சென்னை:
வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:-
அந்தமான் மற்றும் அதனை ஒட்டி உள்ள கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடைந்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப் பெற்று ஆந்திரா நோக்கி நகரும்.காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, தமிழகத்தில் கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, நீலகிரி, வேலூர், திருப்பத்தூர் மற்றும் கோவையில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.சென்னையில் சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.வங்கக் கடலில் அந்தமான் பகுதியில் வருகிற 14ஆம் தேதி புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது.இவ்வாறு தெரிவித்துள்ளது.