tamilnadu

img

வேளாண் நிலம் : வயல்வெளிகளில் மருந்து தெளிக்க ஆளில்லா குட்டி விமானம்

வயல்வெளிகளில் மருந்து தெளிக்க உதவும், தானியங்கி முறையில் இயக்கப்படும் குட்டி விமானத்தை புதுச்சேரி கதிர்காமம் சேர்ந்த சிவசுப்பிரமணியம் மகன் கார்த்திகேயன் (24) உருவாக்கியுள்ளார். இவர் தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் மின்னணு மற்றும் தகவல் தொடர்பியலில் பொறியியல் பட்டம் பெற்றவர். இவரது இந்த குட்டி விமானம் மூலம் மருந்து தெளிக்கும் செயல் விளக்கம், பேராவூரணியில் வழக்கறிஞர் சிவேதி நடராஜன் என்பவரின் தென்னந்தோப்பு, எள் பயிரிடப்பட்ட வயலில் நடைபெற்றது.

ஜி.பி.எஸ். கருவி மூலமாக எல்லைகளை அளந்து, அதற்குட்பட்ட பகுதியில் மட்டும் தென்னங்கன்று மற்றும் எள் பயிர்களின் மீது குட்டி விமானம் மூலமாக மருந்துகள் தெளிக்கப்பட்டது. இந்த செயல்விளக்க முறை நிகழ்ச்சியை பேராவூரணி, பழைய பேராவூரணியை சேர்ந்த விவசாயிகள் பலர் பார்வையிட்டனர். குட்டி விமானத்தின் செயல்பாடு குறித்து பொறியாளர் கார்த்திகேயன் கூறுகையில், “வெளிநாடுகளில் இதுபோன்ற குட்டி விமானத்தை விவசாயப் பணிகளில் 20 ஆண்டுகளுக்கு முன்பே அறிமுகப்படுத்திவிட்டனர். தமிழகத்தில் கோவை, திருநெல்வேலியில் சில விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர். 

நமது பகுதியில் பயன்படுத்த ஆளில்லா குட்டி விமானத்தை வடிவமைக்க முடிவு செய்தோம். என்னுடன் படித்த நண்பர்கள் சசிதரன் (23), பரத் (23), ராம்குமார் (22), உதவியுடன் இதை வடிவமைத்துள்ளேன். இதன் அகலம் 2மீட்டர். உயரம் 60 செ.மீ.ஆகும்..20 மீட்டர் உயரம் மட்டுமே இந்த விமானம் பறக்கக் கூடியது. மருந்தின் கொள்ளளவு 10 லிட்டர் ஆகும். விவசாய நிலங்களில் நான்கு முனைகளிலும் 4 புள்ளிகளை கணக்கிட்டு இந்த விமானத்தை இயக்கினால், தானாகவே அந்த எல்லைக்குள் மருந்து தெளித்துவிட்டு மீண்டும் புறப்பட்ட இடத்துக்கு திரும்பி வந்துவிடும். மேலும், ரிமோட் கன்ட்ரோல் மூலமாகவும் நமக்கு வேண்டிய பகுதிக்கு விமானத்தை இயக்க முடியும்.

பேட்டரியில் 30 நிமிடங்கள் சார்ஜ் செய்தால், ஓர் ஏக்கர் விவசாய நிலத்தை 5 நிமிடங்களில் மருந்து அடித்து முடிக்கலாம். மருந்து சீராக அனைத்துப் பயிர்களின் மீதும் தெளிக்கப்படுகிறது. ஆள்கள் மூலமாக அடிக்கும் மருந்துடன் ஒப்பிடும்போது, 70 சதவீத மருந்து போதுமானது. 30, 40 அடி உயரமுள்ள தென்னை மரத் தோப்புகளில் இந்த விமானத்தை பயன்படுத்தலாம். ஒரு விமானத்தை வடிவமைக்க ரூ.3.5 லட்சம் வரை ஆகும். இந்த விமானத்தை பெரிய விவசாயிகள் வாங்கிப் பயன்படுத்தலாம். சிறிய விவசாயிகள் எங்களை தொடர்பு கொண்டால் ஒரு ஏக்கருக்கு மருந்து தெளிக்க ரூ.500 கட்டணம் வசூலிக்க முடிவு செய்துள்ளோம்” என்றார்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், “தென்னங்கன்று மற்றும் நெல், எள் பயிருக்கு மருந்து அடிக்க ஆள்கள் கிடைப்பது குறைவாக உள்ளது. அப்படியே ஆள்களை வைத்து மருந்து அடித்தாலும் பல மணி நேரம் ஆகிறது. ஆனால், தற்போது இந்த குட்டி விமானம் மூலமாக ஓர் ஏக்கர் பரப்பளவு நெல் பயிருக்கு 5 நிமிடங்களில் மருந்து அடித்து முடிக்கப்படுகிறது. தென்னை மரங்களுக்கு மருந்து அடிப்பதற்கு உதவும். குட்டி விமானம் சிறு குறு விவசாயிகள் ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் விலைக்கு வாங்க முடியாது. எனவே வாடகைக்கு குட்டி விமானம் கிடைத்தால் நல்லது. இது போன்ற புதுமையான வேளாண் கருவிகளுக்கு தமிழக அரசு மானியம் வழங்கி விவசாயிகளை ஊக்குவிக்க வேண்டும்” என்றனர்.

===ஜகுபர் அலி===


 

;