மத்திய, மாநில அரசுகள் சொல்லுக்கும் செயலுக்கும் இடைவெளி அதிகம் கொண்டவை என்பது போலவே, கொரோனாவிற்கும் அதன் அறிகுறிக ளுக்குமான இடைவெளி அதிகரித்து வருகிறது. கோவிட் 2 வைரஸ் இந்திய ஆட்சியாளர்களையும், அறிவியலாளர்க ளையும் திணறச்செய்கிறது. குறிப்பாக உலகின் பல நாடுகள் தங்கள் நாடுகளில், குழந்தைகளுக்கு வைரஸ் தொற்று கண்டறியப்படவில்லை என்றது. அடுத்து சளி, இருமல், காய்ச்சல் ஆகிய அறிகுறிகள் கொரோனாவை கண்டறிய உதவும் என்றனர். ஆனால் இந்தியாவில் மேற்கண்ட இரண்டுமே பொய்த்துப் போய் உள்ளது. குழந்தைகள் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 104 குழந்தைகள் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அடுத்து கண்டறியப்பட்ட நோயாளிகளில் 80 சதமானோர் எந்தவித அறிகுறியும் காணாதவர்கள் ஆவர்.
அதாவது சத்தான உணவு இல்லாமை, பிற நாடுகளின் வயோதிகர்களும், நம் ஊரின் குழந்தைகளும் ஒரே வித மான பாதிப்பிற்கு ஆளானதை வெளிப்படுத்துகிறது. இரண்டாவது பெரும்பான்மையான மக்கள் நெடுங்கால மாக பல நோய்த் தொற்றுகளுடன் அல்லது, நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த நிலையில் வாழ்ந்து வருகின்றனர். இதன் காரணமாகவே, பிறநாடுகளில் இருந்த அறிகுறிகள், இங்கு வெளிப்படவில்லை எனக் கருதலாம். இவை. இரண்டையும் எதிர்கொள்ள சத்தான உணவு அனைவருக்கும் கிடைக்கச் செய்ய வேண்டியுள்ளது. மற்றொருபுறம், வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும். ஆனால் இவை இரண்டையும் செய்யக் கூடிய கொள்கைகளைக் கொண்டதாக மத்திய, மாநில ஆட்சி இல்லை. இன்றைய தொற்று நோய் பரவல் காலத்திலும் அதற்கான நடவடிக்கையை, மேற்கொள்ள தயாராக இல்லை.
காய்ந்த வயிறில் கட்டிக்கொள்ள ஈரத்துணி
டெங்கு ஜுரத்தில் இருந்து தப்பிக்க ஆறுமாதம் நிலவேம்பு கசாயம்; தற்போது, கபசுர குடிநீர், அடுத்து என்ன? என்பது தான் தொழிலாளர்களின் வாழ்நிலை. பிரதமர் ஒருமுறை தனது உரையில் கசப்பு மருந்து நல்லது என்று பேசினார். ஆறு ஆண்டுகளாக தொழிலாளர்களுக்கு கசப்பு மருந்து மட்டுமே வழங்கி வருகிறார். டெங்கு ஜூரத்தைக் கடந்து வாழ்க்கையை தனது உழைப்பின் மூலம் நடத்த முயற்சித்த தொழிலாளர்கள், கொரோனா பொது முடக்கத்தில் எழுந்திருக்க முடியாத நிலை யில் முடக்கப்பட்டுள்ளனர். மாநில அரசின் அறிவிப்பான ஆயிரம் ரூபாய் கையில் கிடைக்காதோர் பலலட்சம் பேர் உள்ளனர். பட்டியலில் இல்லாதோரும் பல லட்சம் பேர் உள்ள னர். தொழிற்சங்கங்கள், எதிர் கட்சிகள் வலியுறுத்திய குறைந்த பட்ச நிவாரணம் 7500 ரூபாய் என்ற கோரிக்கை குறித்து பரிசீலிக்க, மத்திய, மாநில அரசுகள் தயாரில்லை.
பிற நாடுகளின் நிலை என்ன?
உலகின் பல நாடுகள் குறிப்பாக தென் கொரியா ரூ.57400 (820 டாலர்) அளவிற்கான நிவாரணத்தொகையை அறிவித்தது. சீனா குறைந்த பட்ச கூலி என்ன தீர்மானிக் கப்பட்டதோ அது மாதா மாதம், அமைப்புசாரத் தொழிலாளர்க ளுக்கு வழங்கப்படும் என்றும், ஜப்பான் 928 அமெரிக்க டாலர் (ரூ.64960) நிவாரணத்தொகையாகவும் அறிவித்தன. பிரேசில் ரூ. 8400 ஒவ்வொரு மாதமும் என அறிவித்தது. ஜப்பான் தவிர மற்றவை இந்தியா போல் வளரும் நாடுகள் பட்டியலிலுள்ளவைதான். இவை அனைத்திற்கும் பிரதமர் மோடி, ஒருமுறையோ அல்லது அதற்கும் மேலோ பயணம் செய்து பல ஒப்பந்தங்களைக் கண்டவர். ஆனால் இந்திய நாடு முழுவதும் அவ்வாறு ஒரு வழிகாட்டுதலைதான் தரவில்லை. மூன்று முறை முதல்வர்களுடனும், கம்யூனிஸ்ட் கட்சிகளைத் தவிர்த்த இதர கட்சி தலைவர்களுடன் ஒரு முறையும், மூன்று முறை தொலைக் காட்சி மூலமும் பிரதமர் உரை நிகழ்த்தி இருக்கிறார். ஆனால் மேலே குறிப்பிட்ட நாடுகள் கூறியது போல், எந்த ஒரு அறிவிப்பையும், வெளியிடவில்லை. மாறாக கைதட்டு, விளக்கேற்று, ஆரோக்கிய சேது ஆப்பை பதிவிறக்கம் செய், தனித்திரு, விலகி இரு, வீட்டில் இரு என இலவச அறிவுரைகளை மத்திய, மாநில அரசுகள் வழங்கி வருகின்றன.
எல்லாவற்றிற்கும் மேலாக, மாநிலம் விட்டு மாநிலம், மாநிலத்திற்குள்ளேயே என இரு ரக இடம்பெயர் தொழிலா ளர்களும், மிகக் கடுமையான பாதிப்பிற்கு ஆளாகியுள்ள னர். அழைத்து வந்த ஒப்பந்ததாரர்களும் முதன்மைப் பணி வழங்குவோரும், சில இடங்களில் உதவினாலும், பெரும்பா லான இடங்களில் அரசின் நிவாரணங்களை எதிர் பார்த்து, ஏமாந்து நிற்கும் துயரத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.
கூலி கேட்கும் தகுதி இல்லையா?
மேற்படி இலவச ஆலோசனைக்கான மூலக்கரு என்ன? நிவாரணத்திற்காக கையேந்தி நிற்கும் தொழிலாளர்கள், உழைப்பு என்ற தங்களின் சரக்கை விற்பனை செய்ய வழியில்லை. எனவே வேலையில்லா நாள்களுக்கு, உரிமை யுடன் கூலி கேட்பதற்கான தகுதியை இழந்து விடுகின்ற னர் என்பதுதான் அது. அமைப்பு சார்ந்த அல்லது அமைப்பு சாராத் தொழிலாளி என யாராக இருந்தாலும், ஏற்கெனவே அவர் பெறும் கூலி, முழு உழைப்பு நேரத்தில் பாதிஅளவிற்கு உரியதாக மட்டுமே உள்ளது. இதன் காரணமாகத் தான், ஒரு நிறுவனம் பலவாகப் பெருகுகிறது. புதிய அசையா சொத்துக்கள் அதிகரிப்பு, தொழிலாளியின் உழைப்பில் இருந்தே உருவாகிறது என்ற முதலாளித்துவப் பொருளா தாரம் குறித்து காரல்மார்க்ஸ் கூறியதை, வலுவாக வாதிடு வதன் மூலமே, உரிமையுடன் நிவாரணத் தொகையைப் பெற வழிவகுக்கும்.
முதுகில் குத்தும் குத்தீட்டி
பொது முடக்க காலத்தை கூடுதலாக பயன்படுத்தி, முதலா ளித்துவ விசுவாசத்தை பாஜக ஆட்சி அதிகப்படுத்தி வருகிறது. முதலில், வேலை நேரத்தை 8 மணியில் இருந்து 12 மணிநேரமாக உயர்த்தும் திருத்தத்தை மேற்கொண்டது. தற்போது தொழிலுறவு சட்ட திருத்தங்களை 8 நாள் என்கிற குறுகிய அவகாசத்தில், நாடாளுமன்ற நிலைக்குழு மக்க ளவை தலைவர் ஓம்பிர்லாவிடம் தாக்கல் செய்திருக்கிறது. ஏப்ரல் 14 அன்று தொலைக்காட்சியில், மோடி உரை நிகழ்த்தினார். ஏப்ரல் 15 அன்று நிலைக்குழு தலைவரான பிஜு ஜனதா தள தலைவர் பர்த்துரு ஹரி மகதா, தனது குழு உறுப்பினர்களுக்கு மெயில் மூலம் ஆவணங்களை அனுப்பி, 8 நாட்களுக்குள் கருத்துக்களைக் கேட்டுள்ளார்.
21 பேர் கொண்ட குழுவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் எளமரம் கரீம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பி னர் க.சுப்பராயன், தி.மு.கவை சார்ந்த மு. சண்முகம் ஆகி யோர் மட்டுமே மாற்று கருத்துக்களை முன் வைத்துள்ளனர். நாடாளுமன்ற வரலாற்றில் இதுவரையிலும் அமைக்கப்பட்ட நிலைக்குழு சார்பில் இவ்வளவு விரைவாக அறிக்கை தாக்கல் செய்தது இதுவே முதல் முறையாக இருக்கக் கூடும்.
பிரதமர் மோடியின், உரைக்கும், நிலைக்குழு அறிக்கை தாக்கல் செய்ததற்கும், உள்ள தொடர்பு முக்கியமானது. மோடி தனது உரையில், நிறுவனங்கள் தங்கள் தொழிலா ளர்களை வேலைநீக்கம் செய்வதோ, குறைப்பதோ கூடாது; ஏப்ரல் மாதத்திற்கான ஊதியத்தை வழங்க வேண்டும் என் பதை வலியுறுத்தினார். மறுநாளே மெயில் மூலம் கருத்து கேட்பு நடத்திய நிலைக்குழு மூன்று உறுப்பினர்களின் எதிர்ப்பு டன், இக்காலத்திற்கான ஊதியத்தை வழங்க தனியார் நிறு வனங்களிடம் கட்டாயப் படுத்த முடியாது எனக் கூறியுள்ள னர். ராஜாவை மிஞ்சிய ராஜ விசுவாசத்துடன் நிலைக்குழு செயல்பட்டுள்ளது.
மற்றொரு புறம், மத்திய அரசை முதலாளிகள் சங்கத்தி னர் நிர்ப்பந்திக்கும் வகையில் கருத்து தெரிவித்து வரு கின்றனர். நோய் தொற்று பரவல் தடுப்பு சட்டம், ஊதியம் குறித்து எந்தவிதமான வரையறையும் கூறவில்லை. நோய் தொற்று கொண்ட நபர் வேலை செய்ய அனுமதிக்கப் பட்டால் நிர்வாக பிரிவு அதிகாரிகள் கடுமையாக தண்டிக்கப் படுவர் எனக் கூறுகிறது. இது போன்ற சட்டங்களால் பய னில்லை, உற்பத்தி துறைக்கு சாதகமாக இல்லை எனவும் முதலாளிகள் கோபத்தில் உள்ளனர். இந்த கோபத்திற்கு வடிகால் அமைப்பதைப் போல், மத்திய அரசு ஊழியர்க ளுக்கு ஒன்னரை ஆண்டுகளுக்கு அகவிலை படி உயர்வு இல்லை, என அறிவித்துள்ளது. மாநிலத்தில் உள்ள அதிமுக அரசும் அதை பின்பற்றியிருக்கிறது. தனியார் நிறுவனங்கள் அரசுகளின் வழிகாட்டுதலை பல மடங்கு வேகமாக அடுத்த கட்ட ஊதிய உயர்வு உள்ளிட்ட பிரச்சனைகளில் கையாளும் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியும்.
ஆக மொத்தத்தில் எல்லா திசையிலும் தொழிலாளிகள் மீதான தாக்குதலை மத்திய, மாநில அரசுகள் அதிகரிக்கும் வேலையில், தொழிலாளர்கள் அடங்கி இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு என்பதே வரலாறு. கொதிநிலையில் இருக்கும் தொழிலாளர்கள் வழக்கத்தை விட அதிகமாக போராடுவது தவிர்க்க இயலாது. அந்தப் போராட்டங்களை, தொழிலாளி வர்க்க உணர்வு மட்டுமே தீவிரமாக வழி நடத்த முடியும்.