆண்டு ராயமுண்டான்பட்டி ஊர் பொது மந்தையில் தை முதல் நாளன்று, தலித் மக்களை வரச் சொல்லி, அவர்களை பொங்கல் வைக்கச் சொல்லி முற்போக்கு சிந்தனைவாதிகளோடும், தலித் மக்களோடும் அமர்ந்து சமத்துவ பொங்கல் கொண்டாடி உணவருந்தி ஒரு மாற்றத்தை உருவாக்கினார். 

அப்போது இந்த நிகழ்வு நிலச்சுவான்தார்கள், ஆதிக்க சாதியினர் மற்றும் கம்யூனிஸ்ட்கள் தவிர்த்த பெரும்பாலான அரசியல் கட்சியினரிடையே கடும் எதிர்ப்பை உருவாக்கியது. எனினும் இதன் பிறகே இப்பகுதியில் தை முதல் நாளில் தலித் மக்களும் பொங்கல் வைக்கும் வழக்கம் உருவானது.  தை முதல் நாளில் பொங்கல் வைக்கும் உரிமையை பெற்றுத் தந்த  தியாகி என்.வி நினைவிடத்தில் ஓவ்வோர் ஆண்டும் தலித் மக்கள் மாலை  அணிவித்து மரியாதை செலுத்தி, அதன் பிறகே பொங்கல் வைப்பது வழக்கம். இந்த ஆண்டு ஜன15 அன்று வெண்டை யம்பட்டியில் தியாகி என்.வி  நினைவிடத்தில், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி பூதலூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் சி.பாஸ்கர் தலைமையில், கிராமத்தினர் மரியாதை செலுத்தினர். பின்னர் தமது வீடுகளில் பொங்கல் வைத்து ஒருவருக்கொருவர் வழங்கி மகிழ்ந்தனர்.

;