tamilnadu

img

வல்லமை நமக்கு உண்டு! சிஐடியு மே தின பிரகடனம்

சர்வதேச தொழிலாளி வர்க்க தினமான இந்த மே நன்னாளில், உலகம் முழுவதுமுள்ள உழைப்பாளிகளுக்கு சிஐடியு தனது உளப்பூர்வமான வாழ்த்துக்களை உரித்தாக்குகிறது. பத்து ஆண்டுகளுக்கு பிறகும் தொடர்கின்ற உலக முதலாளித்துவ நெருக்கடியின் பின்னணியில் நவீன தாராளமயக் கொள்கைகள்பெயரால், போராடிப் பெற்ற உரிமைகளை பறிப்பதை எதிர்த்து நடைபெறும் போராட்டங்களுக்கு சிஐடியு ஆதரவை தெரிவித்துக்கொள்கிறது.வெனிசுலா, சிரியா, பாலஸ்தீனம், ஈராக், ஏமன்,ஆப்கானிஸ்தான் மற்றும் பல நாடுகள் மீது யுத்தம்தொடுக்கும், ஆக்கிரமிப்பு தாக்குதல்களை நிகழ்த்தி வரும் ஏகாதிபத்தியத்தின் தலைமையிலான தலையீடு களை சிஐடியு மிக வன்மையாகக் கண்டிக்கிறது. இந்தநாடுகளில் உள்ள, அமெரிக்க ஏகாதிபத்திய சதிசெயல்களை எதிர்த்து போராடிவரும் அனைத்து முற்போக்கு சக்திகளுக்கும், மக்களுக்கும் சிஐடியு தன் ஆதரவை வழங்குகிறது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பகிரங்கஆதரவுடன் பாலஸ்தீனத்திற்கு சொந்தமான இடங்களை கைப்பற்றிவரும் இஸ்ரேலின் செயல் களை வன்மையாகக் கண்டிக்கிறோம். கிழக்கு ஜெரூ சலத்தை தலைநகராகக்கொண்டு 1967ல் இருந்த எல்லைகள் அடிப்படையில் சுதந்திர பாலஸ்தீனம் என்பதை அங்கீகரிக்கக் கோருகிறோம்.

சோசலிசமே இலக்கு

சுரண்டலற்ற சுதந்திரமான சோசலிச அமைப்பு முறையை லட்சியமாகக் கொண்ட சிஐடியு, சுரண்டலை அடிப்படையாகக் கொண்ட முதலாளித்துவ அமைப்பை முறியடிப்பதற்கான வர்க்கப் போராட்டத்தில் ஒருங்கிணைந்ததுதான் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டமும் என்பதை வலியுறுத்துகிறது.சோசலிசத்தை பாதுகாக்கவும், எவ்வித வெளிப்புற ஊடுருவலும், தாக்குதலும் இன்றி தாங்கள் விரும்புகிற சமூக அமைப்பு முறையை சுதந்திரமாக தேர்வு செய்வதற்கான உரிமையைக் காக்கவும் போராடும் மக்களின் பக்கம் சிஐடியு உறுதியாக நிற்கிறது. குறிப்பாக, அமெரிக்க ஏகாதிபத்திய சதிகளுக்கு எதிராகப் போராடி வரும் சோசலிச கியூபாவிற்கு ஆதரவை உறுதிப்படுத்துகிறோம். கியூபா மீதான சட்டவிரோதமான பொருளாதார தடைகளை நீக்கிட கோருகிறோம்.நவீன தாராள மயத்திற்கு எதிரான ஒன்றுபட்ட போராட்டங்களை சீர்குலைத்திட, மக்களை பிளவு படுத்துகிற சர்வதேச நிதி மூலதனம் மற்றும் கார்ப்பரேட்முதலாளிகளால் ஊக்குவிக்கப்பட்டு வரும் வலதுசாரி, பிற்போக்கு, இனவெறி, நிறவெறி, நவீன பாசிச மற்றும்பயங்கரவாத சக்திகளின் வளர்ச்சி நமக்கு மிகுந்தகவலை அளிக்கிறது. இத்தகைய தீய சக்திகளால் நவீன தாராளமயத்திற்கு மாற்றாக எதையும் முன்வைக்க முடியாது. தங்களின் கார்ப்பரேட் எஜமானர்களுக்கு தொண்டூழியம் செய்திட, மக்களின் அதிருப்தியை திசைதிருப்ப சகோதரத்துவ மோதல்களை வளர்த்திடு கின்றன. இதற்கு எதிராக உலகம் முழுவதும் போராடிவரும் மக்களுக்குஉறுதியான ஆதரவை சிஐடியு வழங்குகிறது.மக்களின் இத்தகைய எதிரிகளை அடையாளங் கண்டிடவும், முழு சக்தியையும் திரட்டி மக்களின் ஒற்றுமை காத்திடவும், உலகம் முழுவதுமுள்ள தொழிலாளி வர்க்கமும், உழைக்கும் மக்களும் முன்வரவேண்டுமென சிஐடியு அறைகூவி அழைக்கிறது.

போராடும் தொழிலாளர்க்கு ஆதரவு

தங்களின் உரிமைகள், ஊதியம், பணி மற்றும் வாழ்க்கைத் தரம் காத்திட; வளர்ந்த நாடுகள் உட்பட உலகம் முழுவதும் ‘சிக்கன நடவடிக்கைகளை’ எதிர்த்துபோராட்டங்களில் இணைந்து வரும் தொழிலாளர்களை சிஐடியு வாழ்த்துகிறது. இந்திய நாட்டில் நவீன தாராளமயக் கொள்கைகள் ‘துவங்கிய காலம் முதல் 18வதுமுறையாக, 2019 ஜனவரி 8-9ல் நடைபெற்ற பிரசித்தி பெற்ற நாடுதழுவிய பொது வேலை நிறுத்தத்தில் கலந்துகொண்ட தொழிலாளி வர்க்கத்தை சிஐடியு உளமார வாழ்த்துகிறது. இந்த வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு வழங்கிய விவசாயிகள், விவசாய தொழிலாளர் மற்றும் அனைத்து முற்போக்காளர்களுக்கும் நன்றியை உரித்தாக்குகிறோம். பாதுகாப்பு துறை உற்பத்தி, தொலைதொடர்பு போன்ற பல துறைகளில் மூன்று நாட்கள் வேலை நிறுத்தம் செய்த தொழிலாளர் களுக்கும், தைக்கின், டோயோடா, யமாஹா, பிரிக்கால்போன்ற பல பன்னாட்டுக் கம்பெனிகளின் பல ஆலை களில் போராடி வரும் தொழிலாளர்க்கும் நன்றியை உரித்தாக்குகிறோம்.

ஆளும் வர்க்கங்களின் அட்டூழியம்

குண்டர்களை பயன்படுத்தி ஆளும் வர்க்கங்கள் மேற்குவங்கம், திரிபுரா மற்றும் கேரளாவில் தொழிலாளி வர்க்கம் மற்றும் மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீது தாக்குதல் தொடுக்கின்றன. இதற்கு எதிராக போராடுபவர்களை பாராட்டுகிறோம். மேற்கு வங்கத்தில் திரிணாமுல் குண்டர்களும், திரிபுராவில் பாஜக மூர்க்கர்களும், மக்களை, குறிப்பாக இடதுசாரி ஆதரவாளர்களை தாக்கி வருகின்றனர். மக்களை சுதந்திரமாக வாக்களிக்க அனுமதிக்காமல் மாநிலஅரசுகள் ஜனநாயக நடைமுறைகளை கேலிக் கூத்தாக்கி வருகின்றன. டஜன் கணக்கில் இடதுசாரி ஊழியர்களும் ஆதரவாளர்களும் தாக்கப்பட்டுள்ளனர்; காயப்படுத்தப்பட்டுள்ளனர்; கொலை செய்யப் கட்டுள்ளனர். ஆனாலும் இம்மாநிலங்களில் தொழிலாளிவர்க்கம் இத்தகைய தாக்குதலை மென்மேலும் எதிர்த்து நிற்கின்றது. உச்சநீதிமன்றம் உள்ளிட்ட அரசியல்சட்ட அமைப்புகளை சிறுமைப்படுத்தி, தனது பிற்போக்கான ‘இந்துத்துவா’ சித்தாந்தத்தை கேளராவில் சந்தர்ப்பவாதமாக பயன்படுத்தி, பா.ஜ.க செல்வாக்கு பெற முயன்று வருகின்றது. ஆர்.எஸ்.எஸ் குண்டர்கள் வெறுப்பு மற்றும் வன்முறைகளை கட்டவிழ்த்து வருகின்றனர்; இடதுசாரி ஊழியர்களை கொலை செய்கின்றனர்.நாடு முழுவதும், குறிப்பாக பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் தலித்துகள் மற்றும் சிறுபான்மையினர் மீது அதிகமான தாக்குதல் தொடுக்கப்படுகிறது. பிற்போக்குத்தனமான, சமூக படிநிலைகளை அங்கீகரிக்கும் மனுதர்ம சித்தாந்தத்தை பின்பற்றும் பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ், தலித்துகள், பழங்குடி மக்கள் மற்றும் பெண்களை அடக்க முயல்கின்றன. தேர்தல் ஆதாயங்களுக்காக மட்டும் தாஜா செய்கின்றனர்.

பரஸ்பரம் தீனிபோடும் மதவாதம்

பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை மதவாதமும் அடிப்படை வாதமும் ஒன்றுக்கு ஒன்று தீனிபோடுபவை. எத்தகைய மதவாதமும், மக்களை அன்றாட பிரச்சனைகளிலிருந்து, போராட்டங்களிலிருந்து திசை திருப்பி ஒற்றுமையை சீர்குலைத்திடவே முயல்கிறது. நவீன தாராளமயக் கொள்கைகள் மற்றும் சுரண்டல் அமைப்பே உண்மையான எதிரி. அதற்கு எதிரான போராட்டத்தை மதவாதம் பலவீனப்படுத்துகிறது. இறுதியாகப்பார்த்தால் அனைத்து வடிவத்திலான மதவாதமும் சுரண்டும் வர்க்கங்களின் நலன்களையே பாதுகாக்கின்றன.மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகளை முன்னிறுத்தி, தொழிலாளர் விரோத கொள்கைகளை அம்பலப்படுத்தி, ஒன்றுபட்ட போராட்டங்களையும் நாட்டின் மதச் சார்பின்மையையும் பாதுகாத்து நிற்கும் ஊழியர்களின் தொடர்ச்சியான, உறுதியான முயற்சிகளை சிஐடியு பாராட்டுகிறது.நவீன தாராளமயக் கொள்கைகளால் உழைப்பாளிமக்கள் எவ்வளவுதான் கடினமாக ரத்தமும் வியர்வையும் சிந்திப் பாடுபட்டாலும், அவர்கள் உருவாக்கிய செல்வம் ஒரு சிலரிடம் குவிகிறது; சமத்துவமின்மை தீவிரமடைகிறது. உழைப்புச் சுரண்டல் அதிகரித்து செல்வக்குவிப்பு நிகழ்கிறது. சலுகைசார் முதலாளித் துவம், வரி ஏய்ப்பு, பொதுச் சொத்துக்களும், நிலம், வனம், சுரங்கம், நீர் போன்ற இயற்கை வளம் சூறையாடல், ஏழை விவசாயிகள் மற்றும் பழங்குடி மக்களை நிலத்திலிருந்து அப்புறப்படுத்துதல் அதிகரித்து வருகிறது.

செல்வம் யாருக்கு சொந்தம்?

‘செல்வம் உருவாக்குபவருக்கே சொந்தம்’ என்ற முழக்கத்துடன் மே தினம் கொண்டாடுமாறு, உலக தொழிற்சங்க சம்மேளனம் (றுகுகூரு) விடுத்துள்ள அறைகூவலை சிஐடியு முழுமையாக ஏற்கிறது. சுரண்டலை மையமாகக் கொண்ட முதலாளித்துவ அமைப்புக்கு எதிராகப் போராடி வரும் உறுதியான வர்க்கக் கண்ணோட்டத்துடன் செயல்படும் றுகுகூருவைபலப்படுத்துவோம்.லாபத்தை நோக்கமாகக் கொண்டு செயல்படும் முதலாளித்துவ அமைப்பில், மனித குலம் தனது கூட்டு முயற்சிகளில் உருவாக்கிய, அரிய பல விஞ்ஞான, தொழில்நுட்ப முன்னேற்றங்களின் பலன்களை சில நாடுகளும், சில கார்ப்பரேட் நிறுவனங்களும் தங்கள் வசப்படுத்திக் கொண்டன; மக்களின் நலன்களுக்கு பயன்படுவதற்கு மாறாக கார்ப்பரேட்டுகளின் லாபங்களை பெருக்கிக் கொண்டு, உழைக்கும் மக்களை ஓட்டாண்டியாக்கியுள்ளன. ஒருபுறம் செல்வம் ஒரு சிலர் கையில் குவிந்துள்ளது; மறுபுறம் கோடிக்கணக்கான மக்கள் வறுமை, வேலையின்மை, கல்லாமை, வீடின்மை, அடிப்படை வசதிகளின்மை, நோய் நொடிகளில் சிக்கித் தவிக்கின்றனர். இத்தகைய மனிதாபிமானமற்ற முதலாளித்துவ அமைப்பு முறை இனியும் தொடர உரிமையில்லை, தொடர அனுமதிக்கக்கூடாது.முதலாளித்துவ அமைப்பை தூக்கி எறிவது தொழிலாளி வர்க்கக் கடமை என்ற உணர்வை வளர்த்து,எல்லா வகையான சுரண்டலுக்கும் முடிவு கட்டும் இறுதிபோராட்டத்திற்கு தொழிலாளி வர்க்கத்தை தயார்ப் படுத்த சிஐடியு, இந்த மே நன்னாளில் சூளுரைக்கிறது.

இடதுசாரிகளைப் பலப்படுத்துவோம்

நடைபெற்றுவரும் நாடாளுமன்றத் தேர்தலில் தொழிலாளி விரோத மக்கள் விரோத, தேசவிரோத பா.ஜ.கவை முறியடித்திட தொழிலாளர்களும், அனைத்து உழைப்பாளிகளும், முற்போக்கு தேசபத்தி கொண்ட, நல்லெண்ணம் கொண்டுள்ளோர் அனை வரும் முன்வரவேண்டுமென சிஐடியு அறைகூவி அழைக்கிறது. கார்ப்பரேட்கள் நிர்பந்தப்படுத்தும் நவீனதாராளமயக் கொள்கைகளை பா.ஜ.க முடுக்கி விட்டுள்ளது; ஆர்.எஸ்.எஸ் கட்டளைக்கிணங்க மதவாத,பிளவுவாதக் கொள்கைகளை அமலாக்கிவருகிறது. நாடாளுமன்றத்தில், உழைக்கும் மக்களின் உற்ற நண்பன் இடதுசாரிகளை பலப்படுத்த பாடுபட வேண்டும்.கடந்த 5 ஆண்டு ஆட்சிக் காலத்தில், பாஜக தலைமையிலான மோடி அரசு தேச நலன்களை உள்நாட்டு வெளிநாட்டு கார்ப்பரேட்கள் வசம் அடகு வைத்து விட்டது. மக்களின் வாழ்க்கை கேள்விக்குறியாக மாறியுள்ளது.நமது பாதுகாப்பு துறை உள்ளிட்டு உள்நாட்டு உற்பத்திசக்திகளை அழித்து, அந்நிய மூலதனத்தை நிரந்தரமாக நமது உற்பத்தி சார்ந்து இருக்கும் ஒருநிலையை அரசு ஏற்படுத்தி வருகிறது. நமது பொதுத்துறை நிறு வனங்கள், நமது இயற்கை வளம், நிலம், சுரங்கம், வனம், கடல் உட்பட உள்நாட்டு, பன்னாட்டு கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்க்கப்படுகிறது. விவசாயிகள், பழங்குடி, மக்கள் மீனவர்கள் மற்றும் தொழிலாளர் வாழ்வாதாரம் இழந்து வருகின்றனர்.நவீன தாராளமயம் உலகம் முழுவதும் மரியாதை இழந்து, தோல்வியைச் சந்தித்து வருகிறது. ஆனால்சர்வதேச மூலதன நிர்ப்பந்தத்தின் பேரில் பா.ஜ.க தலைமையிலான அரசு நவீன தாராளமயக் கொள்கைகளை மென்மேலும் மூர்க்கமாக அமலாக்கி வருகிறது. ‘தொழில் நடத்துவதை எளிமையாக்குவது’ என்பதன் பேரால் மக்களை, நாட்டின் வளங்களை கொள்ளையடிப்பது எளிதாக்கப்பட்டுள்ளது. தொழிலாளரின் அடிப்படை தொழிற்சங்க உரிமைகள், மக்களின் ஜனநாயக, சட்டப்பூர்வமான உரிமைகள் மீதுகடும் தாக்குதல் தொடுக்கப்படுகிறது, தொழி லாளர்கள் கிட்டத்தட்ட அடிமைகள் என்ற நிலைக்குதள்ளப்படுகின்றனர். மாற்றுக் குரல்கள் நசுக்கப்படுகின்றன. மனித உரிமை ஆர்வலர்கள் தாக்கப்படுகின்ற னர்; சிறை வைக்கப்படுகின்றனர்; கொலை கூட செய்யப்படுகின்றனர்.


ஏகாதிபத்தியத்தின் தலைமையிலான நவீன தாராளமயக் கொள்கைகளை பாஜக அரசு கடந்த 5 ஆண்டு களில் தீவிரப்படுத்தியதால் ஏற்பட்ட விளைவுகள்:-

* வேலை இழப்பு மற்றும் வேலை வாய்ப்பை உருவாக்காத வளர்ச்சி.

* தனியார் துறையில் புதிய வேலைவாய்ப்பு உருவாக்கும் முதலீடுகள் இல்லை; ஆலைகள் மூடப்படுகின்றன.

* வேலையின்மை, குறிப்பாக நம் இளைஞர்கள் மத்தியில், கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவு வளர்ந்துள்ளது.

* கண்ணியமான, கௌரவமான, நிரந்தர பணியிடங்கள் மறைவு.

* பெரும்பாலான தொழிலாளர்களின் ஊதியம் தேக்கம் அல்லது வீழ்ச்சி.

* ஊதியம், வருமானம் மற்றும் செல்வம் பெருகிவரும் சமத்துவமின்மை,

* தொடரும் விவசாயிகள் தற்கொலை மற்றும் கிராமப்புற துயரம்.

* 100 நாள் வேலைத்திட்ட வேலை குறைவு.

* மந்தமாகி வரும் பொருளாதாரம்.

தொழிலாளர், விவசாயிகள், விவசாயத் தொழி லாளர், இளைஞர்கள், மாணவர்கள் உட்பட அனைத்து சமூக பிரிவினரின் வாழ்வாதாரம் காக்கும் போராட்டங் களை சிஐடியு வரவேற்கிறது; தலித்கள் மற்றும் பழங்குடிமக்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவினரின் சட்ட, ஜனநாயக உரிமைகள் நிலைநாட்ட நடைபெறும் போராட்டங்களையும் வரவேற்கிறது.


தேர்தலுக்குப் பின்னர்...

தேர்தலுக்குப் பின்னர் எந்த அரசு பதவிக்கு வந்தாலும், நவீன தாராளமயக் கொள்கைகளை முறியடித்திட மேற்கண்ட போராட்டங்களை தீவிரப்படுத்து மாறு சிஐடியு அறைகூவி அழைக்கின்றது. ‘கார்ப்பரேட் ஆதரவு’ என்ற நிலையிலிருந்து ‘மக்கள் ஆதரவு’ என்றநிலைக்கு கொள்கைகளின் திசைவழியை மாற்றிடதீவிரமாக ஒன்றுபட்ட போராட்டங்களை நடத்திடுவோம்!இத்தகைய மாற்றம் கொண்டு வரும் வல்லமை நமக்கு உண்டு. அனைவருக்கும் குறைந்தபட்ச கண்ணியமான ஊதியம், அனைவருக்கும் உணவு, அனைவருக்கும் வீடு, அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் சுகாதாரம் அனைவருக்கும் சமூக பாதுகாப்பு, ஓய்வூதியம், கண்ணியமான வாழ்விற்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் உத்தரவாதப்படுத்தக்கூடிய அளவு நமது நாட்டு இயற்கை வளம்/ மனித வளம் அமைந்துள்ளது.காலத்தின் தேவை மும்முனை போராட்டம் - நவீன தாராளமயம், மதவாதம், சாதீயவாத சக்திகள் மற்றும் சர்வாதிகாரத்திற்கு எதிரான போராட்டங்கள். நம்முன் உள்ள சவால்களை வெற்றிகரமாக சந்தித்திட தொழிலாளி வர்க்கத்தை முழுமையாக திரட்டிடுவோம்!அனைத்துப் பிரிவு உழைப்பாளி மக்களின் ஒற்றுபட்ட போராட்டங்களை கட்டவிழ்த்து விடுவோம்! மக்கள் விரோத சமூக பொருளாதார அரசியல் ஆட்சியைமாற்றிட போராட்டங்களை உயர்நிலைகளுக்கு கொண்டுசெல்வோம்!சுரண்டலை தீவிரப்படுத்தும் முதலாளித்துவ அமைப்பு, அதன் நவீன தாராளமயக் கொள்கைகளை எதிர்த்துப் போராட தொழிலாளர், ஏழை விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் ஒற்றுமையை சிஐடியு வலியுறுத்துகிறது.சுயேச்சையான பிரச்சாரங்களை முன்னெடுப்போம்! அனைத்துப் பகுதி உழைப்பாளி மக்களின் ஒன்றுபட்ட போராட்டங்களை உருவாக்க கூட்டு தொழிற்சங்க இயக்கத்தை பலப்படுத்துவோம்! இதன் மூலம் ஆக்கப்பூர்வமான மாற்றுக் கொள்கைகளின் பின்னால் உழைக்கும் மக்களை அணி திரட்டுவோம்!‘ஒன்றுபடு; போராடு’ என்பதை மையப்படுத்தி, 2019-20 முழுவதும், சிஐடியுவின் 50ம் ஆண்டு துவக்கம் மற்றும் முதல் தேசீய தொழிற்சங்க மையத்தின் நூறாவது ஆண்டைக் கொண்டாடும் வகையில் தொழிற்சங்க கல்வி மற்றும் இதர நடடிவக்கைகளில் ஈடுபடுவோம்! பெரும்திரள் போராட்டங்களை இடைவிடாமல் தொடர்ந்து நடத்துவதன் மூலமே, வர்க்க சக்திகளின் பலாபலனில் தொழிலாளி வர்க்கத்திற்கு சாதகமான ஒருங்கிணைந்த மாற்றம் கொண்டுவர முடியும் என சிஐடியு வலியுறுத்துகிறது.


இந்த மே நன்னாளில், தொழிலாளி வர்க்கத்திற்கு சிஐடியு விடுக்கும் வேண்டுகோள்கள்:நவீன தாராளமயக் கொள்கைகளை முறியடிக்க வும், மக்கள் ஆதரவு, தொழிலாளி ஆதரவு மாற்றுக்கொள்கைகளுக்காகவும் ஒற்றுமையை பலப்படுத்துவீர்! போராட்டங்களை தீவிரப்படுத்துவீர்!தொழிலாளர், விவசாயத் தொழிலாளர், ஏழை விவசாயிகள் இடையே சகோதரத்துவ உறவுகளை மேம்படுத்துவீர்! மாவட்ட, கிராம அளவில் இந்த அடிப்படைவர்க்கங்களின் ஒன்றுபட்ட போராட்டங்களை முன்னெடுப்பீர்!உஷாராக இருந்து, மக்களின் ஒற்றுமையை பிளவு படுத்தும் சாதியவாத சக்திகளின் சதிகளை முறியடிப்பீர்!தொழிலாளி வர்க்கம் மற்றும் அனைத்துப் பிரிவு உழைப்பாளிகளின் உண்மையான எதிரியை அடையாளம் காண்பீர்! முதலாளித்துவ அமைப்பு மற்றும் அதன் அரசியல், அந்த அமைப்பை வளர்த்திடும் சக்திகளே எதிரி! சுரண்டல் ஒழிப்பு போராட்டத்திற்கு தயாராவீர்!


சர்வதேச பாட்டாளி வர்க்க ஒற்றுமை ஒங்குக!

முதலாளித்துவம், ஏகாதிபத்தியம் ஒழியட்டும்!

சோசலிசம் நீடு வாழ்க!

உலகத் தொழிலாளர்களே ஒன்று சேர்வீர்!

தமிழில்: ஆர்.சிங்காரவேலு

;