tamilnadu

img

வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில்

7 வது நாடாளுமன்றத் தேர்தல் மிகுந்த பரபரப்பு களுக்கு இடையே நடந்து முடிந்து மோடி தலைமை யிலான பா.ஜ.க.அரசு மீண்டும் அதிகபலத்துடன் ஆட்சிப் பொறுப்புக்கு வந்துள்ளது. குஜராத் மாநிலத்தில் மோடிக்கு வலது கரமாக இருந்து குஜராத்தில் சிறுபான்மை முஸ்லிம்கள் நர வேட்டையாடப்பட்ட கலவரம் நடைபெற்ற போது மாநில உள்துறை அமைச்சராக இருந்து அத்தனை அக்கிரமங்களுக்கும் ஆக்கமும், ஊக்கமும் அளித்த அமித்ஷா தற்போது மத்திய அரசின் உள்துறை அமைச்ச ராகப் பொறுப்பேற்றுள்ளார்.  நாடாளுமன்றத் தேர்தலின் பிரச்சாரத்தை மடை மாற்றம் செய்ய மோடி வகையறாக்களால் முடிந்தது. பண மதிப்பு நீக்கம் ஏற்படுத்திய தாக்கம், அதனால் சிறு குறுதொழில்கள் பாதிப்பு, பொருளாதாரம் பின்னோக்கி நகர்ந்தது, அதனால் ஏற்பட்ட பாதிப்புகளை மக்கள் மனதில் இருந்து அகற்ற பாஜகவினரால் முடிந்தது. ஜி.எஸ்.டி. அம லாக்கத்தினால் ஏற்பட்ட வணிக பாதிப்புகள், விலைவாசி உயர்வு உள்ளிட்டவையும் பிரதான விவாதப் பொருளாக ஆகாமல் பார்த்துக் கொண்டனர். தப்பித் தவறி கூட 2014 ல் தாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை மக்கள் நினைவில் வராமலும் பார்த்துக் கொண்டனர். அன்று ‘வளர்ச்சி நாயக னாக’ அறிமுகப்படுத்தப்பட்ட மோடியின் 5 ஆண்டு கால ஆட்சியில் ஏற்பட்ட வளர்ச்சி குறித்து வாயே திறக்கவில்லை.பிரதமர் பதவியின் பெரும்பாலான காலத்தை வெளிநாடு சுற்றுப் பயணங்களிலேயே கழித்த மோடி 2 மாத காலம் உள் நாட்டில் சூறாவளிபயணம் வந்து பிரச்சாரம் செய்த போதும் மேற்கண்ட பிரச்சனைகள் குறித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை. 

மோடி தலைமையில் பாஜகவினரும், சங் ஆதரவு ஊடகங்களும் புல்வாமாவில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலையும், அதற்கு இன்னுயிரை ஈந்த 44 சி.ஆர்.பி.எப்  வீரர்களின் தியாகத்தையும் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தின் முக்கிய உத்தியாக பயன்படுத்திக் கொண்டனர். இந்த தாக்கு தலுக்கு காரணம் மோடி அரசின் கையாலாகாத் தனம் என்ற உண்மையை யாராலும் எழுப்ப முடியாத அளவிற்கு தேசிய உணர்வை பயன்படுத்திக் கொண்டனர். அதை ஒட்டி பாகிஸ்தானில் நடைபெற்ற துல்லியத் தாக்குதல் மோடி என்ற நாயகனால் மட்டுமே சாத்தியம் ஆயிற்று என்ற பிம்பத்தைக் கட்டமைத்தனர். இது குறித்தெல்லாம் கேள்வி  எழுப்பியவர்கள் தேச துரோகிகள் என்று கட்டம் கட்டப்பட்ட னர். மிகப் பெரிய அளவில் நடைபெற்ற ரபேல் போர் விமான பேர ஊழல் கூட பின்னுக்குத் தள்ளப்பட்டது. இது குறித்து எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகள் அனைத்தும் எந்த பதிலு மின்றி உதறித் தள்ளப்பட்டன. மோடி சவுக்கிதார் என்று பிரகடனப்படுத்தப்பட்டார். அவரைப் பின் தொடர்ந்து பா.ஜ.க. தலைவர்கள் அனைவரும் சவுக்கிதார் அடை மொழியுடன் பவனி வந்தனர்.கார்ப்பரேட்டுகள் வாரி வழங்கிய பல்லா யிரம் கோடி தேர்தல் பத்திரம் மூலமாக பணம் பா.ஜ.க.வுக்கு பெருமளவில் உதவின. மேலும் தேர்தல் ஆணையம் பா.ஜ.க.வின் அத்துமீறல்களுக்கெல்லாம் துணை போயிற்று. ஊடகங்களும், சமூக ஊடகங்களும் பா.ஜ.க. வின் பொய் பிரச்சாரத்துக்கும் உதவின.இத்தகைய சாக சங்கள் தேர்தலில் பலனளித்தன. தமிழ்நாடு உட்பட சில மாநி லங்கள் தவிர மற்ற பெரும்பாலான மாநிலங்கள் இத்தகைய மோசடிப் பிரச்சாரத்திற்கு பலியாகின. எதிர்க்கட்சிகளோ தேசிய அளவில் வலுவான எதிர்ப்பை காட்ட இயலாமலும், மக்கள் மத்தியில் நம்பிக்கை ஊட்ட இயலாமலும் சிதறிக் கிடந்தன. தற்போது முன்னை காட்டிலும் அதிக பலத்துடனும், தீவிரத்துடனும் மோடி தலைமையில் ஆட்சி. 

இரண்டாவது தடவையாக ஆட்சிக்கு வந்த மோடி முதல் தடவையைப் போல் நாடாளுமன்ற கட்டடத்தை விழுந்து வணங்கவில்லை. மாறாக அரசியல்சட்ட புத்தகத்தை வணங்கினார். நாடாளுமன்ற கட்டடத்தை வணங்கி ஆட்சிக்கு வந்த முதல் ஆட்சி காலத்தில் அவர் நாடாளு மன்றத்திற்கு எவ்வித மரியாதையும் அளிக்கவில்லை. மாறாக நாடாளுமன்றத்திற்கு வருவதையோ, விவாதங்க ளுக்கு பதிலளிப்பதையோ ஒரு பொருட்டாகக் கூட கடைப் பிடிக்கவில்லை. உண்மையில் நாடாளுமன்றம் சிறுமைப் படுத்தப்பட்டது. தற்போது அரசியல் சட்டத்தை வணங்கிய நிகழ்வைப் பார்க்கும் போது அவரது அடுத்த குறி அரசியல் சட்டமாகத் தான் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே கலாச்சாரம் என்பதே ஆர்.எஸ்.எஸ்.சின் கொள்கை, குறிக்கோள். தற்போது ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரகர் மோடி அதிக பலத்துடன் மீண்டும் பிரதமர் பதவியில். எனவே அக் கொள்கைகளை நிறைவேற்றும் நகர்வுகள் துவங்கியுள்ளன. “புதிய கல்விக்கொள்கை அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் இந்தி மொழி கல்வி கட்டாயம் என அறிவிக்கப்பட்டது. சமஸ்கிருதக் கல்விக்கும் முக்கியத்துவம். தமிழ்நாடு உட்பட ஒரு சில மாநிலங்களில் மட்டுமே எதிர்ப்பு. ஹிந்தி கல்வி யின் முக்கியத்துவம் குறித்த விவாதங்கள் துவங்கப்பட்டன. பின்னர் எதிர்ப்பின் காரணமாக விரும்பிய மொழியை மூன்றாவதாக படிக்கலாம் என்று அறிவிப்பு. இருந்தும் அந்த ஆபத்து நீங்கவில்லை.  சங் பரிவாரத்தின் நடைமுறை உத்தியை அறிந்தவர்களுக்கு இதன் ஆபத்து நீங்கவில்லை என்பது தெரியும். தற்போது ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு, ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற அறி விப்புகள் வெளியாகியுள்ளன. இது குறித்து ஆதரவாகவும் எதிராகவும் விவாதங்களைத் துவக்கியுள்ளது. ஹைட்ரோ கார்பனும், நீட் தேர்வும் தமிழக மக்களை நர வேட்டையாடு கிறது. தங்களது நோக்கத்தை நிறைவேற்றவே இத்தகைய விவாதங்கள். துவக்கத்தில் சில நகர்வுகள் பின் வாங்கப் பட்டாலும், பின்னர் அத்தகைய முடிவுகளிலிருந்து இந்த அரசு பின்வாங்கப் போவதில்லை.

மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்த பின்னர் ‘முத்தலாக் சட்டத்தை’ மீண்டும் நிறைவேற்றத் துடிக்கிறார். முஸ்லிம் பெண்கள் மீது கரிசனம் கொள்பவராகக் காட்டிக் கொள்ளும்  பிரதமர் மோடி சாதி மறுப்பு திருமணம் செய்யும் இளம் பெண்களும், இளைஞர்களும் கொடுமையான முறையில் கொல்லப்படும் நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று வரு வதை தடுக்கவோ அல்லது தலித்துகள் மீது நடைபெறும் சாதிய வன் கொடுமைகளுக்கு முடிவு கட்டவோ எவ்வித முன்னெடுப்பும் செய்யாமல் உள்ளார். முஸ்லிம் பெண்கள் மீதான கரிசனம் உண்மையில் முஸ்லிம்கள் மீதான வெறுப்பு அரசியலின் அங்கமே என்பது நிதர்சனம். மோடி பிரத மராகப் பொறுப்பேற்ற பின்னர் முஸ்லிம்கள் மீதான தாக்கு தல்கள்  தினசரி செய்திகளாகி வருகின்றன. ஜெய் ஸ்ரீராம் என முழக்கமிடக் கூறி சங் பரிவாரக் கும்பல்கள் நடத்தும் காட்டு மிராண்டித்தனமான தாக்குதல்கள் தொடர்கின்றன. முகம்மது பர்கத் ஆலம் எனும் 25 வயதான டெய்லர் பள்ளி வாசலில் தொழுகை முடிந்து வந்த போது குருகிராம் எனும் இடத்தில் அவரைச் சூழ்ந்த சங் பரிவார குண்டர்களால் ஜெய் ஸ்ரீராம் என்றும், வந்தே மாதரம் என்றும் கூறுமாறும், தலையில் அணிந்திருந்த தொப்பியைக் கழற்றுமா றும் கூறி அடித்து துன்புறுத்தியதாக 27.5.2019 தேதிய தி ஹிந்து ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டது. முகம்மது காசிம் எனும் முஸ்லிம் பீகார் மாநிலத்தில் பெகுசராய் மாவட்டத்தில் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டார். அவர் பெயரைக் கேட்டறிந்து முஸ்லிம் என்பதாலேயே இக்கொடுஞ் செயல் நடைபெற்றதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது. மிர் காசிம் எனும் 28 வயது இளைஞர் கும்ப்ளி கிராமத்தில் சுடப்பட்டார்.தில்லியில் மதரசா ஆசிரியர் முகம்மது மோமின் தாக்கப்பட்டார்.மகாராஷ்டிர மாநிலம் பூனாவைச் சார்ந்த மகப் பேறு மருத்துவர் அருண் கத்ரே புதுதில்லியில் ஜந்தர் மந்தரில் சங் பரிவார குண்டர்களால் ஜெய் ஸ்ரீராம் என முழக்கமிடுமாறு கூறி தாக்கப்பட்டார். பைசல் எனும் முஸ்லிம் ஓட்டுநர் மீது மகாராஷ்டிராவில் நடைபெற்ற தாக்குதலில் அவர் படுகாயம் அடைந்தார். 

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் அருகே கித்வாய் எனும் கிராமத்தில் முகம்மது தாஜூதீன் எனும் 16 வயது சிறுவனைச் சூழ்ந்த சங்பரிவார குண்டர்கள் ஜெய் ஸ்ரீராம் எனக் கூறுமாறு கடுமையாகத் தாக்கினர். அவன் அலறல் கேட்டு பக்கத்திலுள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ள னர். ஜார்க்கண்டில் தப்ரீஸ் எனும் இளைஞர் அது போல் சங் பரிவாரத்தினரால் ஜெய் ஸ்ரீராம் எனக் கூறச் சொல்லி தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இது குறித்து நாடாளுமன்றத்தில் எழுப்பிய போது பிரதமர் மோடி ஒரு சிறு நிகழ்வுக்காக ஒரு மாநிலத்தை இழிவுபடுத்தாதீர்கள் என்று கூறியது பிரச்சனையை திசை திருப்பும் செயல். மேற்கு வங்கம் மாநிலம் 24 பர்கானா மாவட்டத்தில் 26 வயதான ஹபீஸ்முகம்மது சாருக் ஹால்தர் எனும் 26 வய தான மதரசா ஆசிரியர் ரெயிலில் பயணம் செய்து கொண்டி ருந்த போது அவரை ஜெய் ஸ்ரீராம் என கூறச் சொல்லி சங் பரிவார குண்டர்களால் தாக்கப்பட்டு, ரெயிலிலிருந்து விட்டு வெளியே வீசப்பட்டார். மேற்கு வங்கத்தில் இத்தகைய மத வெறிச் சம்பவம் முன்னர் கேள்விப்படாத ஒன்று. இடது முன்னணி ஆட்சியில் பாப்ரி மசூதி தகர்ப்பை ஒட்டி நாடு முழுக்க மதக் கலவரம் நடைபெற்ற போது கூட மேற்கு வங்கத்தில் ஒரு சிறு சம்பவம் கூட நடை பெற்ற தில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

கேரள மாநிலத்திலிருந்து வயதான பசுக்களை வட  மாநில கோசாலையில் சேர்ப்பதற்காக கொண்டு சென்ற விக்கிரமன் என்பவர் பசு குண்டர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டு கொல்லப்பட்டார்.தொடர்ந்து இத்தகைய தாக்குதல்கள் சிறுபான்மை மக்கள் மீது நடைபெற்று வருவதாகவும், சங் பரிவார குண்டர்களின் மத வெறி செயல்கள் அதிகரித்து வருவதாகவும் செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன. சமீபத்தில் பா.ஜ.க. எம்.பிக்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி இத்தகைய தாக்குதல்கள் குறித்து வருத்தம் தெரிவித்தோ, இத்தகைய தாக்குதல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தோ ஒரு வார்த்தை கூட பேசவில்லை. எனவே மோடி அமித்ஷா வகை யறாக்களின் ஆசியோடு தான் இத்தகைய மத வெறி வன் முறைகள் நடைபெறுகின்றன என்ற முடிவுக்கே வர இயலும். மோடி ஆட்சியின் இரண்டாவது இன்னிங்ஸ் முதல் ஐந்தாண்டு காலத்தை விட மிகவும் மோசமான ஆட்சியாக வே இருக்கும் என்பதற்கான அறிகுறிகளே தென்படுகின்றன. சங் பரிவாரத்தின் நிகழ்ச்சி நிரலை  நிறைவேற்றுவதும், வகுப்புவாத வன்முறைகளை ஊக்குவித்து வெறுப்பு அரசியலை அரசின் துணையுடன் நிறைவேற்றுவதும், ஆர்.எஸ்.எஸ். எனும் பாசிச அமைப்பின் நோக்கமான ஹிந்து ராஷ்டிரத்தை நிறுவும் நோக்கத்தை நிறைவேற்றும் வகையிலான நடவடிக்கைகளுமே தொடர்ந்து வரும். 

சிறுபான்மை மக்கள் அச்சத்துடன் வாழ்வதும், தேச முழுவதும் உள்ள மக்கள் கார்ப்பரேட்டுகளின் கொள்ளை க்கு உட்படுத்தப்படுவதும் தொடரும் நிகழ்வுகளாகவே இருக்கும். இதற்கான அறிகுறிகளே தெரிகின்றன. எனவே இத்தகைய ஆபத்துகளிலிருந்து நாட்டையும் மக்களையும் பாதுகாக்க மதச்சார்பற்ற சக்திகளும், மக்கள் நலம் விரும்பும் அனைத்து பகுதியினரும் ஒன்றுபட்டு குரல் எழுப்பு வதும், தெருக்களில் இறங்கி போராடுவதும் தவிர்க்க இய லாதவை. இதுவே நம்முன்னால் இருக்கும் மிக முக்கிய கடமை. அக்கடமையை நிறைவேற்ற ஒன்றுபடுவோம்.  

கட்டுரையாளர்: சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர்